பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
கீதாசாரம் எனத் தலைப்பிடப்பட்ட ஒரு சிறு பதாகை வீடுகளிலும் கடைகளிலும் மாட்டப்பட்டிருப்பதை நம்மில் பலர் பார்த்திருக்கக்கூடும். அதிலுள்ள வாசகங்களான, “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது” என்பன போன்றவை தத்துவ சாயலில் அமைந்திருப்பதால், பொதுமக்களை ஈர்த்து, அவர்களுள் பெரும்பாலோர் அதனையே கீதையின் சாரம் எனப் புரிந்து வைத்திருக்கின்றனர்.
விடயம் என்னவென்றால், பகவத் கீதையில் இந்த வாசகங்கள் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று தேடினால், எந்த அத்தியாயத்திலும் எந்த சுலோகத்திலும் அவை காணக் கிடைக்காது. அதாவது, கீதையில் சொல்லாத ஒன்றைத்தான், கீதையைப் படிக்காமலேயே கீதையின் சாரம் என்று மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
இன்னொருபுறத்திலோ, பார்ப்பனக் கும்பல் திட்டமிட்டே கீதையை இந்து மதத் தத்துவ போதனையாகப் பாமர இந்துக்களின் மூளையில் திணித்திருக்கிறது. பகவத் கீதையின் இத்தகுதியை அம்பேத்கர் தொடங்கி கி.வீரமணி உள்ளிட்டுப் பலரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
“கிறித்தவ சமயத்திற்குப் பைபிளைப் போல, இந்து சமயத்திற்குப் பகவத் கீதை வேதமாகுமா? அது வேதமாயின், அது எதனைப் போதிக்கிறது? எவ்வகைக் கோட்பாட்டைப் போதிக்கிறது?”
“நான்கு வருணக் கோட்பாட்டிற்கும் தத்துவரீதியில் பாதுகாப்பளிக்க முன்வருகிறது, கீதை. நான்கு வருணங்களை இறைவன் படைத்தான் என்று திட்டவட்டமாகக் கீதை கூறுகிறது. எனவே, வருண தருமம் அணுவளவும் ஐயத்திற்கிடமின்றிப் புனிதமானது, கடவுள் படைப்பு என்பதையும் தாண்டி நியாயப்படுத்துகிறது.”
“பக்தியால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது. பக்தியுடன் வருண ஆசாரத்தையும் கடைபிடித்தல் வேண்டும். சுருங்கக் கூறின், பக்தியால் மட்டும் ஒரு சூத்திரன் எவ்வளவு பெரிய பக்தனாயினும் மோட்சம் அடைய முடியாது. மேல் வருணத்தாருக்காகவே வாழ்ந்து, உழைத்து மடிந்தால்தான் மோட்சத்தை அடையமுடியும்”
“பகவத் கீதையின் முதன்மை நோக்கம் சதுர்வருணத்தைக் காப்பதும் நடைமுறையில் அவ்வமைப்பைக் கட்டிக் காப்பதுமேயாகும்”
– எனக் கீதையிலிருந்தே எடுத்துக்காட்டி, அதனுடைய உயிர் நாடியை அம்பலப்படுத்தியிருக்கிறார், அம்பேத்கர்.

இப்படி வருண-சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலை எப்படி அனைத்து இந்துக்களுக்குமான ஒரு புனித நூலாகக் கருத முடியும்? சாதிப் பாகுபாட்டை, ஏற்றத்தாழ்வை ஆதரிப்பதன் காரணமாகவே வரலாற்றின் குப்பைக் கூடையில் தூக்கியெறிய வேண்டிய பகவத் கீதையைப் பாடநூலாக, அதுவும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பாடமாகப் பரிந்துரைத்திருக்கிறது, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE). அப்பரிந்துரையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவரும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது, அண்ணா பல்கலைக் கழகம்.
பித்தளைக்குத் தங்க முலாம் பூசுவது போல, நான்கு வருணப் பாகுபாட்டை ஆதரிக்கும் கீதையை வாழ்வியல் அறிவுரைகளைக் கூறும் நூலாகக் காட்டி, அதனைப் பொறியியல் மாணவர்களிடம் திணிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் இந்துமதவெறியர்கள். “பொறியியல் மாணவர்களுக்கு அன்பு, நன்றியுணர்ச்சி, தவறுகளைத் திருத்திக் கொள்ளும் விரிவான மனது, சுய ஒழுக்கம், நேர்மை, புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு ஆகிய பண்புகளைப் புகட்ட வேண்டுமென்றும், இப்பண்புகள் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களில் உள்ளதாகக்” கூறுகிறார்கள்.
படிக்க :
♦ விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
♦ பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்
மேலும், “பிளாட்டோவையும் சாக்ரட்டீசையும் பாடத்தில் படிக்கும் போது கீதையைப் படிப்பதில் என்ன தவறு? கீதையைப் படித்தால் தனிமனித ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும்; நிர்வாக மேலாண்மையை கற்றுக் கொள்ள முடியும்” என கீதைக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்கின்றனர். இந்த அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கீதையில் “சுய உணர்தல்”, “மனதை வெல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொல்லும் வழிகள்” என இரண்டு தலைப்புகள் பாடத் திட்டமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டுமானால், போர்டு ஆஃப் சர்வீசஸ், அகடமிக் கவுன்சில், சிண்டிகேட் என மூன்று கட்டங்களில் முன்வைக்கப்பட்டு, மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த பிறகே புதிய பாடத்திட்டம் குறித்துத் துணைவேந்தர் அறிவிக்க வேண்டும். ஆனால், மாநில உயர்கல்வித் துறை அமைச்சருக்கே தெரியாமல், பல்கலைக்கழக நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், கொல்லைப்புற வழியாக பகவத் கீதையைக் கட்டாயப் பாடமாக கொண்டு வந்தது அண்ணா பல்கலைக் கழகம். இந்தச் சதித்தனமான திணிப்புக்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் எழுந்தவுடனேயே, “இது கட்டாயம் அல்ல, விருப்பப் பாடம்தான்!” எனத் துணை வேந்தர் சூரப்பா முதல் பா.ஜ.க. நாராயணன் வரை அனைவரும் சமாளித்தார்கள்; சமாளித்தும் வருகிறார்கள்.
“புதிய கண்டுபிடிப்புகள், உலகச் சந்தையில் பொறியியலின் தாக்கம், காலத்திற்கு ஏற்ப வளரும் தொழில்கள் எனப் பல்வேறு விசயங்களைப் பொறியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப தமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என 28.09.2019 அன்று மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 23 நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு நேர்மாறாகக் காலத்தால் பின்தங்கிய, பிற்போக்குத்தனமான, மனித சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும் கீதையைப் பாடத்திட்டத்தில் புகுத்துகிறார்கள் எனில், இவர்களின் நோக்கம்தான் என்ன?
கல்வியை கார்ப்பரேட்மயமாக்குவது மட்டுமின்றிக் காவிமயமாக்குவதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிப்படைத் திட்டங்களுள் ஒன்று. இந்த அடிப்படையில்தான் மாநில அரசிடமிருந்து கல்வியுரிமையைப் பறிக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை-2019 அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலும் இந்தி, சமஸ்கிருத மொழி பாடத்திட்டத்தைக் கட்டாயமாக்குவது, இந்திய வரலாற்றை ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கங்களை ஈடுசெய்யும் வண்ணம் மாற்றியமைத்துக் கற்பிப்பது, வேத கணிதம், வேத விஞ்ஞானம் ஆகிய பார்ப்பன சரக்குகளைப் பாடத் திட்டத்திற்குள் கொண்டுவருவது, வேத கல்வி வாரியம் அமைப்பது, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிப்பது என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளைத் தன்னார்வலர்களாக நுழைப்பது என அடுத்தடுத்துப் பல மாற்றங்களைப் புகுத்தி வருகிறது, மோடி அரசு. இந்த அடிப்படையில்தான் நவீன அறிவியலோடு தொடர்புடைய பொறியியல் கல்லூரி பாடத் திட்டத்தில் அறிவியலுக்குத் தொடர்பேயில்லாத பகவத் கீதை திணிக்கப்படுகிறது.

இத்தகைய திணிப்புகளின் வழியாக ஆர்.எஸ்.எஸ். எதைச் சாதிக்க முனைகிறது? இன்றைய நிலையில் சூத்திர, பஞ்சமர்களுக்குக் கல்வியை நேரடியாக மறுக்க வழியில்லை. எனினும், அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் விதத்தில் கல்விப் புலத்தில் பல்வேறு மாற்றங்களைத் தரம் என்ற பெயரில் கொண்டு வருகிறார்கள்.
3, 5, 8, 10, 11, 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள், மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகள், 8-ம் வகுப்பு வரை எந்தவொரு மாணவனையும் ஃபெயிலாக்கக்கூடாது என்ற விதி திருத்தப்பட்டிருப்பது, குறைவான எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகளை மூடுவது, கல்லூரிகளுக்குத் தன்னாட்சி வழங்குவது மற்றும் தொழிற்கல்வியைப் புகுத்துவது ஆகியவை அனைத்துமே மேற்சொன்ன நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய வழிகளே.
இத்தடைகளையெல்லாம் தாண்டி ஒடுக்கப்பட்ட சாதி – வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியில் இடம்பெற்றுவிட்டாலும், அவர்களிடம் பார்ப்பன மேலாண்மையைப் பதிய வைக்கும் நோக்கிலேயே உயர்கல்விப் புலத்தில் பகவத் கீதை, சமஸ்கிருத வகுப்புகள் கொண்டு வரப்படுகின்றன. பார்ப்பன மேலாண்மை, சாதி ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை உள்ளிட்ட பிற்போக்குக் கருத்துக்களை நயமான வார்த்தைகளிலும் பண்டைய பாரதப் பாரம்பரியம் என்ற பெயரிலும் இயல்பாக்கத் திட்டமிடுகிறார்கள்.
படிக்க :
♦ சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு
♦ பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை ! ம.க.இ.க கண்டனம்
பீற்றிக் கொள்ளப்படும் பாரத பாரம்பரியத்தில் பார்ப்பன வைதீக மரபு மட்டும்தான் உள்ளதா? வேதங்களை மறுத்த மரபுகள் உள்ளன. மேலும், புத்த, ஜைன, இஸ்லாமிய மதப் பிரிவுகளும், சைவ சித்தாந்தப் போக்குகளும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு வேத, சமஸ்கிருத மரபிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதிலிருந்தே பார்ப்பன பாசிஸ்டுகளின் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே உயர் கல்வி நிலையங்களில் சாதிப் பாகுபாடு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஒதுக்கும் போக்கு மேலோங்கி வருவதை ரோஹித் வெமுலா உள்ளிட்ட மாணவர்களின் தற்கொலைச் சாவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இந்நிலையில் சாதிப் பாகுபாடுகளைக் களையும் முற்போக்குக் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்குப் பதிலாக, வருணப் பாகுபாட்டை நியாயப்படுத்தும் கீதையைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, அத்தகைய சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்துவதற்கே பயன்படும்.
பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தற்போதைய தேவையென்ன? முதலாவதாக, புற்றீசல் போலப் பெருகியிருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் அடிக்கட்டுமான வசதிகளும், கல்வி கற்பிக்கும் திறனும் தரமிக்கதாக அரசால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். பொறியியல் படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய வகையில் பொருளியல் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
ஆனால், இதற்கு நேர்மாறாக மாணவர்களின் தனிமனித ஆளுமை (personality Skill), மாணவர்களுக்கு மேலாண்மைத் திறமை (Managerial Skill), மானுடவியல் (Humanity) பற்றிப் பயிற்றுவிப்பதாகக் கூறி கீதையை படிக்கச் சொல்வது அம்மாணவர்களை ஏமாற்றும் சதிச் செயலாகும்.
இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலை ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் தீய நோக்கில் “பேச்சைக் குறை, உழைப்பைப் பெருக்கு” என்ற முழக்கம் அரசால் முன்வைக்கப்பட்டது. மோடி அரசோ அதனிடத்தில், “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என உபதேசிக்கும் கீதையை மாணவர்களிடத்தில் புகுத்துகிறது.
ஊரான்
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
சந்தா செலுத்துங்கள்
இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்