நீட் தோல்வியால் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்தால் அது தற்கொலைகளை ஊக்குவிக்குமாம். இந்த  “அற்புதமான” சமூக விஞ்ஞானக் கண்டுபிடிப்பை தெரிவித்திருப்பது வேறு யாரும் அல்ல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-09-2020) அன்று நீட் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 12-09-2020 அன்று மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா, தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் ஆகிய மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முந்தைய வாரத்தில் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் எனும் மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !
♦ நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

இதில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு முயற்சித்திருக்கிறார். மாணவர்கள் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்தனர்.  தேர்வு நெருங்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தோல்வியைத் தழுவ நேரிட்டால், பணம் கட்டி நீட் பயிற்சி பெற்றது அனைத்தும் வீணாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த மூன்று மாணவர்களும் தற்கொலை செய்திருக்கக்கூடும்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (14.09.2020) அன்று வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் என்பவர் நீட் தற்கொலைகள் தொடர்பாக முறையீட்டு மனு ஒன்றை நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தாக்கல் செய்தார். இந்த மனுவில், நீட் தற்கொலைகள் குறித்து உயர்நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று முறையிட்டிருக்கிறார்.

இந்த வழிகாட்டுதல்களை நீதிபதி என். கிருபாகரன் தலைமையிலான அமர்வு மாணவி கிருத்திகா கடந்த 2018-ம் ஆண்டு நீட் தொடர்பாக தொடுத்த வழக்கில் உத்தரவிட்டிருந்தது. அதில் நீட் தேர்வு காரணமாக நடைபெறும் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு, தேர்வுக்கு முன்னரே மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிப்பது, பயத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் அளிப்பது போன்றவற்றை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது உயர்நீதிமன்றம்.

தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் ஆதித்யா, ஜோதிஸ்ரீ துர்கா, மோதிலால்

அந்த உத்தரவை சுட்டிக் காட்டி, தமிழக அரசு அந்த வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றியிருந்தால், கடந்த வாரத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நால்வரையும் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அதன் காரணமாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது முறையீட்டு மனுவில் வழக்கறிஞர் சூரியபிரகாஷ் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர், இந்த மனுவை அங்கீகரித்து தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் இது குறித்துக் கருத்து கூறிய நீதிபதிகள், “நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்” என்று தெரிவித்துள்ளனர்.

எனில், கடந்த சனிக்கிழமை 3 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டது, குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பும், இழப்பீடும் தரும் அரசாங்கத்தின் ‘ஊக்க’ நடவடிக்கைக்கு ஆசைப்பட்டு தானா? அல்லது பொதுவான தேர்வு குறித்த அச்சத்தாலா? அல்லது நீட் தேர்வுப் பயிற்சிக்காக தமது தாய் தந்தையர் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை பயிற்சி மையங்களுக்கு கொட்டி அழுததற்கு பலன் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தினாலா ?

பொதுவான தேர்வு குறித்த அச்சம் என்றால், இந்த மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்விலேயே அந்த முடிவை எடுத்திருக்க முடியும். பொதுவான தேர்வு குறித்த அச்சம் கொண்டவர்களும் கூட தேர்வில் தோல்வியுறும் சமயத்தில்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

படிக்க :
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

கல்வித் துறையில் தமிழகத்தின் முன்னேறிய நிலைமை, சாதாரண நடுத்தரவர்க்கப் பின்னணி கொண்டவர்களும் மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் இங்கு மாணவர்கள் மருத்துவராகும் கனவு காணமுடிகிறது. ஏற்கெனவே இருந்த 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முறை சாதாரண அரசுப் பள்ளி மாணவர்களையும் கூட மருத்துவர்களாக்கி அழகு பார்த்தது.

இந்திய அளவில் தமிழகம்தான் மருத்துவத்திற்குப் பெயர் பெற்ற மாநிலமாக இருக்கிறது. சென்னை இந்தியாவின் மருத்துவத் தலைநகராக விளங்குகிறது. உலகின் தலைசிறந்த மருத்துவ வல்லுனர்களை உருவாக்கியிருக்கிறது தமிழகம். காரணம் தமிழகத்தில் இருக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், சாதாரண மக்களின் பிள்ளைகளும் எவ்வித நுழைவுத் தேர்வும் இன்றி, பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினாலேயே மருத்துவராக முடியும் என்ற நிலைதான்.

ஆனால் நீட் தேர்வுமுறை அடிமை எடப்பாடி அரசின் உதவியோடு தமிழகத்தில் புகுத்தப்பட்ட பின்னர், நீட் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் ஆண்டுக்கு 1.5 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களைத் ‘தயாரிக்கும்’ தனியார் பயிற்சிக்கூடங்களுக்கு படியளக்கும் ‘திறன்’ கொண்டோரின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவராவது குறித்து கனவு கூட காண முடியும்.

2019-ம் வருட நீட் பலி : மாணவி ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஸ்யா.

தமிழகத்தில் தமது பிள்ளைகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க கடனை வாங்கியேனும் நீட் பயிற்சி மையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடுத்தரவர்க்கத்தினரின் பிள்ளைகளின் மனநிலை தேர்வுக்கு முன்னர் என்னவாக இருக்கும் ? அதுவும் முதல் முறை தோல்வியடைந்து இரண்டாவது முறையோ, மூன்றாவது முறையோ முயற்சிக்கும் மாணவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?

தமது தாய் தந்தையர் தம் கண் எதிரே அரும்பாடுபட்டு சிறுகச் சிறுக சேமித்தும், கடன் வாங்கியும் கட்டிய பயிற்சிக் கட்டணத்தின் பிரம்மாண்டமும், அதன் மீது தமக்கிருக்கும் தார்மீகக் கடமையும் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். கொரோனா சூழலில் குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி அவர்களது மனநிலையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்படிப்பட்ட தாக்கத்தின் விளைவாக நிகழ்ந்த (தற்)கொலைகளுக்கு அரசாங்கத்தின் இழப்பீடு வழங்கப்படுவது நீதிபதிகளுக்கு வெறும் ஊக்குவிப்பாகத் தெரிகிறது. எனில், இழப்பீடு எனும் பெயரில் அரசு கொடுக்கும் பிச்சைக்காசைப் பெறுவதற்குத்தான் மருத்துவராகும் துடிப்பு கொண்ட அந்த இளம் குருத்துக்கள் தங்களை மாய்த்துக் கொண்டனரா ?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் படத்தில் ‘மெரிட்டில்’ வந்த தனது மகன் அர்ஜுனுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவக் கல்வி வாய்ப்பு ’கோட்டா’ சீட் காரணமாக குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குச் சென்றதும் தனது மகனுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க பணம் ஏற்பாடு செய்ய, பணியில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொள்வார் மனோரமா.

அந்தப் படத்தில் மனோரமாவின் மரணத்தின் மூலமாக ‘கோட்டா’ சீட்டுகளின் மீதான (அதனால் பயன்பெற்ற) பொது ஜனங்களின் வெறுப்பை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கச்சிதமாக விதைத்தார் சங்கர். ஒரு ஏழை சத்துணவுக்கூடப் பணியாளர் தனது பிள்ளையைப் படிக்க வைக்க பணம் வேண்டி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் காட்சிதான் படம் பார்த்த அனைவரின் மனதிலும் சங்கரின் மனுதர்மக் கருத்துக்களை எடுத்துச் சென்ற வாகனம்.

அனிதா முதல் ஒவ்வொரு ஆண்டும் நீட் தொடர்பாக தமிழகத்தில் நிகழும் தற்கொலைகள் அனைத்துமே, ‘நீட்’ எனும் மனுநீதிக்கு எதிரான கருத்தியலை தமிழக மக்களின் மனங்களுக்குள் எடுத்துச் செல்லும் வாகனமாக இருக்கிறது.  இது சங்கரின் ‘மாய உலகக்’ காட்சிகளில் உருவாக்கப்பட்டதல்ல. தமிழகத்தின் கையாலாகா அவல நிலையால் உண்டான எதார்த்தம்.

இந்த (தற்)கொலைகளின் தாக்கம் நீட் எனும் மனுநீதிக்கு எதிராக எந்தக் கருத்தியலையும் மக்கள் மனதில் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீட் மரணங்களை இழப்பீட்டிற்காக நடக்கும் தற்கொலைகளாக சித்தரிக்கிறார்கள் நீதியரசர்கள் ! அதனால்தான் இச்செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது இந்து தமிழ் திசை !

நந்தன்

செய்தி ஆதாரம் :
இந்து தமிழ் திசை நாளிதழ் (15-09-2020)

4 மறுமொழிகள்

  1. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதற்காக அந்தத் தேர்வுகளை ரத்து செய்ய முடியுமா? இந்தக் கட்டுரை ஆசிரியர் மாதிரியானவர்கள் எத்தனை கட்டுரைகளை எழுதி கும்மி அடித்தாலும் நீட் தேர்வு ரத்து ஆவதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு தவிர வேறு யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. பக்கத்தில் இருக்கும் கேரள கம்யூனிஸ்டுகள் கூட இந்த தேர்வை வரவேற்கிறார்கள். சமச்சீர் கல்வி என்னும் குப்பையைக் கொண்டு வந்து தமிழகத்தின் கல்வித்தரத்தை படுகுழிக்குள் தள்ளியவர்களும் அந்தக் கல்வி திட்டத்திற்கு முட்டுக்கொடுத்து கட்டுரைகளை எழுதிய வினவு விளக்கெண்ணெய்களும் தான் இந்த மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த நீட்தேர்வு தவறானது என வைத்துக்கொண்டாலும் அதைக் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அப்போது அந்தக் கூட்டணியில் யார் இருந்துகொண்டு வேடிக்கை பார்த்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுக அரசை குறை சொல்வதில் இருந்தே இந்தக் கட்டுரை ஆசிரியரின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதிமுக அரசு மாநில நிர்வாகத்தை நடத்த கூடியவர்கள் என்னும் முறையில் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்கிறது. இப்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எடப்பாடி அரசு பாராட்டத்தக்கது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையிலும் 12 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசிடமிருந்து அனுமதியும் நிதியும் வாங்கியிருக்கிறார்கள். அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடியும். கட்டுரையை எழுதியவர் நாமக்கல் ராசிபுரம் தனியார் பள்ளிகளிடம் இருந்து கட்டிங் வாங்கி இருப்பார் போல. வாங்கிய கூலிக்கு நன்றாகவே பொங்கி இருக்கிறார்.

  2. “ஏற்கெனவே இருந்த 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முறை சாதாரண அரசுப் பள்ளி மாணவர்களையும் கூட மருத்துவர்களாக்கி அழகு பார்த்தது.”

    எத்தனை அரசு பள்ளி மாணவர்களை மருத்துவர்கள் ஆக்கி அழகு பார்த்தது என புள்ளிவிவரம் கொடுக்க முடியுமா? இந்தக் கட்டுரை ஆசிரியர் இந்த மாதிரி எல்லாம் பித்தலாட்ட மாக எழுதக்கூடாது.

  3. “சென்னை இந்தியாவின் மருத்துவத் தலைநகராக விளங்குகிறது. உலகின் தலைசிறந்த மருத்துவ வல்லுனர்களை உருவாக்கியிருக்கிறது தமிழகம். காரணம் தமிழகத்தில் இருக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், சாதாரண மக்களின் பிள்ளைகளும் எவ்வித நுழைவுத் தேர்வும் இன்றி, பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினாலேயே மருத்துவராக முடியும் என்ற நிலைதான்.”

    இது இன்னொரு பித்தலாட்டம் ஆன கருத்து. 2006 வரை தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இருந்தது. அதனடிப்படையில் சேர்ந்த மாணவர்கள்தான் தலைசிறந்த மருத்துவர்களாக பொறியாளர்களாக உருவெடுத்தார்கள். மேலும் சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகராக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சியிலேயே அதற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது.

  4. வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதாக பெருமையடித்த நபர்கள், தற்போது மாணவர்களின் தற்கொலை விவகாரத்தை அதே உயர்நீதிமன்றம் கொச்சைப் படுத்தி உள்ளதர்க்கு கருத்து வெளியிடுவார்களா??? இந்த நீதிபதிகள் கூறுவது போல் நிவாரணமோ இழப்பீடோ அல்ல மாறாக நஷ்டயீடு வழங்கவேண்டும் இந்த தரகு முதலாளிகளாக திகழும் எடப்பாடி அரசு, வாழ்க்கை வாழ்வதற்கும் வாழ்வை மேம்படுத்தவும் கல்வி என்பதெல்லாம் போய்,வாழவேண்டியவர்கள் வாழாமலே வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளும் அளவிலான கல்வி தேர்வுமுறைத் திட்ட வியாபாரங்களுக்கு மாநில சுயநிர்ணய உரிமைகளை அடகு வைத்து,மாணவர்களை தற்கொலைக்கு நிர்ப்பந்தித்துள்ள ஆட்சி முறையின் அவலங்களை என்னென்று முறையீடு செய்வது???இவர்களை யார் தண்டிப்பது???பாசிசப் பயிற்சி மையங்களின் சூறையாடலுக்கு முடிவு எப்போது???ஆக திட்டமிட்டு நடத்தப்பட்ட நீட் படுகொலைக்கு நிவாரணமோ இழப்பீடோ அல்ல மாறாக நட்டஈடு/நஷ்டயீடு பெறுவதோடு நில்லாமல் கல்வி வியாபார சூதாட்டத்திர்க்கு முடிவுகட்டும் வகையில் பிஞ்சுகளின் உயர் தியாகங்களை ஈடுகட்டிக் கொள்ளவேண்டும்…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க