எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவக் கல்வி மேற்படிப்புக்கான நீட் -பி.ஜி. தேர்வில் இருந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் 11 கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து, அவற்றுக்கு மட்டும் தனியாக INI – CET (Institute of National Importance – Combined Entrance Test ) எனும் சிறப்பு நுழைவுத்தேர்வை அறிவித்துள்ளது மத்திய அரசு.
கடந்த நவம்பர் 16 அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் 11 மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு ”தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற அடிப்படையில் தனியான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், நாக்பூர், பாட்னா, ரிஷிகேஷ், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், பாண்டிச்சேரி ஜிப்மர், சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.எர். மருத்துவக் கல்லூரி, பெங்களூரு நிம்ஹான்ஸ் ஆகிய மருத்துவக் கல்லூரிகள் தான் இந்த “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்”
படிக்க :
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?
இந்தக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கு போட்டியிடும் மாணவர்கள் கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்த நீட்-பி.ஜி தேர்வுகளை இனி எழுத வேண்டியதில்லை. இந்த “தனிச்சிறப்புக்” கல்லூரிகளுக்கு என ஏற்பாடு செய்யப்படும் இந்த பொதுவான நுழைவுத்தேர்வை எழுதி அதில் தேறினால்தான் இக்கல்லூரிகளில் சேர அனுமதிக்கப்படுவர்.
இந்தப் புதிய நுழைவுத் தேர்வுமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகும். இதற்கு முன்னால், நீட் – பி.ஜி தேர்வு மட்டும் எழுதினால் போதும். இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இந்தக் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேர முடியும். ஆனால் தற்போது இந்த 11 கல்லூரிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் “இனி-செட்” தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய சூழலில், ஒருவேளை இக்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காத பட்சத்தில் பிற மருத்துவக் கல்லூரிகளில் சேர, நீட் – பிஜியும் எழுதவேண்டும். இது மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு பெரும் மன சுமையாக அமையும்.
மருத்துவக் கல்வியில் தமிழகம் பின்பற்றி வந்த இட ஒதுக்கீடுகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் சாதித்த மத்திய அரசு, தற்போது இந்த “தனிச்சிறப்பான கல்லூரிகளில்” எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களுக்கு ”இனி-செட்” நுழைவுத் தேர்வில் உள் ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய தேர்வுமுறை குறித்துப் பேசியுள்ள சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், மத்திய அரசு கூறும் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த” கல்லூரிகளின் தர நிர்ணயம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மருத்துவக் கொள்கை-2017-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தியா முழுவதும் மொத்தம் 11 கல்லூரிகள்தான் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அத்தகைய கல்லூரிகளில் பெரும்பாலானவை மாநில அரசுகளின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரிகள்தான். அப்படியிருக்கையில் எந்த அடிப்படையைக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது? எந்த அடிப்படையில் மாநில அரசின் கீழ் உள்ள சிறந்த கல்லூரிகளுக்கு அந்த அந்தஸ்த்து வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மருத்துவர் இரவீந்திரநாத் .
தரமான தேர்வுமுறை என்று முட்டுக்கொடுக்கப்பட்ட நீட் தேர்வுமுறையிலிருந்து “தனிச்சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு” விலக்கு அளிக்க முடியும்போது, நீட் தேர்விலிருந்து தமிழகம் உள்ளிட்ட குறிப்பான மாநில அரசுகள் கேட்ட நீட் தேர்வு விலக்கை வழங்க முடியாதா ?
இவர்கள் குறிப்பிடும் “தனிச்சிறப்பான” மருத்துவமனைகளும், மருத்துவக் கல்லூரிகளும் செய்திருக்கும் சாதனைகளை விட மருத்துவத்துறை ஆய்விலும், சிறப்பான மருத்துவம் வழங்குவதிலும் சாதனை படைத்த தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய இச்சமயத்தில், எடப்பாடியோ “இனி செட்” தேர்வில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்குமாறு மோடியிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார்.
நீட் தேர்வு முறைக்கு “தரமானது”, “தனிச்சிறப்பானது” என இதுவரை முட்டுக் கொடுத்த கூட்டம் இப்போது பதிலளிக்கப் போவதில்லை. நீட் தேர்வு மாநில உரிமைகளையும், போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டையும் பறிப்பதற்கானதுதான் என்பது அந்தக் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும்.
நயவஞ்சகமாக நம் கல்வி உரிமைகளை பறிக்கும் மத்திய மோடி மற்றும் தமிழக அடிமை எடப்பாடி அரசுகளுக்கு எதிராக ”நீட்டையும் புதிய கல்விக் கொள்கையையும் ஒழித்துக்கட்டு” எனும் குரல் வீதிகளில் ஒலிக்கும் போதுதான் இக்கும்பலின் கொட்டம் அடங்கும் !
சரண்
செய்தி ஆதாரம் : தினகரன்
மக்களை நிம்மதியாக வாழ விடுங்க…