காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் பேரிடர்கள் ஆண்டுக்கு ஆண்டு புதிய உச்சநிலைகளை எட்டிவருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் ஜூன் – ஆகஸ்டு மாதங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் பல நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது, குறிப்பாக ஐரோப்பா பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஐநூறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வறட்சி, வெப்ப அலை, காட்டுத் தீ, வெள்ளப்பெருக்கு எனத் தொடர் பேரிடர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன ஐரோப்பிய நாடுகள்.

உயிர்களைக் குடித்த ‘வெப்பப் புயல்’!

ஐரோப்பாவின் முதல் வெப்ப அலை ஜூன் மாதத் தொடக்கத்தில் வீச ஆரம்பித்தது. அடுத்து ஜூலை மாத நடுப்பகுதியில் தொடங்கிய இரண்டாவது வெப்ப அலை வடக்கே இங்கிலாந்து வரை பரவியது; ஆகவே இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. பிரான்ஸ் முதலிய பல நாடுகளில் 40 முதல் 43 டிகிரி வரை வெப்பம் பதிவானது.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

இங்கிலாந்தின் பீட்டர்பரோ நகரத்தில் ரயில்வே சிக்னல்களே வெப்பம் காரணமாக உருகியதென்றால், அங்கு நிலவிய வெப்ப அளவை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். லூடன் விமான நிலையத்தின் (இலண்டன் நகரம்) ஓடு பாதை வெப்பத்தால் உருகியதால் விமானச் சேவை முடங்கியது; கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பெருநகரமான ஸ்டாக்போர்ட்டில் பரபரப்பாக இருக்கும் சாலையின் ஒரு பகுதி உருகி திரவமாகத் தேங்கி நின்றதால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதால், அதை சமாளிக்க முடியாமல் அந்நாட்டின்  தீயணைப்பு துறையே திணறிப்போனது. ஒரு நாளைக்கு சுமார் 2,600 அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தீயணைப்பு துறைக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருந்தது ஜூலை 19 அன்றுதான் என இலண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.

ஜூன் 14 முதல் 20 வரை வீசிய முதல் வெப்ப அலையால் ஜெர்மனியில் 1,636 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம் வெப்ப அலையின் காரணமாக ஸ்பெயினில் 679 பேரும், ஜெர்மனியில் 6,502 பேரும் உயிரிழந்துள்ளனர். இறுதியாக ஆகஸ்டு மாதத்தில் தொடங்கிய மூன்றாவது வெப்ப அலையால் ஐரோப்பிய வனப் பகுதியில் சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவு காட்டுத்தீயில் எரிந்து நாசமாகியது.

எப்போதும் போலல்லாமல், வெப்ப அலையானது இம்முறை வெப்பப் புயலாக (Heatwave Storm) மாறியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகில் முதன்முறையாக ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்கு “ஜோ” (Zoe) எனப் பெயரிட்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும் வீசிய வெப்பப் புயல் காரணமாக இதுவரை 12,000 பேர் இறந்துள்ளனர்.

ஐந்து நூற்றாண்டுகளில் காணாத வறட்சி

ஏற்கெனவே பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சியோடு, தற்போது வீசிய இந்த வெப்ப அலைகளும் சேர்ந்துகொள்ள அதன் தாக்கம் மிக மோசமானதாக மாறியது. வரலாறு காணாத வறட்சி ஐரோப்பாவில் தலைவிரித்தாடத் தொடங்கியது.

டெவோன், கார்ன்வால், சோலண்ட், சவுத் டவுன்ஸ், கென்ட் உள்ளிட்டு இங்கிலாந்தில் மொத்தம் ஒன்பது நகரங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது அந்நாட்டு அரசு. இதன் காரணமாக அந்நாட்டில் ‘குழாய் தடை’ (hosepipe ban) அறிவிக்கப்பட்டது. இந்தத் தடை அறிவிக்கப்பட்ட இடங்களில், குழாய்கள் மூலம் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதோ, கார் கழுவுவதோ, நீச்சல் குளங்களை நிரப்புவதோ செய்யக் கூடாது என்பது விதியாகும். பல்பொருள் அங்காடிகளில் ஒரு நபர் 3-5 தண்ணீர் பாட்டில்களை மட்டுமே வாங்க வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன.

படம் 1: லூடன் விமான நிலையத்தின் (இலண்டன் நகரம்) ஓடு பாதை வெப்பத்தால் உருகியது. | படம் 2 : இங்கிலாந்தின் பீட்டர்பரோ நகரத்தில் ரயில்வே சிக்னல் வெப்பம் காரணமாக உருகியது.

பல இடங்களில் நீர் நிலைகள் வற்றத் தொடங்கிவிட்டன. இங்கிலாந்தில் சுமார் 1.5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தேம்ஸ் நதியும், ஜெர்மனியின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ரைன் நதியும் வற்ற ஆரம்பித்ததுள்ளது. வடக்கு இத்தாலியின் மிகப்பெரிய ஏரியான கார்டாவும், மிக நீளமான நதியான போவும் சுத்தமாக வறண்டே போய் விட்டன.

இது அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பயிர்களுக்கு நீர் பாசனம் செய்ய இயலாததால் 50 சதவிகித பயிர்கள் வீணாகியுள்ளன. மேலும் எண்ணெய் விதைகளை விதைக்க வேண்டிய இக்காலத்தில் மண்ணில் ஈரப்பதம் வற்றிப் போனதால், விதைக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விலையேற்றமடைந்துள்ள தாவர எண்ணெய்கள் இதனால் மேலும் விலை உயரும் அபாயம் நிலவுகிறது.

வறட்சியைத் தொடர்ந்துவந்த பெருவெள்ளம்

வெப்ப அலையால் தவித்து வந்த ஐரோப்பிய மக்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் கனமழை தாக்கத் தொடங்கியது. இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மின்னல்கள் தாக்கின. பிரான்சின் கோர்சிகாவில் மழையினால் மரங்கள் மற்றும் வீட்டின் கூரைகள் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். லண்டன், பாரிஸ், மார்செய் போன்ற பெருநகரங்களை மழை நீர் சூழ்ந்தது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இப்பெருவெள்ளம் ஏற்கெனவே நிலவிய கடும் வறட்சியை சரிசெய்யப் போதுமானதாக இல்லையெனவும், அக்டோபர் மாதம்வரை வறட்சி நிலை நீடிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பா போலவே மற்ற உலக நாடுகளும் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறன. பிப்ரவரி மாதம் பிரேசிலில் இருக்கும் ரியோ டி ஜெனிரோ-வில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 233 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதம் பிலிபைன்ஸ் நாட்டில், மெகி என்னும் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 167 பேர் இறந்துள்ளனர். ஜூன் மாதத்தில் வீசிய வெப்ப அலையால் அமெரிக்காவின் கேன்சாசில் 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து போயின.

ஜூன் மாதம் சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வெள்ளப் பேரிடர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் மாதம் முதல் கடுமையான வெப்ப அலைகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அந்நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய நதியான யாங்சே வறண்டு வருகிறது. வேளாண் உற்பத்தி, மின்சார உற்பத்தி ஆகியவையெல்லாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் காஷ்மீர், அசாம், மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

முன்னிலைக்கு வந்துவிட்ட சூழலியல் நெருக்கடி!  

காலநிலை மாற்றம் காரணமாக இன்று பரவும் கொரோனா, குரங்கு அம்மை போன்ற பெருந்தொற்று நோய்களில் 58 சதவிகித நோய்கள் வேகமாகப் பரவுகின்றன என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்” இதழில் இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் காலநிலை மாற்றம் காரணமாகச் சுற்றுச்சுழலில் ஏற்படும் மாற்றங்களே நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவ வழிவகுக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது புவி வெப்பமயமாதல் ஆகும். புவியின் சராசரி வெப்ப நிலையானது 1.5 டிகிரியைத் தாண்டினால் அதனுடைய விளைவுகள் மீள முடியாததாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டிற்குள் புவியின் சராசரி வெப்பநிலை தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேல் உயர்வதற்கு 48 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரிக்குள் வைத்திருப்போம் எனச் சென்ற ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற cop26 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் தீர்மானம் போட்டார்கள். அத்தீர்மானத்தின்படி, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை, இயற்கையை மேலும் தீவிரமாகச் சுரண்டும் வேலையிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

படிக்க : செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

cop26 மாநாட்டிற்குப் பிறகும், பல புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது; அதேபோல பிரேசிலின் அமேசான் முதல் காங்கோ வரை 11.1 மில்லியன் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. உலகின் நுரையீரலாக அறியப்படும் அமேசான் மழைக் காடுகளில், நியூயார்க்-இன் 5 மடங்கைவிட பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த முதாளித்துவ அரசுகளுக்கு இயற்கைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் துளியும் இல்லை என்பதையே மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.

சுற்றுச்சுழல் சீர்கேடும் அதனால் உருவான காலநிலை மாற்றமும், ஆளும்வர்க்க ஊடகங்கள் காட்டுவதைப் போல தனிநபர்களின் முறையற்ற செயல்பாடுகளினால் நடைபெறுவதல்ல. தன் லாப நோக்கத்திற்காக இயற்கையை வரன்முறையின்றி சூறையாடும் முதலாளித்துவ உற்பத்தி முறையினால் விளைந்த கேடாகும்.

முதாளித்துவத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு ஒரு பக்கம் இதுவரை காணாத வகையில் உச்சமடைந்துள்ளது. அதன் விளைவாகவே, இன்று இயற்கை நாசமாக்கப்பட்டு ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவிலும் மற்ற உலக நாடுகளிலும் ஏற்படும் பேரழிவுகள் இதனையே நமக்கு உணர்த்துகின்றன. இலாபவெறி கொண்ட முதாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவது பெருந்திரளான உழைக்கும் வர்க்கத்திற்கான விடுதலை என்பதோடு, இப்புவிப்பரப்பை காப்பதற்கே அது இன்றியமையாதது என்றாகிவிட்டது.


மதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க