த்திய அரசின் மொத்த வரி வருவாயில், மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத சர்சார்ஜ் மற்றும் செஸ் வரியானது கடந்த 10 ஆண்டுகளில் 10.4 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம், மொத்த வரி வருவாயில் மாநில அரசுகளின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது.

செஸ் வரி என்றால் என்ன, எவ்வளவு சதவிகிதம் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது, செஸ் வரி மூலம் மோடி அரசானது மக்கள் பணத்தை எவ்வளவு கொள்ளையடிக்கிறது, செஸ் வரியை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் நோக்கம் என்ன போன்ற கேள்விகள் நம் மனதில் இயல்பாக எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது.

***

ஒவ்வொரு தனிநபரின் வருமானத்தின் மீதும் அல்லது அவர்கள் வாங்கும் பொருட்களின் மீதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரு விதிக்கப்படுவது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வரிகளின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரிதான் செஸ் வரி. அதாவது ஏற்கெனவே விதிக்கப்படும் வரிக்கு மேல் விதிக்கப்படும் கூடுதல் வரியே செஸ் வரி.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

மத்திய அரசானது குறிப்பிட்ட திட்டத்தையோ அல்லது வேறெதேனும் காரணங்களின் அடிப்படையிலோ செஸ் வரியை விதித்துக் கொள்ளலாம். சாலை மேம்பாட்டிற்கு, கல்விக்கு, மருத்துவத்திற்கு, வேளாண்மைக்கு எனப் பல்வேறு துறைகளுக்காக இந்த செஸ் வரி விதிக்கப்படும். தூய்மை இந்தியா திட்டம் கூட இந்த செஸ் வரி விதிப்பின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டமே. இதன் மூலம் ஈட்டப்படும் வரி வருவாயை மாநில அரசுகளுடன் பங்கிட்டுக் கொள்ளத் தேவையில்லை.

தற்போதைய மோடி அரசு மட்டும் கிடையாது, இதற்கு முன்பிருந்த எல்லா மத்திய அரசுகளும் செஸ் வரியின் மூலம் தங்கள் சுரண்டலை மக்கள் மேல் திணித்தே வந்துள்ளனர். ஆனால், மோடி ஆட்சியின் கீழ் இந்த செஸ் வரி விதிப்பு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. செஸ் வரி விதிப்பு என்று எந்த வரைமுறைகளும் அளவும் கிடையாது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் செஸ் வரியின் மூலம் மத்திய மோடி அரசிற்கு அதிகப்படியான வருமானம் வருகிறது. 2021 பிப்ரவரி நிலவரப்படி, மத்திய அரசின் பெட்ரோல் மீதான கலால் வரி (அடிப்படைக் கலால் வரி + செஸ் வரி) 32.90 ரூபாய்.

இதில் அடிப்படைக் கலால் வரி 1.40 ரூபாய் மட்டுமே. சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 18 ரூபாய், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 2.50 ரூபாய், சிறப்புக் கூடுதல் கலால் வரியாக 11 ரூபாய் என மொத்தம் 31.50 ரூபாய் செஸ் வரியாக மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கலால் வரியைப் போல, செஸ் வரியின் கீழ் வசூலிக்கப்படும் இப்பெருந்தொகையை மாநிலங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

2017 ஏப்ரலில் அடிப்படைக் கலால் வரி 9.48 ரூபாயாகவும், செஸ் வரி 12 ரூபாயாகவும் இருந்தது. 2021 பிப்ரவரியில் அடிப்படைக் கலால் வரி 1.4 ரூபாயாகக் குறைந்து, செஸ் வரி 31.5 ரூபாயாக அதிகரித்தது. இதன் விளைவாக மாநில அரசிற்கான நிதிப் பங்கீடு குறைந்ததோடு, மத்திய அரசின் வரி வருவாய் மட்டுமே பேரளவு கூடியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசானது செஸ் வரியின் மூலம் மட்டும் 28 லட்சம் கோடி வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டிய அவசியமில்லாத செஸ் வரி உயர்ந்துகொண்டே செல்கிறது, மறுபுறம் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்பட வேண்டிய கலால் வரியைத் திட்டமிட்டே குறைத்துவருகிறது. இதன் மூலம் எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் குடுமியை தன் கையில் வைத்துக் கொள்வதோடு, அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலுக்குப் பெருந்தொகைகளை சலுகைகளாகவும் கடன்களாகவும் வழங்குவதற்கு நிதி ஆதாரத்தையும் குவித்துக் கொள்கிறது.

உண்மை இவ்வாறிருக்க, பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் வரிகளில் (கலால் வரியில்) ஒரு சிறு தொகையைக் குறைத்துவிட்டு, மாநில அரசுகளைப் பார்த்து வாட் வரியைக் குறைக்கச் சொல்லி அறைகூவுகிறது மோடி அரசு. பாஜக ஆளும் மாநிலங்கள், தங்களது வாட் வரியை குறைத்ததன் மூலம் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களிலுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.

2021 நவம்பரில் அடிப்படைக் கலால் வரியில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்துள்ளது. அதே போல் 2022 மே மாதத்தில் அடிப்படைக் கலால் வரியில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது. மத்திய அரசு ஒரு ரூபாய் கலால் வரியைக் குறைத்தால் அதில் 41 பைசா மாநிலங்களுக்குச் சொந்தமானது. அதாவது ஒரு ரூபாயில் ஒன்றிய அரசு 59 பைசாவும், மாநில அரசு 41 பைசாவும் குறைப்பதாகவே பொருள்.

படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

மாநிலங்களுக்கு பிரித்து வழங்க வேண்டிய வரித்தொகையில், பாஜக ஆளாத மாநிலங்களுக்கு – குறிப்பாக தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு அற்பமான தொகைகளையும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக தொகைகளையும் வரிப் பகிர்வாக வழங்குகிறது மோடி அரசு. இந்நிலையில் வாட் வரியைக் குறைக்காமல் எதிர்கட்சிகள் மக்கள் மீது சுமையை ஏற்றுகின்றன என்று நயவஞ்சகமாகப் பிரச்சாரம் செய்கிறது பாஜக.

மாநில அரசுகளை தமது காலனிகளைப் போல நடத்துகின்றது மோடி அரசு. இந்த ஒடுக்குமுறைக்கு ஏற்பவே நிலவுகின்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பும் உள்ளது பாசிஸ்டுகளுக்கு தோதாக உள்ளது. மாநில அரசுகள் மீது சட்டப்பூர்வமாகவே நடத்தப்படுகின்ற இப்பாசிச தாக்குதல்களை, எதிர்கட்சிகள் ஆளும் அரசுகள் வெறுமனே கடிதம் எழுதிக் கொண்டிருப்பதன் மூலம் முறியடித்துவிட முடியாது.

ஒன்றுக்கும் உதவாத சடங்குப் பூர்வமான எதிர்ப்புகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு, பாசிச பாஜகவின் அக்கிரமங்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும், களப் போராட்டங்களின் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதுமே நம்முன் உள்ள வழி. இவ்வழிக்குப் பெருந்திரளான மக்களையும் எதிர்கட்சிகளையும் கொண்டுவரும் அரசியல் திராணி புரட்சிகர-ஜனநாயக அமைப்புகளிடமே உள்ளது.

குப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க