03.06.2022
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்
அரசியல் பேச தடை உத்தரவு!
நீட்டப்படும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின்
கொடும் கரங்களை உடைப்பதற்கு ஒன்றுபடுவோம்!
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக பதிவாளர் கோபி அவர்கள் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை பல்கலைக்கழகம் மட்டும் அதன் கீழுள்ள உறுப்பு கல்லூரிகளுக்கும் சேர்த்தே அனுப்பி உள்ளார்.
அதன்படி சுற்றறிக்கையில் பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை என உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவர்கள் கல்வியில் கவனத்தை குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உத்தரவு என்கிறார்.
மாணவர்கள் கல்வியில் கவனத்தை குவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கூடாது பேசக்கூடாது என்றால் இது பாசிசத்தின் உச்சம். அதைத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவு துணைவேந்தர் செய்து வருகிறார்.
இதை இன்று பல்வேறு மாணவர் அமைப்புகளும் முற்போக்காளர்களும் பேராசிரியர்களும் கண்டித்து வரும் வேளையில் திராவிட மாடல் என்று பேசிக்கொள்ளும் திமுக அரசு மௌனமாக வேடிக்கை பார்க்கிறது.
மோடி அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் வராத மாநிலங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை ஆளுநர்களாக நியமித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஆளுநர்கள் இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சக்திகளை துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் தான் இந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்.
படிக்க :
♦ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது !
♦ மருத்துவத்தில் அரங்கேறும் மனுதர்மம் ! பார்ப்பன மேலாண்மையை முறியடிப்போம் !!
துணைவேந்தராக அமர்த்தப்பட்ட பிறகு வேதசக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ன் புராண குப்பைகளையும் பிற்போக்கு குப்பைகளையும் பரப்புவதற்கு ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் கருத்தரங்கம் கலைஞர் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்துவதாக இருந்தது. இது பல்வேறு தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. அத்துடன் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் துணைவேந்தர் தனது பாசிச கரங்களை நீட்டி உள்ளார். அதற்குத்தான் இந்த அரசியல் பேச தடை உத்தரவு.
மாணவர்கள் அரசியல் பேசாமல் இருக்க முடியுமா?
காசு இருப்பவனுக்குதான் கல்வி என்று ஒட்டுமொத்த கல்வியையும் தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். அதற்காகத்தான் நீட் தேர்வு க்யூட் தேர்வு புதிய கல்விக்கொள்கை என அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள். இதனால் கல்வி இழக்கும் ஏழை பின்தங்கிய மாணவர்கள் இதை எதிர்த்துப் பேசாமல் இருக்க முடியுமா?
சமீபத்திய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உத்தரவுப்படி, சில இலட்சங்கள் கட்டணமாக செலுத்தாமல் கல்வி கற்க முடியாது. மாணவர்கள் வரவில்லை என்றால் அதற்காக கட்டணத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை என பகிரங்கமாக காசில்லாதவன் படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற உத்தரவை பிறப்பித்தார்கள். இதையெல்லாம் மாணவர் சமுதாயம் கேள்வி எழுப்பாமல் வேடிக்கை பார்க்க முடியுமா?
சேலம் சுற்றுவட்டார பகுதிகளிலேயே எட்டுவழிச் சாலையை கொண்டுவர துடிக்கிறார்கள். இயற்கை வளங்கள், கனிம வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக தொடர்ச்சியாக வேலை நடக்கிறது இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
இன்று நாட்டினுடைய பொது சொத்துக்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு வேலை என்பது நீக்கப்பட்டு மாணவர்களும் இளைஞர்களும் நிரந்தர கூலி அடிமைகளாக மாற்றப்பட இருக்கிறார்கள். இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
இன்னொரு பக்கம் இதே பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மாணவர்களை மதவெறியூட்டி சாதிவெறியூட்டி கலவரங்களை நடத்துகிறது. சமீபத்தில் கூட கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையை திட்டமிட்டு கிளப்பி மாணவர்களை மதவெறிக்கு ஆழ்த்தி இஸ்லாமிய பெண்களின் கல்வி உரிமையை பறித்து இன்று கல்வியை விட்டே வெளியேற்றி உள்ளார்கள். இதைப்பற்றி நாம் பேசாமல் இருக்க முடியுமா?
இதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆதரவு மாணவர் அமைப்புகள் புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து கார்ப்பரேட் கொள்ளையை ஆதரித்து நாட்டை விற்பதை ஆதரித்து போராடுகிறார்கள் இவர்களை எதிர்த்துப் பேசாமல் இருக்க முடியுமா?
பேசக் கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம். அப்படிப்பட்ட பாசிச வேலையைத்தான் இந்தத் துணைவேந்தர் ஜெகநாதன் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல மக்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இன்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி செய்ய முடியவில்லை. ஏனென்றால் இவர்கள் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாட்டை தீவிரமாக விற்று வருகிறார்கள் அது என்றைக்கும் மக்களுக்கு எதிரானது தான்.
இந்த பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய – மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய – மிக முக்கியமான சக்திகள் மாணவர்கள் இளைஞர்கள் தான். வரலாறு முழுவதும் அதைத்தான் சொல்கிறது. இந்தியாவிலேயே கூட சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பகத்சிங் போன்ற இளைஞர்களின் வருகை மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அன்று பிரிட்டிஷ்க்கு ஆதரவாக செயல்பட்ட காந்தியின் செல்வாக்குக்கு நிகராக பகத்சிங் மற்றும் புரட்சிகர தோழர்களின் செயல்பாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது.
இன்றும் கூட ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் மாணவர்கள் முன்னணியில் நின்று மக்களுக்கு மாபெரும் நம்பிக்கையாக இருக்கிறார்கள். சமூக மாற்றத்தை சாதிக்கக் கூடிய புரட்சியின் முன்னணி சக்திகளே மாணவர்கள் தான்.
அதனால்தான் மாணவர்களைக் குறி வைக்கிறார்கள் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பல். அதனால்தான் அவர்களே எழுதி வைத்துள்ள பெயரளவிற்கான பேச்சுரிமை என்பதைக்கூட மறுக்கிறார்கள். ஆதலால் இதை அனுமதித்தோம் என்றால் மாணவர்கள் மட்டுமல்ல அடுத்ததாக தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் என அனைவரையும் அடிமைப் படுத்துவார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் நமது ஜனநாயக உரிமையை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதுதான் மேற்கண்ட பல்கலைக்கழகத்தின் உத்தரவு நமக்கு எடுத்துக் காட்டுவது.
நீட்டப்படும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் கொடுங்கரங்களை உடைக்க உழைக்கும் மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபடுவோம்! மாணவர்களே நாம் இப்போது விட்டால் எப்போதும் அடிமைதான்!

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

1 மறுமொழி

 1. பாசிச மோடி அரசால் உருவாக்கப்படும், அர்பன் சங்கிகளின் பதுங்கு குழிகள் இவை.குறிப்பாக, ஊழலில் டாக்டர் பட்டம் பெற்ற பெருச்சாளிகள் பதுங்கியுள்ள இடம்.
  கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர் சாமிநாதன். இந்த காலகட்டத்தில் பேராசிரியர் மற்றும் விரவுரையாளர் பணிகளுக்கு 154 பேர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணிக்கு 47 பேர் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட அவர்களைத் தேர்ந்தெடுத்து சான்றிதழ் தணிக்கை செய்யப்பட்டது. இந்த தணிக்கையில் போலி சான்றிதழ்களை கொண்டு தகுதி இல்லாத நபர்களை பணி நியமனம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  2016 முதல் 2019 ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டுகளில் முறையான கட்டமைப்பு இல்லாத கல்லூரிகள் தொடங்கவும், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் முறைகேடாக அனுமதி அளித்து இருப்பது அம்பலமாகியுள்ளது.
  பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 5 கல்லூரிகளில் ரூபாய் 3.26 கோடி வரை லஞ்சம் வாங்கி மாட்டினார்.
  பதிவாளர் அங்கமுத்து தன் மீதான புகார்களுக்கு பயந்து கடந்த 2017-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி இதன் கதை நீளூ..கிறது.
  எதிர்காலத்தில் டெல்லியில் மோடி பதுங்க உருவாக்கப்படும் விஸ்டா மர்ம்மாளிகையின் தப்பிக்கும் பின் வாசல்களாக(மூளையாக) இயங்குபவைதான் இந்த பல்கலைக்கழகங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க