ரியானாவை ஆண்டு வரும் பா.ஜ.க. அரசு, அம்மாநிலத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை இந்தக் கல்வியாண்டு முதல் இருபது மடங்கு அதிகரித்து நிர்ணயித்திருக்கிறது.

கடந்த கல்வியாண்டு வரை ரூ.53,000/− ஆக இருந்த கல்விக் கட்டணத்தை, இந்தக் கல்வியாண்டு தொடங்கி முதலாம் ஆண்டு எம்.பி.,பி.எஸ். படிப்புக்கு ரூ.80,000/−, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.88,000/−, மூன்றாம் ஆண்டுக்கு ரூ.96,000/− நான்காம் மற்றும் இறுதி ஆண்டுக்கு ரூ.1,06,480/− என நிர்ணயம் செய்திருப்பதோடு, அம்மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்விக் கட்டணத்தையும் உள்ளிட்டு 10 இலட்சம் ரூபாய் மதிப்பிற்கு உத்தரவாதப் பத்திரம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவாத தொகையையும் சேர்த்தால், எம்.பி.,பி.எஸ்., படிப்பிற்கான மொத்தக் கல்விக் கட்டணம் நாற்பது இலட்சம் ரூபாயைத் தொடுகிறது.

படிக்க :
♦ மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?
♦ INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?

மாணவர்கள் இந்த உத்தரவாதப் பத்திரத்தை அளிப்பதற்கு மாநில அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, நான்கு ஆண்டுக்கான மொத்தக் கல்விக் கட்டணத்தில், ரூ.3,70,480/− ரூபாயை மாணவர்கள் சொந்தமாகச் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை மாநில அரசு 6 சதவீத வட்டியில் கடனாக வழங்கும். கடனுக்கான வட்டியையும் சேர்த்தால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.,பி.எஸ். படிப்பை முடிப்பதற்கான மொத்தச் செலவு 55 இலட்ச ரூபாயைத் தொடுகிறது.

எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த மாணவர்களுக்கு அரசு வேலை கிடைத்தால், அரசே தவணைத் தொகையைச் செலுத்தும் என்றும், இல்லாவிடில் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் அரசு வழங்கிய கடன் தொகையை மாணவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எம்.பி.,பி.எஸ்., படிப்பை முடிக்கும் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கப் போவதில்லை என்பதால், மாணவர்கள் தமது சொந்த வருமானத்திலிருந்துதான் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.

அரியானாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் எண்ணூறு இடங்கள்தான் உள்ளன. தமிழகத்திலோ 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,400 இடங்கள் உள்ளன. அவற்றுள் மூன்று கல்லூரிகளைத் தவிர்த்து, மற்றைய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.,பி.எஸ்., படிப்பிற்கு ஆண்டுக் கல்விக் கட்டணம் (Tution fees) ரூ.4,000/−; கல்வி தொடர்பான மற்ற கட்டணங்களையும் சேர்த்தால் ஆண்டுக் கட்டணம் ரூ.13,610/−தான். இதன்படி பார்த்தால், அரியானா மாநில பா.ஜ.க., அரசு எம்.பி.,பி.எஸ்., படிப்பிற்கான ஆண்டுக் கட்டணத்தை ரூ.10 இலட்ச ரூபாயாக அதிகரித்திருப்பது வெறும் கட்டணக் கொள்ளை மட்டுமல்ல. கட்டண உயர்வு என்ற போர்வையால் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தனியார்மயப்படுத்தியிருக்கிறது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நீட் தேர்வை எதிர்த்துப் பேசிய பங்கேற்பாளர், தமிழகத்தில், மாவட்டத்துக்கொன்று என்ற வீதத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருவதையும் வட இந்திய மாநிலங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான், குறிப்பாக குஜராத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருப்பதையும் ஒப்பிட்டு வாதாடினார்.

அதற்குப் பதில் அளித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர், அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதைத் தண்டச் செலவு எனப் பொருள்படும்படி, குஜராத் அரசு கடனில்லாத நிதி மிகை மாநிலமாக இருப்பதையும், தமிழக அரசின் கடன் அதிகரித்திருப்பதையும் ஒப்பிட்டார்.

அரசு ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை நாம் அறிவோம். ஆனால், சங்கிகளோ அரசு ஒடுக்குமுறை கருவியாக இருந்தால் மட்டும் போதாது; அது இலாபம் ஈட்டும் இயந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள். அதனால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தனியாருக்கு இணையான கட்டணக் கொள்ளைக் கூடாரமாக மாற்றியமைத்திருக்கிறது, அரியானா மாநில பா.ஜ.க. அரசு.

கீரன்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க