சென்னை பட்டினப்பாக்கம், சாந்தோம் கடற்கரையை ஒட்டியுள்ள சீனிவாசபுரம் மீனவர் குடியிருப்பில் கடல் சீற்றத்தால் கடந்த பத்து நாளில் (ஜூன் 2018) ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி இருக்கின்றன. மீனவர்கள் வீடிழந்து பல நாட்களாகியும் அமைச்சர்களோ, அதிகாரிகளோ எட்டிக் கூட பார்க்கவில்லை. அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் தமிழகத்தின் மொத்த அ.தி.மு.க. அமைச்சர்களும், அதிகாரிகளும், நீதிபதிகளும் வசிக்கும் கிரீன்வேஸ் சாலை உள்ளது. ஆனாலும் மீனவர்களின் ஓலம் யாருக்கும் கேட்காமல் கடலோடு கரைந்து போனது. அதை நாமாவது கேட்போம்!

குமுதா:
“வருஷா வருஷம் எங்களை கடல் காவு வாங்குது. குடிச வீட்ல குடியிருந்தப்ப எங்கள அக்னிதேவன் வந்து அள்ளிக்கினு போனான். அப்புறம் அங்க இங்கனு ஓடி கடன-உடன வாங்கி ஓடு போட்டோம்………இப்ப ஓட்டு வீட்டையும் கடலம்மா விட்டு வெக்கல. நாங்க வாழத் தகுதி இல்லாதவங்கன்னு தெரிஞ்சிருச்சி போல. அதான் கடலு இப்பிடி வாரிக்கினு போவுது” என்று படபடவென பேசினார் மீனவ மூதாட்டி குமுதா.

பட்டினப்பாக்கம் சீனுவாசபுரம் என்பதெல்லாம் இப்ப வந்த பேரு. அதுக்கு முன்ன முல்லைக்குப்பம், பத்து மோடு கிராமம். முதல்ல குவாட்டர்ஸ் காமராஜர் காலத்துல கட்டினது. 70-ல கலைஞரும் இங்க குடியிருப்பு கட்டினாரு. அதுக்கப்பால இப்ப ஐம்பது வருஷம் ஆவுது.  நானே இங்க மூனு தலைமுறை பார்த்துட்டேன். 5 பேரு 6 பேரு இருந்த குடும்பம் இப்ப 30 பேரு ஆயிட்டோம். கொள்ளுபேரன், பேத்தினு அவங்க கல்யாணத்தயும் பார்த்துட்டேன். இவ்வளவு பேருக்கும் யாரு வேல கொடுக்கிறான். கவர்மெண்ட்டா? கடலம்மா தான் எங்களுக்கு சோறு போடுறா… வலை எடுத்து கடலுக்கு போனாத்தான் பொழப்பு. அதான் கடல் மடியிலயே வாழறோம்.

எங்க பேரே பிஷர்மேன் தானே. கடல்ல இல்லாத கரையில எங்களுக்கு என்ன வேலை. ஆனா கடலும் இப்ப கைவிரிச்சுடுச்சி! எங்களுக்கும் வீடு கொடுத்து கவருமெண்டு வேலை கொடுத்தா கரைக்கு வரதுக்கு கசக்குமா என்ன?

தொழிலு இல்ல. பேர பசங்கள படிக்க வைக்க முடியல. பேத்திங்கள கட்டிக் கொடுக்க முடியல. நான் சோறு போட்டு வளர்த்த பசங்க எனக்கு சோறு போட முடியாம தவிக்கிறாங்க. இட்லி கடை போட்டு ஏதோ காலத்த ஓட்டுறேன்.

இந்திரா:
ரேசன் பொருளக்கூட வாங்க வழி இல்லாம கெடக்குறோம். அரிசிதான் ஓசி. பருப்பு, பாமாயிலு பணம் கொடுத்தா தானே வரும். இரண்டு லிட்டர் கிருஸ்னாயிலுக்கு 28 ரூபா பணம் இல்லாம வாங்காம விட்டுட்டேன். பசங்களும் வீட்டுல சும்மா இல்ல. கடல்ல தொழில் இல்லன்னு ஆட்டோ ஓட்டுறதுக்கு, கம்பனி வேலைக்கு, செக்குரிட்டி வேலைக்கினு எங்க போனாலும் பத்தல.

தேவி:
காசிமேட்டுக்கு போயி மீனு வாங்கியாந்து தெருவுக்கு போவோம். இருநூறு, முந்நூறு கெடைக்கும். குடும்ப செலவு, பசங்க செலவுன்னு தள்ளிக்கினு போவும். இப்ப கடல் சீற்றத்துல வீடு இடிஞ்சி விழுந்துடுச்சி. நாலு நாளா தூக்கம் இல்ல…… சோறும் எறங்கல..… என்ன பன்றதுன்னு தெரியாம பித்து புடிச்சி அலையுறோம். கலெக்டர் ஆபிஸ், மந்திரி ஜெயக்குமார் ஆபிசுன்னு ஓடுறோம். எங்க போயும் வழிதான் பொறக்கல.

மாரி:
கடல்ல தொழிலு இல்லாதப்ப. டெலிவரி வேலை செஞ்சேன். மில்கி பிரட் பிஸ்கட் கடை கடையா போடுவேன். ஜிம்முக்கும் போவேன். பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். உடம்பு இருந்தாலும் போலிசு வேலைக்கு போறதுக்கு எனக்கு பிடிக்கல. காதுல கம்மல் போடக்கூடாது, ஸ்டைலா முடி வெட்டக்கூடாதுன்னு அங்க போடுற கண்டிஷன்லாம் நமக்கு ஒத்து வராது. டிரைவர் வேலை மேல ஆசை. ஆனா, டச் இல்ல. சீக்கிரம் போயிடுவேன். சுனாமி வந்தப்ப எங்க ஆயாதான் என்ன இடுப்புல வச்சிக்கினு கூரமோட்ட புடிச்சி காப்பாத்துச்சி. எங்க அம்மா இல்ல.. செத்துடுச்சி….. எல்லாம் ஆயாவுக்காத்தான்….!

ரோசம்மா:
சுனாமில தப்பிச்சவ நான். இப்பவும் என் பேரன் பேத்திங்களுக்காகத்தான் வாழரேன். வீடு விழுந்ததால பக்கத்து அக்கத்து வீடுகள்ல ஒண்டிக்கினு வாழுறோம். யாரும் வர்ல. எதுவும் செய்யல.. குழந்தைங்க பசி தாங்குமா? அதான் வெளியில கல்லு வச்சி சோறு ஆக்குறேன். நல்லவேல வீடு பகல்ல விழுந்துச்சி.. ராத்திரின்னா கொழந்தைங்க எல்லாம் செத்திருக்கும். வயசான காலத்துல எ….. வூட்டுக்காரு அம்பது வருசமா கடலுக்கு போனவரு……. இப்ப மாவு அரைக்குர எடத்துக்கு வேலைக்கு போயி.. ஏதோ..கொடுத்தாரு… மிசின்ல அடிபட்டு காலு எல்லாம் புண்ணு. வைத்தியம் பாக்க முடியல…..அதுக்குள்ள இன்னொரு வேதனை வந்துடுச்சி !

செந்தில்:
கடலுக்கு போயி பல மாசம் ஆவுது. தொழிலு சரியா இல்ல. அதனால இப்ப பெயிண்டிங் வேலைக்கு போறேன். அதுவும் வாரத்துல இரண்டு நாள் கூட கிடைக்க மாட்டேன்னுது.. அதுக்கும் வட நாட்டுக்காரங்க வந்துட்டாங்க. 7,8 பேரு ஒரு ரூம்ல தங்கிக்கினு 350 ரூபா கொடுத்தாலே போதும்னு செய்யுறாங்க. கரையிலயும் வாழ முடியல.

முத்துமணி:
சீற்றத்துல இடிஞ்ச வீட்ல இருந்து கட்டிக்க துணி கூட எடுக்க முடியில. சட்டுனு எல்லாம் அலையில இழுத்துக்கிச்சு. கொஞ்ச நேரத்துல மண்ணும் மூடிப்போச்சி. இதுவரைக்கும் அதிகாரிங்க யாரும் வரல. இங்க ஒரு சமூதாயக் கூடம் இருக்கு. அதைக்கூட தொறந்து விடல. நாங்க மொத்தமா அங்க தங்கினா வெளியில தெரியும். அது பத்திரிக்கையில வரும் டிவியில போடுவாங்க. அதனால எங்கள தனித்தனியா அலைய விட்டுட்டாங்க. படுக்க இடம் இல்ல.

சரவணன்:
கடல்ல வேல இல்லாததால கரையோரத்துலயே அலையில அடிச்சிகினு வர வெள்ள நண்டுகளையும், எலி பூச்சியையும் புடிச்சி விப்பேன். புள்ளதாச்சி பொம்பளைங்களுக்கு அது டானிக் மாதிரி மருந்து. கடல் சீற்றத்துல வீடுங்க விழுந்து போனதால ஜனங்க அலை மோதுதுங்க. வாடகை இருந்தவங்க திடீர்னு எங்க போறதுன்னு தெரியாம குழந்தைங்களோட ரோட்டுல நிக்குறாங்க. நீங்கதான் எதாவது வழி பண்ணனும்.

வெண்ணிலா:
பொறந்ததுல இருந்து கடல்தான் எங்களுக்கு. இங்கதான் எங்களுக்கு உழைக்க தெரியும். வெளியுலகத்துக்கு போயி பொழக்கிற தெறம எங்களுக்கு கிடையாது. ஓட்டுக்கேட்டு MLA, MP-ன்னு எவ்ளோ பேர் வந்தானுங்க. இப்ப காப்பாத்த எவனும் வர்ல… வரவனுங்களும் பிச்சை போடுறதுக்குதான் வருவானுங்க. பண்ணு, பழம் எடுத்துக்கினு நோயாளிங்கள வந்து பாக்கிற மாதிரி பார்ப்பானுங்க. வேற ஒன்னும் செய்ய மாட்டானுங்க.

ஆயிஷா, அம்மு, மலர், விஸ்வநாதன்:
எங்களுக்கு தெரிஞ்சது கடல்தான். இங்க ரொம்ப பாதுகாப்பு இல்லன்னாலும் கெடக்கிறத வச்சி புள்ள குட்டிகளோட வாழ்ந்தோம். இப்ப தெருவுக்கு வந்துட்டோம். வீடும் போயிடுச்சி. தொழிலு இல்லாம அரை வயிறு கஞ்சி குடிச்சாலும் குழந்தை குட்டிகளோட இங்கயே நிம்மதியா செத்துடலாம்னு பார்த்தோம். அதுக்கும் வழி இல்ல.

நடிகர் கமலகாசன் திடீர்னு வந்து “இங்க கரயில கல்லு போடலாமா”ன்னு நடுத்தெருவுல நிக்கிற எங்ககிட்ட கேக்குறாரு. அதை எங்க தலையில போட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தூண்டில்ல மீனு புடிக்க அதுக்கு இரை வக்கிறதைத்தான் இதுவரைக்கும் பார்த்திருக்கோம். இவனுங்க எங்கள இரையாக்கி அவனுங்க பதவிய புடிக்க பாக்குறானுங்க. ஒருபிடி சோத்த கையிலு புடிச்சி சாப்பிட முடியல. இந்த பிளாஸ்டிக் படுதாவுக்கு கீழ தூக்கம் வராம குழந்தைங்க அலறுதுங்க. ஏசியில தூங்குறவனுங்களுக்கு எங்கத் தெரியப் போவுது!

கடல் அரிப்பில் தரைமட்டமான வீட்டின் வழியாக கடல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள்..

பத்துக்கு பத்து அறையில் மொத்தம் குடும்பமும்….. சிறைக்கைதிகளைப் போன்றுதான் மீனவர்களின் வாழ்க்கை. குழந்தை வெங்கடேஷ்.

பராமரிப்பின்றி சிதிலமடைந்திருக்கும் கடற்கரையை ஒட்டி இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்!

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க