மோடியின் 3.0 ஆட்சியின் முதல் 100 நாள் சாதனைகளாக ரூ.15 லட்சம் கோடிக்கான உள்கட்டுமானத் திட்டங்கள், 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள், வயது முதிர்ந்தோருக்கான ஆயுள் காப்பீடு போன்றவற்றை பட்டியலிட்டு “விக்சித் பாரதத்திற்கான பாதையை வகுத்தல்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறார், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என 100 நாள் ஆட்சியை சாதனை எனக் கொக்கரிக்கிறது பாசிசக் கும்பல்.

ஆனால், மோடியின் முதல் 100 நாள் ஆட்சி “யூ-டர்ன்” (U-turn) அடிக்கிறது என முதலாளித்துவ ஊடகங்களே பாசிசக் கும்பலை எள்ளி நகையாடுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் ‘உடைக்க முடியாத’ பிம்பமாக சித்தரிக்கப்பட்ட மோடி பிம்பம் சரியத் தொடங்கியிருப்பதாகவும், மோடியின் 3.0 ஆட்சி திசையற்றுப் பயணிப்பதாகவும் முதலாளித்துவப் பத்திரிகைகள் பலவாறு கருத்து தெரிவிக்கின்றன.

உண்மையில், கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் என இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமான சட்டத்திட்டங்களை தடாலடியாக அமல்படுத்தி வந்த பாசிசக் கும்பலுக்கு தற்போது மோடியின் 3.0 ஆட்சியில் சில திட்டங்களை பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிப்பெறுவோம் என்று கூச்சலிட்டு வந்த பாசிசக் கும்பலால் தனிப்பெரும்பான்மையை கூட பெறமுடியாத அளவிற்கு மக்கள் அத்தேர்தலில் அடி கொடுத்தனர். தனது மக்கள் அடித்தளம் சரிந்துவருவதை உணர்ந்துக்கொண்ட பாசிசக் கும்பல் அதனை சமாளித்துக்கொள்ள அடுத்தடுத்து சில பின்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சான்றாக, புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று இறுமாந்திருந்து அதனை செய்துமுடித்த பா.ஜ.க., தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்துடன் சில சலுகைகளை உள்ளடக்கி ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது; ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கொள்ளைப்புற வழியாக அரசுத் துறைகளில் நுழைக்கின்ற “லேட்டரல் என்ட்ரி” (Lateral entry) அறிவிப்பை அறிவித்த அடுத்த நாளிலேயே திரும்பப்பெற்றது; இஸ்லாமிய மக்களின் சொத்துக்களைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்ட வஃக்ப் வாரிய திருத்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது; ஒன்றிய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து மோடி பேசியது; சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவளித்திருப்பது; சித்தாந்த ரீதியாக இடஒதுக்கீட்டை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு “கிரிமீலேயர் முறையை” அமல்படுத்தமாட்டோம் என்று கூறியிருப்பது; யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒளிபரப்பு சேவை ஒழுங்குமுறை வரைவு மசோதாவை எதிர்ப்பினால் திரும்பப்பெற்றது என அடுத்தடுத்து பல விடயங்களில் பாசிசக் கும்பல் பின்வாங்கிக்கொண்டும் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டும் இருக்கிறது.

மோடி அரசின் இத்தகைய பின்வாங்கல்களைத்தான் யூ-டர்ன் என முதலாளித்துவ ஊடகங்களும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கின்றன. கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதும் வலிமையான எதிர்க்கட்சி இருப்பதும்தான் மோடியின் இத்தகைய பின்வாங்கல்களுக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும் சில முதலாளிய ஊடகங்களும் முன்வைக்கின்றனர். ஆனால், பாசிசக் கும்பலின் இந்த பின்வாங்கல்களுக்கு பாசிஸ்டுகளின் வாழ்வையும் இருப்பையும் உத்திரவாதப்படுத்துகிற, பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பாக உள்ள மக்கள் அடித்தளம் சரிந்துவருவதே முக்கிய காரணம்.

அதேபோல், பாசிசக் கும்பல் ஆளும் மாநிலங்களிலும், தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களிலும் காவி – கார்ப்பரேட் திட்டங்களை மூர்க்கப்படுத்துகிறது.

குறிப்பாக, மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்கள் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் போன்றவை பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளின. இதன்விளைவாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசக் கும்பலுக்கு பலத்த அடி விழுந்தது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறை அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டாலும், மோடி கும்பல் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே நீட் தேர்வு மோசடிகள் அம்பலமாகி, அதற்கு எதிராக வட மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. தமிழ்நாட்டில் இருந்த நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் நாடுமுழுவதும் பற்றி பரவத் தொடங்கியது. அதற்கடுத்து பாசிசக் கும்பல் கொண்டுவந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நடந்த வழக்குரைஞர்கள் போராட்டம், லடாக் மக்களின் மாநில உரிமைக்கான போராட்டம், பில் பழங்குடி மக்களின் பில் பிரதேச தனிமாநிலக் கோரிக்கை போராட்டம், மணிப்பூர் காடுகளில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்க்கும் குக்கி பழங்குடி மக்களின் ஆயுதந்தாங்கிய போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களும் பாசிசக் கும்பலை பின்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தது.

மோடி கும்பல் மூன்றாவது முறை ஆட்சி அமைப்பதற்கு முன்னரே, நீட் மோசடிகளுக்கு எதிராக வெடித்த மாணவர்கள் போராட்டம்

ஆகவே, பா.ஜ.க-விற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வும் மக்கள் போராட்டங்களும்தான் பாசிசக் கும்பலின் பின்வாங்கல்களுக்கு காரணமாக உள்ளது. ஆனால், இந்தியா கூட்டணி தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தற்போதுவரை கூட்டணி சார்பாக பா.ஜ.க-விற்கு எதிரான பொதுக் கொள்கையையும் திட்டத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சிகள், மோடியின் பின்வாங்கல்களுக்கு தாங்கள்தான் காரணம் என தம்பட்டம் அடிக்கின்றன. மேலும், பாசிசக் கும்பலின் மக்கள் அடித்தளத்தை சரிப்பதற்கு சிறு துரும்பையும் நகர்த்தாத காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், இந்தத் தற்காலிக பின்வாங்கலை பாசிச அபாயம் நீங்கிவிட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

பாசிசக் கும்பல் வேறுவழியின்றி சில பின்வாங்கும் நடவடிக்கைகளை கொண்ட தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டாலும் அது தற்காலிகமானதும் நயவஞ்சகமானதுமாகும். ஏனெனில், ஒருபுறம் பின்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மற்றொருபுறத்தில் இந்துராஷ்டிரத்தின் தொடக்கமாக, ஓர் கும்பலாட்சியை நிறுவதற்கான ஆயத்த வேலைகளை பாசிசக் கும்பல் செய்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, இந்தியாவில் காவி-போலீசு கும்பலாட்சியை நிறுவும் வகையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வழக்குரைஞர்களின் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தியுள்ளது. மேலும், 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டங்களாக சுருக்கி, தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளையும் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகள்-காண்ட்ராக்ட் முதலாளிகள்-போலீசு கும்பலாட்சியின் கீழ் தொழிலாளர்களை தங்களது தொழிற்சாலைகளிலேயே கொத்தடிமைகளாக்கத் துடிக்கிறது.

அதேபோல், பாசிசக் கும்பல் ஆளும் மாநிலங்களிலும், தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களிலும் காவி – கார்ப்பரேட் திட்டங்களை மூர்க்கப்படுத்துகிறது. பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் உச்சநீதிமன்றத் தடைக்குப் பிறகும் ‘ஆக்கிரமிப்பு’ என்று இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது; வங்கதேச எழுச்சியின்போது, அங்கு இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டு அசாமிலும் திரிபுராவிலும் இஸ்லாமிய சிறுபான்மையினர் மீது திட்டமிட்டத் தாக்குதலை அரங்கேற்றியது; உத்தரப்பிரதேசத்தில் கன்வர் யாத்திரையை முன்னிட்டு கடைகளின் பெயர்ப்பலகையில் உரிமையாளர்-பணியாளர்கள் பெயர் எழுதுவதைக் கட்டாயமாக்கியது; உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு சங்கிகளின் வெறுப்பு பிரச்சாரமான “தூக் (துப்புதல்) ஜிஹாத்” என்பதை அடிப்படையாக வைத்து புது வழிக்காட்டுதல்களை பிறப்பித்துள்ளது; ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இஸ்லாமியர்களை சுட்டுக் கொல்வது; தாழ்த்தப்பட்ட பெண்களை ஆதிக்கச் சாதி இந்துவெறியர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்வது அதிகரிப்பது என இந்துத்துவத் திட்டங்களும் அட்டூழியங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அதேபோல், 2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பதே கல்வியிலும் விவசாயத்திலும் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான திட்டமாகவே உள்ளது. மேலும், நிதிநிலை அறிக்கையில் பல்கலைக்கழக மானியக் குழு, அங்கன்வாடி, சுகாதாரம், எரிவாயு மானியம், உர மானியம், பயிர் வளார்ப்பு என உழைக்கும் மக்களுக்கான நிதியை வெட்டிச் சுருக்கியுள்ள ஒன்றிய அரசு, ரூ.10,000 கோடி மக்கள் வரிப்பணத்தை வேலைவாய்ப்பை உருவாக்குவது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. சொந்த நாட்டு மக்களை ஜி.எஸ்.டி. மூலம் சுரண்டுகிற மோடி அரசு வெளிநாட்டுக் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 40 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கின்ற வருமானத்திற்கு விதிக்கக்கூடிய ஏஞ்சல் வரி 31 சதவிகிதத்தை நீக்கியிருக்கிறது; மருத்துவ கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காகவே, 70 வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்கள் ஆறு கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தலா ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கார்ப்பரேட் சேவையையே தங்களது நூறுநாள் ‘சாதனை’களாக பீற்றிக் கொள்கிறது பாசிசக் கும்பல்.

இன்னொருபுறத்தில், அடுத்தடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல்களில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. எனவே, இதனை பாசிச அபாயம் நீங்கிவிட்டது என்பதுபோல எதிர்க்கட்சிகள் மக்களிடம் சித்தரித்து பாசிச அபாயத்திலிருந்து மக்களைத் திசைதிருப்புவதானது நிராயுதபாணியான மக்களை பாசிசத்திற்கு பலியிடுவதிலேயே சென்று முடியும். அது மீண்டும் பாசிஸ்டுகள் வெற்றி பெறுவதற்கே வழிவகுக்கும்.

ஆகையால், பாசிசக் கும்பலின் பின்வாங்கும் நடவடிக்கைகளை கொண்ட தற்காப்பு நிலையை எதார்த்தமாக பரிசீலித்து அதற்கான மாற்று திட்டங்களை முன்வைப்பதே பாசிசத்தை நேரடியாக எதிர்ப்பதற்கு வழிவகுக்கும். குறிப்பாக, உயர் நடுத்தர வர்க்கத்தினர், பழங்குடியின மக்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், பாசிஸ்டுகளின் அடித்தளமாக இருந்துவந்த ஒரு பிரிவினர் என இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் பாசிசக் கும்பலுக்கு எதிரான எதிர்ப்பு மேலோங்கியுள்ளது. இதனை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தற்போது தற்காப்பு நிலையிலுள்ள பாசிசக் கும்பலை பின்வாங்கி ஓடச் செய்ய முடியும். அவ்வாறு மக்களை ஒன்றிணைப்பதற்கான திட்டத்தை முன்வைத்து செயல்படுவதை நோக்கி இந்தியாவிலுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் பாசிச எதிர்ப்பாளர்களும் முன்வருவதே தற்போதைய எதார்த்தத் தேவையாக உள்ளது.


அப்பு

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க