01.10.2022

இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில்
திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை!

புமாஇமு கண்டனம்!

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பிக்கன அள்ளி ஊராட்சியில் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் காலாண்டு தேர்வில் கணிதத் தேர்வு (28.09.2022 அன்று) எழுதிவிட்டு வந்துள்ளார்கள்.

அந்த மாணவர்களை வழிமறித்து கணிதம் தொடர்பான கேள்விகள் எழுப்பியதாகவும் அதில் மாணவர்களுக்கு கணித அறிவு இல்லை எனவும், காரணம் மாணவர்களே சொன்ன அடிப்படையில், ஆசிரியர் விடைகளை கரும்பலகையில் எழுதி விட்டார் என்பதுதான் அது.

அதனால் மாணவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வியில் சீரிய முறையில் கற்பிக்க அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கும் மல்லுப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அந்த சுற்றறிக்கையின் கீழ்ப்பகுதியில் எந்தெந்த மாணவர்களிடம் ஆய்வு நடத்தினோம் என  பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட சுற்றறிக்கை என்பதே கடும் கண்டனத்திற்குரியது. ஏனென்றால் மாணவர்களுக்குக் கணிதத்தில் திறன் இல்லை என்றால் அது மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் உற்சாகமூட்டக்கூடிய கல்விச்சூழல் சார்ந்தது. இதை மேம்படுத்துவது எப்படி என அரசு யோசிக்காமல் இல்லம் தேடிக் கல்வி என்ற ஒன்றை இடையில் நுழைக்கிறது.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு ஏராளமான பணிகளை செய்கிறார்கள்; அவர்களால் முடியும்போது ஏன் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் முடியாது? என சிலர் இப்படி கேள்வி எழுப்புகிறார்கள். பல்வேறு கணக்கெடுப்பு பணிகள், நிர்வாகப் பணிகள் என செய்து கொண்டு சரியாக கற்பிக்க முடியாதா? என கேட்பதுதான் அதன் சாரம்.

படிக்க : “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு

தனியார் பள்ளிகளில் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் கட்டாயம் சென்று விடுவார்கள். ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மேற்கண்ட பணிகளின் போது வகுப்புக்கு செல்ல முடியாது. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியை எடுத்துக் கொண்டால் ஒருவர் அலுவல் வேலையாக சென்றால் கூட ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் கற்பித்தல் தடைபடும்.

இங்கேயே ஆசிரியர்கள் மாணவர்கள் இடையிலான தொடர்ச்சி விட்டுப் போகிறது. இந்த நிர்வாக வேலைகளை குறைப்பதற்கோ இல்லை ஆசிரியர்களிடம் கற்பித்தலில் குறைபாடு இருக்கிறது என்றால் அவர்களுக்கு மேலும் பயிற்சி கொடுப்பது பற்றியோ இந்த அரசு யோசிக்கவில்லை.

உற்சாகமூட்டும் கற்பித்தல் முறையும் பள்ளி சூழலும் இருக்க வேண்டும். அது மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்தும். ஆனால் உற்சாகமூட்டும் கற்பித்தல் முறையை பற்றி அரசு சிந்திப்பதில்லை. பள்ளிகளில் முறையான கட்டிட வசதிகள்,  போதுமான ஆசிரியர்கள் எண்ணிக்கை, சுகாதாரமான வகுப்பறைகள், சுகாதாரமான கழிப்பறைகள்,  சுகாதாரமான குடிநீர் வசதி, முறையான விளையாட்டு மைதானங்கள், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள் என அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர்கள் உற்சாகமான மனநிலை என்பது இல்லாமல் உள்ளது.

சமீபத்தில் கூட 5,583 அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட குழு அமைக்க வேண்டும் என செய்திகள் வெளிவந்தன.

இவ்வளவு மோசமாக கட்டிடங்களை வைத்துக்கொண்டு அதை கவனிக்காத அதிகாரிகளின் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்திருப்பார்களா? இல்லை தற்போது மாணவர்களின் பெயர்களை வெளியிட்டார்கள் அதுபோல அதிகாரிகளின் பெயரை வெளியிட்டிருப்பார்களா? கட்டிடங்கள் இடிந்து விழுந்து மாணவர்கள் படுகொலைகள் செய்யப்படுவது இல்லாமல் நின்றுவிட்டதா என்ன?

இப்படித்தான் பல்வேறு அரசு துறைகளும் சீரழிந்து போய் கிடக்கின்றன.

இதையெல்லாம் தாண்டி இல்லம் தேடிக் கல்வி என்ற ஒன்றை ஆரம்பித்தற்கான காரணம் மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் கல்வியில் இருந்து பாதிக்கப்பட்டார்கள் அதை முறைப்படுத்த தான் என்றார்கள். அதற்கு ஆறு மாதம் செலவாகும் என்றார்கள். தற்போது ஒரு வருடத்திற்கு மேலாக இல்லம் தேடிக் கல்வி என்ற ஒன்று நீண்டு கொண்டே செல்கிறது.

படிக்க : பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்

மேற்கண்ட சுற்றறிக்கை விஷயத்திலும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அதை எப்படி சாதிப்பது என்பதைப் புறந்தள்ளிவிட்டு இல்லம் தேடிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுதான் அரசுப் பள்ளிகளை ஒழித்து விடத் தொடங்கும் புதிய கல்விக் கொள்கையின் தொடக்கம். இந்த செயலை எனது புமாஇமு வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசுப் பள்ளிகளையும் அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் ஒழித்துக் கட்டிவிட்டு ஒட்டுமொத்தமாக தனியார்மயத்தையும் கார்ப்பரேட்மயத்தையும் ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை உழைக்கும் மக்களின் மாணவர்களை ஒட்டுமொத்தமாக கல்வியில் இருந்து அப்புறப்படுத்தக் கூடியது.

இல்லம் தேடிக் கல்வியின் மூலம் புதிய கல்விக் கொள்கையை ஊக்கப்படுத்துவதையும், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் கொள்கைகளையும் தடுத்து நிறுத்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கொண்ட கூட்டமைப்புகளை உருவாக்குவோம்! கல்வி என்பதை சேவையாக அனைவருக்கும் இலவசமானதாக மாற்றி அமைக்கும் போராட்டங்களை முனனெடுப்போம்.


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க