ண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் உபகரணங்கள் வாங்கியது முதல் ஆசிரியர் பணி நியமனம் மற்றும் மகளுக்கு கவுரவ விரிவுரையாளர் பணி நியமனம் வழங்கியதில் அதிகார துஷ்பிரயோகம் என ஊழல் புகாரில் சிக்கிய அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து “மக்கள் நீதி மய்யத்தின்” தலைவர் கமல்ஹாசன் கடந்த சனிக்கிழமை (05-12-2020) காணொலி  ஒன்றை வெளியிட்டார்.

சுமார் 280 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சூரப்பாவை விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டதற்குத் தான் இந்தக் கண்டனக் காணொலியை வெளியிட்டுள்ளார்.

படிக்க :
♦ கமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்
♦ கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் தமிழ் ஃபேஸ்புக் !

இந்தக் காணொலியில், ”சூரப்பாவின் செயல்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் இருந்தது” என்றும் அவர் நேர்மையாக இருந்ததாலும் ஊழலுக்கு ஒத்துழைக்காததாலும்தான் மாநில அரசால் பழிவாங்கப்பட்டிருப்பதாகவும் கூறி பலரையும் ’அதிர்ச்சிக்கு’ உள்ளாக்கியிருக்கிறார்.

அண்ணா பல்கலைக் கழகம் சூரப்பா வருவதற்கு முன்பே உலகத்தரமான பல்கலைக்கழகமாகத்தான் இருந்தது. எனில் அண்ணா பல்கலைக்கழகத்தை சூரப்பா வந்துதான் உலகத்தரமானதாக மாற்றியதாக எந்த அடிப்படையில் குறிப்பிடுகிறார் கமல்ஹாசன்?

சமீபத்தில் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், “மாநில அரசின் நிதியில்லாமலேயே என்னால் 5 ஆண்டுகளில் 1,500 கோடியை திரட்ட முடியும்” என்று எழுதியிருக்கிறார்.

ஒரு பல்கலைக்கழகம் ஆண்டுக்கு 500 கோடி நிதியைத் திரட்டுவது என்பது எப்படி சாத்தியம்? பல்கலைக்கழகத்தில் உட்கார்ந்து ‘நோட்டு’ அச்சடிப்பாரா சூரப்பா ? மாணவர்களிடமிருந்து அடிக்கும் கல்விக் கொள்ளையின் மூலம்தான் அது சாத்தியம். எனில் கல்விக் கொள்ளைக்கு ஈடுகொடுக்கவல்ல வசதி படைத்த மாணவர்கள்தான் இனி அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்க முடியும். அண்ணா பல்கலைப் பாடத்திட்டத்தில் சாதிய படிநிலையைப் போற்றும் பகவத் கீதையை உள்ளே நுழைத்த சூரப்பா, வர்க்கப் படிநிலையையும் இதன் மூலம் உள்ளே புகுத்தியிருக்கிறார். இதெல்லாம் சாதாரண நபர்களுக்கே தெரியும் எனும்போது ‘ஆண்டவருக்கு’ தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இதைத்தான் உலகத் தரம் என்கிறார் ஆண்டவர்.

கமல்ஹாசர்களைப் பொறுத்தவரையில் சேரிகளையெல்லாம் சிட்டிக்கு வெளியே ஒதுக்கித் தள்ளிவிட்டு, ”சிங்காரச் சென்னை” என்று பெருமை பீற்றிக் கொண்டதைப் போல ஏழைகளை எல்லாம் உயர்கல்வியிலிருந்து ஒதுக்கித்தள்ளுவது தான் உலகத் தரம்.

அதே காணொலியில், “நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன், நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மையமும் சும்மா இருக்காது” என்று சூரப்பாவுக்காக ‘அறச்சீற்றம்’ கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.

சரி ஜி, வடக்கே ஸ்டான்சுவாமி என்ற நேர்மையாளர் – பழங்குடியின மக்களுக்காக போராடிய 85 வயது முதியவர் – சிறையில் தண்ணீர் குடிக்க ஒரு சிப்பர் வேண்டும் எனக் கேட்டதற்கு 20 நாள் இழுத்தடித்த நீதிமன்றத்தையும் என்.ஐ.ஏ.-வையும் சும்மா விட்டது ஏன்? அங்கு சத்தம் கொடுத்தால் வருமானவரித்துறை சும்மா விடாது என்பது  ‘ஆண்டவருக்கு’ நன்றாகவே தெரியும்.

முக்கியப் பதவியில் இருக்கும் ஒரு நபர் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால் நியாயமாக விசாரணை நடத்த வேண்டும். ஊழல் குறித்துக் குற்றச்சாட்டு வைத்தவர், குற்றச்சாட்டுக்கு ஆளானவர், அந்தக் குற்றத்தோடு தொடர்புடையவர்கள் அனைவரையும் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். இதுதான் எதார்த்தமான முதலாளித்துவ நடைமுறை. ஆனால் ஊழல் பற்றி தகவல் தெரிவித்தவரை பேடி என்று அழைப்பதும், ஜோடிக்கப்பட்ட புகார் என்பதும் என்ன வகை நடைமுறை? இது சங்க பரிவார நடைமுறைதானே !

சூரப்பாவுக்கு ஆதரவான காணொலியை தனது டிவிட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன், #நேர்மை, #திறமை, #அஞ்சாமை என்ற ஹேஷ்டேக்களையும் போட்டிருக்கிறார்.

படிக்க :
♦ அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download
♦ பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பா துணைவேந்தராக வருவதற்கு முன்னரே அவரது யோக்கியதை சந்தி சிரித்தது. இதற்கு முன்னால் பஞ்சாப் ஐ.ஐ.டி-யில் இயக்குனராகப் பணியாற்றிய போது செய்து அம்பலப்பட்ட முறைகேடுகள் அவரது “#நேர்மையையும்”, பிற ஆய்வாளர்களின் ஆய்வைத் திருடி தமது ஆய்வறிக்கையில்  அன்னார் பயன்படுத்திக் கொண்ட விவகாரம் அவரது “#திறமையையும்” பறைசாற்றியது. மாநில அடிமை அரசுக்கு எதிராக சூரப்பா காட்டும் வீரம் –  “#அஞ்சாமை” என்பதெல்லாம், பாஜக எனும் பரமசிவனின் கழுத்தில் அமர்ந்து கொண்டு காவி விசத்தைக் கக்கும் பாம்பின் வீரம்தான்.

“நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்க விரும்புபவர்கள் தங்கள் மவுனம் கலைத்துப் பேச வேண்டும். ‘குரலற்றவர்களின் குரலாக’ நாம்தான் மாற வேண்டும்.” என்று தனது காணொலியின் வாயிலாக நமக்கு அறைகூவுகிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் போற்றும் சூரப்பாவின் ‘யோக்கியதைகளின்’ அடித்தளம், நவீன ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின், ”பார்ப்பானுக்கு ஒரு நீதி – சூத்திரனுக்கு ஒரு நீதி; ஏழைக்கு ஒரு நீதி – பணக்காரனுக்கு ஒரு நீதி” என்பதுதான். இதுதான் சூரப்பாவின் அறம். சூரப்பாவிற்கு கூஜா தூக்கும் கமல்ஹாசனின் அறமும் இதுதான்.

கமலஹாசன் முன்னர் கூறிய “கருப்புக்குள் காவியும் அடங்கும்” என்ற பொன்வாசகத்தின் பொருள் இப்போது புரிந்ததா ?


பால்ராஜ்

4 மறுமொழிகள்

  1. பேராசிரியர் சூரப்பா மிக நேர்மையானவர் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி சொல்கிறார். அவர் மீது எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் கீழ்த்தரமான சிந்தனையால் விளைந்தவை என்றும் ஆட்சியிலிருக்கும் அண்ணா திமுக அரசின் முறையற்ற தலையீட்டுக்கு பணியாமல் பல்கலைக்கழகத்தை நடத்துவதால் தான் ஒரு அனாமதேய கடிதத்தை அடிப்படையாக வைத்து அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பதாக திரு பாலகுருசாமி கூறுகிறார்.

    அண்ணா பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் (குறிப்பாக திமுக ஆட்சியில்) எந்த அளவுக்கு சீரழிய முடியுமா அந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது. துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம், தேர்வு நடத்துவது, தேர்வுத்தாள்களை மதிப்பீடு செய்வது, பிஎச்டி ஆராய்ச்சி என எல்லாவற்றிலும் ஊழல் மற்றும் பித்தலாட்டம். பணம் இருப்பவனுக்கு தான் அங்கே எல்லாம் என ஆன வர்க்க வேறுபாடு வினவு கும்பலின் கண்களை உறுத்தவில்லை போலும். இதை சாக்காக வைத்து தான் சங்கி மனநிலை கொண்ட பேராசிரியர் சூரப்பாவை பாஜக அரசு உள்ளே நுழைத்து இருக்கிறது. இந்தியாவில் பாஜக என்னும் வலதுசாரி சக்தி தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டியோடு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததற்கு அதற்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக முதலிய கட்சிகளின் குடும்ப வாரிசு அரசியல் அராஜகமும் ஊழல் அட்டூழியங்களும் தான் முதல் காரணம். அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் பல்கலைக்கழகம் என சொல்கிறார்கள். நம்பர் ஒன் பல்கலைக்கழகத்தின் லட்சணமே இப்படி இருக்கும்போது மாநில அரசின் கீழ் வரும் மற்ற உயர்கல்வி நிறுவனங்கள் பற்றி என்ன சொல்வது? இங்கே பணம் இல்லாத காரணத்தினால் எத்தனையோ திறமையான நேர்மையான பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்கு போட்டியிடவில்லை. காசு இருப்பவனுக்கும் மந்திரிக்கு மாமன் மச்சான் உறவு முறையில் வருபவனுக்கும் சொந்த ஜாதி காரனுக்கும் தான் எல்லா பதவியும் படிப்பும் என ஆகிவிட்ட சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் சூரப்பாவையும் மட்டுமே குறிவைத்து தாக்குவது உங்கள் கம்யூனிஸ நேர்மையை வெளிக்காட்டுகிறது. திமுக கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது எல்லாம் தமிழக கல்வித் துறையை ஏதாவது ஒரு வகையில் பாழ்படுத்தியிருக்கிறார்கள். இதிலே பாஜகவை பற்றியும் கமலை பற்றியும் விமர்சிப்பதற்கு என்ன யோக்கியதை உங்களுக்கு இருக்கிறது?

  2. அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
    தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  3. ஒருவேளை கமல்தான் பெரியஸ்வாமி என்கிற பெயரிலே வினவில் களமாடிக்கொண்டு இருக்கிறாரோ..! 🤔

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க