Tuesday, July 23, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு

சென்னையின் காற்று மாசுபாடு குறித்து ஊடகங்களில் பெரியளவில் விவாதங்கள் எழாமல் இருப்பது மற்றும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அரசுத் துறைகளும் இப்பிரச்சினை குறித்து பாராமுகமாகவே உள்ளனர்.

-

ந்தியத் தலைநகர் தில்லியின் காற்று மாசுபாடு பிரச்சினையை குறித்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அக்கறையோடு விவாதிக்கின்றன. அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட சுற்றுவட்டார மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நடந்து வரும் விசாரணைகளின் ஒவ்வொரு கட்டங்களையும் ஊடகங்கள் சுவாரசியமான பின்னணி இசையோடு கடைபரப்பி வருகின்றன. இந்த விவாதங்களின் ஊடாக காற்று மாசுபாட்டிற்கு உண்மையான காரணங்களாக இருப்பவர்கள் தப்புவிக்கப்படுவதோடு, இதே காரணங்களால் பாதிக்கப்படும் பிற இந்திய நகரங்களின் நிலை பின்னுக்கு தள்ளப்படுகின்றது.

இதில் முக்கியமாக சென்னை நகரத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் காற்று மாசுபாடு நமது கவனத்திற்கு வராமல் போயுள்ளது.

காற்று மாசை கணக்கிடும் தரக்குறியீட்டு எண் இயல்பாக 50 இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தில்லியில் இக்குறியீட்டெண் 600-ஐக் கடந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களில் கடுமையாக அதிகரித்துக் காணப்பட்டது.  மணலியில் தரக்குறியீட்டு எண் 358 ஆகவும், வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் முறையே 289, 237 எனவும் இருந்தது. ஒப்பீட்டளவில் சென்னையை விட பலமடங்கு பெரிய நகரமான தில்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு அதிகப்படியான வாகனங்களில் துவங்கி, பனிப் பொழிவு வரை பல காரணிகள் உள்ளன.

சென்னையைப் பொருத்தவரை தில்லியை விட சிறிய நகரம்; தில்லியை ஒப்பிடும் போது பனிப் பொழிவோ, “அறிஞர்கள்” குறிப்பிடும் விவசாயக் கழிவுகளோ இல்லை என்பதோடு கடல் காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது. இந்தப் பின்னணியில் தில்லியின் குறியீட்டெண் அதிகமென்றாலும், ஒப்பீட்டளவில் சென்னையின் மாசு அதிகளவில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். வெப்பநிலை குறைவாக இருப்பது, காற்று வீசும் திசை மாறியிருப்பது மற்றும் புகைமூட்டம் உள்ளிட்ட காரணங்களை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

எனினும், சென்னையின் காற்று மாசுபாடு குறித்து ஊடகங்களில் பெரியளவில் விவாதங்கள் எழாமல் இருப்பது மற்றும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அரசுத் துறைகளும் இப்பிரச்சினை குறித்து பாராமுகமாகவே உள்ளனர்.  ”இதுவரை மழைக்காலத்தில் ஏற்பட்டுள்ள மாசுபாடு குறித்து தனிப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும்,  சென்னையில் காற்றுமாசுபாட்டை கண்காணிக்க புதிதாக எந்த கருவியும் பொருத்தப்படவில்லை எனவும், சென்னை வானிலை ஆய்வு மையத்தில் காற்று மாசுபாட்டை கண்காணிக்க சிறப்பு கருவிகள் இல்லை என்பதால் மாசுபாடு குறித்து விளக்கம் தரமுடியாது எனவும் வானிலை ஆராய்ச்சி மைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பி.பி.சி தளத்தில் வெளியான கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

சென்னையில் 3,300 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம், 10 மில்லியன் டன் உற்பத்தி திறன்கொண்ட பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் மற்றும் எண்ணூர், மணலி போன்ற இடங்களில் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளதை பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் சுட்டிக் காட்டுகிறார். சுத்தமான காற்றுக்கான மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஜி. சந்திரசேகர், ”பூவுலகின் நண்பர்கள்” சுட்டிக்காட்டும் தொழிற்சாலைக் கழிவுகளோடு மேலும் சில காரணிகள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.  புதிய கட்டுமானங்கள் அதிகரித்துள்ளது, ஆண்டு தோரும்  இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவருவது போன்ற காரணங்களால் சென்னையில் சமீப காலங்களில் மாசுபாடு அதிகரித்துள்ளது என்கிறார்.

அதே போல் சென்னையில் கடல் இருப்பதால், காற்று மாசுபாட்டை முழுவதுமாக கடல் உள்வாங்கிக்கொள்ளும் என்பது ஒரு தவறான கருத்து என்பதையும் கூறும் சந்திரசேகர்  ”நுண்துகள்களாக காற்றில் பறக்கும் தூசுகளை பலரும் சுவாசிக்கிறோம் என்பதை உணரவேண்டும். டெல்லியில் இன்று உள்ள நிலையைவிட நாம் நன்றாக இருக்கிறோம் என்பதை விட, தற்போது மாசு கட்டுப்பாட்டை செய்யாவிட்டால், நமக்கு வேறு ரூபத்தில் காற்று மாசுபாட்டால் பிரச்சனை ஏற்படும் என்பதற்கு அதிகரித்துவரும் நோயாளிகள் சான்று,”என்கிறார் (பி.பி.சி கட்டுரை).

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் விளைவாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பரவலாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதையும் மருத்துவர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார். மேலும் சென்னையின் எண்ணூர் மணலி போன்ற தொழிற்சாலைப் பகுதிகளில் உள்ள காற்றில் நிக்கல், பாஸ்பரஸ், மக்னீசியம், லெட் உள்ளிட்ட ரசாயனம் மற்றும் உலோக கழிவுத் துகள்கள் தென்படுவதாக காற்று மாசு குறித்து ஆராய்ந்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்வேதா குறிப்பிடுகிறார். மேலும் இதே துகள்கள் சென்னையின் அடையாறு, போட்கிளப் போன்ற இடங்களிலும் தென்படுவதாக சுட்டிக் காட்டுகிறார்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !
கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்

காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் அதைக் கண்டறிவதற்கான போதிய கருவிகளை நிறுவும் எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. உலகமயமாக்கல் நகரங்களை கட்டுப்பாடின்றி வீங்கச் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பலன்களை அறுவடை செய்து கொள்ளும் ஆளும் வர்க்கம், அந்த நகரங்களில் வந்து குவியும் மக்களின் உயிர்களைக் குறித்து எந்தளவுக்கு அக்கறை செலுத்துகின்றது என்பதற்கு இந்த உதாசீனமே சிறந்த எடுத்துக்காட்டு.

சாக்கியன்

  1. இனி காற்றையும் விற்க ஆரம்பித்து விடுவார்கள்,கார்ப்பரேட்டு முதலாளிகள். அனைத்திலும் லாபம், லாபம் மட்டுமே. யார் வாழ்ந்தால் என்ன? யார் செத்தால் என்ன?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க