பொதுப் பாடத்திட்டம்: தி.மு.க. அரசின் மற்றொரு கார்ப்பரேட் சேவை!

கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, உயர்கல்வித் துறையில் பொதுப் பாடத்திட்டம் என்ற திட்டமும் அமைந்துள்ளது.

திறன்’ சார்ந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளுக்கு பொதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது தி.மு.க. அரசு. இதற்கு முன்னர், உயர்கல்வித்துறையில் ‘வளர்ச்சி’த் திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற “நான் முதல்வன்” திட்டமும் ‘திறன்’ சார்ந்த மாணவர்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் தான் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெரியார், பாரதிதாசன் போன்ற பல்கலைக்கழகங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் தன்னாட்சி கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தன்னாட்சி கல்லூரிகளும் தங்களுக்குரிய பாடத்திட்டத்தை தாங்களே வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த பாடத்திட்ட வேறுபாடு காரணமாக மாணவர்கள் மதிப்பெண் பெறுவது தொடங்கி, துறை ரீதியான அறிவு பெறுவது வரையில் ஒரு மாநிலத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தன்னாட்சி கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது மாநில உயர்கல்வித்துறை.

இந்த பொதுப் பாடத்திட்டத்தை “தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் யு.ஜி.சி வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கியிருக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. மேலும், இது பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாகவும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்ப்பின் காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு அனுப்பியிருப்பது “மாதிரி பாடத் திட்டம்” என்று கூறியுள்ளது, உயர்கல்வித் துறை. மேலும், இதைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறவில்லை; இது ஆலோசனை மட்டுமே; பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் பொதுப் பாடத்திட்டத்தை பின்பற்றாமலும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


படிக்க: தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!


ஆனால், கல்வி நிலையங்களில் பொதுப் பாடத்திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு தான் வருகிறது. ஒருபுறம் மாநில அரசின் நிர்பந்தத்தின் காரணமாகவும், மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், முதல்வர்களின் முயற்சியாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. “பொதுப் பாடத்திட்டத்தை 90 சதவிகித அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியுள்ளன” என உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே இதற்குச் சான்றாகும்.

தன்னாட்சி அதிகாரத்தை ஒழித்துக்கட்டும் பொதுப் பாடத்திட்டம்!

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தலைமையில் தான் பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளார். குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமை, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாமை போன்ற கல்வி நிலையங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக, பாடத்திட்டங்களை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்துக்கொண்டிருக்கிறது, உயர்கல்வி மன்றம்.

பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் பாடத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் தான் உள்ளது. பல்கலைக்கழகங்கள் தங்களுடைய பாடத்திட்டங்களை “சிறப்பு பாடத்திட்டக் குழுக்கள்” மூலம் தகுந்த வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கிக் கொள்கின்றன. பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகள் அதை பின்பற்றுகின்றன.

பாடத்திட்டங்களை உருவாக்கிக் கொள்வதற்கான தன்னாட்சி அதிகாரமும், வெவ்வேறு பகுதிகளில் பரவலாக பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டதும் ஒவ்வொரு வட்டாரத் தன்மையும் கல்வியில் வெளிப்பட வேண்டும் என்பதற்காகத் தான். அதன் நோக்கம் மாணவர்கள் பரந்துபட்டு சிந்திக்க வேண்டும் என்பதுதான். அதை ஒழித்துக்கட்டுவதற்காகத் தான் பொதுப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், பொதுப் பாடத்திட்டத்தில் ஆயிரத்தெட்டு குளறுபடிகள் உள்ளதாக விமர்சிக்கின்றனர், பேராசிரியர்கள். பயிற்சி (practical) தேவைப்படும் பாடங்களுக்கு பயிற்சி இல்லாமலும், முக்கியமான பாடங்களின் (core subjects) தன்மையைச் சிதைத்தும் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர். “தமிழகத்தின் பாடத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். ஆனால், புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டமோ, ‘பழைய சோறாக’ இருக்கிறது” என விமர்சிக்கிறார், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் டி.வீரமணி.

இத்தகைய குளறுபடியான பாடத்திட்டத்தை தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கலந்தாலோசிக்காமல் வகுத்துள்ளது, உயர்கல்வி மன்றம். நடைமுறைப்படுத்தும் போதும் கருத்து கேட்கவில்லை. இத்தகைய சதித்தனமான நடவடிக்கையை தமிழ்நாட்டின் கல்வியாளர்கள் அம்பலப்படுத்தியப் பிறகு, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் 300-க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களை அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 922 பேராசிரியர்களுடன் விவாதித்து பொதுப் பாடத்திட்டத்தை உருவாக்கி இருப்பதாக கூறியது, உயர்கல்வி மன்றம்.


படிக்க: NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE


உயர்கல்வி மன்றத்தின் இக்கூற்றானது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தலைமையில் ‘திறன்’ சார்ந்த பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற தங்களுக்கு சாதகமான பேராசிரியர்களிடம் மட்டும் விவாதிக்கப்பட்டு பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், 500-க்கும் மேற்பட்ட பாடத்திட்டக் குழுக்கள் கலைக்கப்படும் நிலைமை உருவாகும். பாடத்திட்ட உருவாக்கத்தில் பல வல்லுநர்களின் பங்கேற்பு மறுக்கப்படும். சிலர் மட்டுமே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உயர்கல்விப் பாடத்திட்டங்களை உருவாக்கும் சர்வாதிகார அமைப்பு உருவாகும். இதன் மூலம், பல்கலைக்கழகங்களில் எத்தகைய மோசமான பாடத்திட்டத்தையும் திணிக்க முடியும்.

கார்ப்பரேட்டுகள் விரும்பும் திறனற்ற ‘திறன்’

“மாணவர்களை அறிவு சார்ந்தவர்களாக உருவாக்காமல் ‘திறன்’ சார்ந்தவர்களாக மாற்றி நிறுவனங்களுக்கான தொழிலாளர்களாக ஆக்குவதுதான் பொதுப் பாடத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது” என்கிறார், அகில இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ரவி.

அறிவு சார்ந்த கல்வி மாணவர்களுக்கு ஏன் தரப்படுகிறது? எதிர்காலத்தில் அந்த மாணவர்கள் சமுதாயத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக தான். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, அவர்கள் ஏதாவது ஒரு துறை சார்ந்த அறிவை பெறும் வகையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த மாணவர்கள் எதிர்காலத்துக்கான கல்வியாளர்களாக, எழுத்தாளர்களாக, விஞ்ஞானிகளாக உருவாக முடியும். ஆனால் பொதுப் பாடத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி, கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒரு இயந்திரத்தை இயக்குவதற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்வதற்கான திறனை மட்டுமே கற்றுக் கொடுக்கிறது.

உயர்கல்வியை ‘திறன்’ சார்ந்த கல்வியை வழங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கம் மோடி அரசிற்கும் உள்ளது. “கல்வி முறையின் அடித்தளத்தை மேலும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் தொழில் சார்ந்ததாகவும் மாற்றும் வகையிலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது” என இந்தாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் கூறினார், பிரதமர் மோடி.

இந்தியாவில் ஆலையைத் தொடங்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யக்கூடிய திறன் கொண்ட, மலிவான கூலிக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாகும். ஏனென்றால், பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்கள் விரும்பும் வகையில் இந்தியாவை உலகத்தின் உற்பத்தி மையமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உற்பத்தித்துறையை மாற்றி அமைத்து வருகிறது, மோடி அரசு.

இந்தியாவில் தங்களுடைய ஆலைகளை அமைக்க விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களை, தமிழ்நாட்டை நோக்கி ஈர்ப்பதற்காகத் தான் ‘திறன்’ சார்ந்த கல்வி முறையை புகுத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இதற்கு முன்னர் 12 மணி நேர வேலைச் சட்டத்தை தி.மு.க. நடைமுறைப்படுத்த முயன்றதும் அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான்.

“நவீன காலத்துக்கேற்ப படிப்புகளை நாங்களே உருவாக்கி இருக்கிறோம். இன்றைய சூழலில் என்ன படித்தால் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று சிந்தித்துத் தான் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம்” என உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவரான அ.ராமசாமி கூறுவதும் மேற்கூறியதையே தெளிவுபடுத்துகிறது. எனவே, தி.மு.க அமல்படுத்திக் கொண்டிருக்கும் பொதுப் பாடத்திட்டமானது உயர்கல்வி முடித்துவரும் மாணவர்களை கார்ப்பரேட் அடிமைகளாக மாற்றும் ஒரு கார்ப்பரேட் “பயங்கரவாத”த் திட்டமாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி அடிமாட்டு விலைக்கு தூக்கி கொடுப்பது, வரிச்சலுகைகளை வாரி வழங்குவது என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவையாற்றி வந்த தி.மு.க. அரசானது, தற்போது கார்ப்பரேட்டுகள் விரும்பும் வகையில் ‘திறன்’ சார்ந்த தொழிலாளர்களை உருவாக்குவதற்காக கல்வி முறையையே மாற்றி அமைத்து வருகிறது.

தி.மு.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளும் பொதுப் பாடத்திட்டத்தை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. கல்லூரி பேராசிரியர்களும் கல்வியாளர்களும் தான் இதற்கெதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மாணவர்களும் மற்ற உழைக்கும் வர்க்கங்களும் தி.மு.க. அரசை பணிய வைக்கும் களப்போராட்டங்களை கட்டியமைக்கும் போது தான் இத்தகைய பயங்கரவாத திட்டத்தை முறியடிக்க முடியும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க