10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன் அரசா?
அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி : ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மன நல ஆலோசகரா? மாணவர் நலன் கொண்ட அரசா?
கடந்த ஜூன் 20-ம் தேதி 10,12-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தாலும், மதிப்பெண் குறைவாகப் பெற்றதாலும் விரக்தியடைந்த மாணவ, மாணவிகள் ஜுன் 21 அன்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
பத்து நாட்களுக்கு முன்புதான் ஆந்திராவில் இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து 34 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை மீண்டும் நம் முன்னால் நிறுத்துகிறது தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
இதுபோக, பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வில் தமிழில் 47 ஆயிரம் பேரும் கணிதத்தில் 83 ஆயிரம் பேரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்த நிலைமைகளைப் பற்றியெல்லாம் அமைச்சர்களும் அதிகாரிகளும் கல்வியாளர்களும் மனநல ஆலோசகர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி “10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் தவறான முடிவு எடுக்க வேண்டாம்” என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் இந்தப்பேச்சு எதைக் காட்டுகிறதென்றால், மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதாக மாணவர்கள்மீது பழியைப்போட்டு கல்வித்துறையின் நடவடிக்கைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பரிசீலிக்காமல் மூடிமறைத்து தங்களை கருணை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளவதற்கான வேடத்தைத்தான்.
அமைச்சரின் பேச்சை கண்டித்து பெரிய அளவில் கண்டன குரல்கள் எழும்பாதது வேதனைக்குரிய விஷயம். இந்த எதிர்ப்புக் குரல்கள் இல்லாததால்தான் இவர்களால் கூச்சநாச்சம் இல்லாமல் இப்படியெல்லாம் மாணவர்கள்மீது பழியைப் போட முடிகிறது.
கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடம் செல்வதே பெரிய அளவில் தடைபட்டது. ஆன்லைன் வகுப்புகள் பெரிய அளவில் பயன்தரவில்லை. பெரும்பாலான பெற்றோர்களால் ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர முடியவில்லை. மக்களின் வறுமைநிலை காரணமாக மாணவர்களும் கிடைக்கும் வேலைக்கு செல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதுபோக கஞ்சா போதை பழக்கங்களுக்கும் ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையாகினர். கல்வியிலிருந்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் விலகி நின்றனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அன்று வேடிக்கை பார்த்தது அரசு.
அதன்பிறகு கொரோனா காலகட்டம் முடிந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “கொரோனா ஊரடங்கால், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளை தேடி, பெற்றோரும், மாணவர்களும் வருகின்றனர். அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், போதுமான ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என பேசினார்.
கொரோனா காலச் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை புதியதாக 5.80 இலட்சம் உயர்ந்துள்ளது. இப்படி தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியை நோக்கி இலட்சக்கணக்கான மாணவர்கள் வந்துள்ளனர். இந்த நிலைமைக்குப் பொருத்தமாக இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
அதன்பிறகு, மாணவர்களின் கற்றல் குறைபாட்டைப்போக்க இல்லம்தேடி கல்வி கொண்டுவருவதாக திட்டத்தை அறிவித்தார்கள். ஆசிரியர்கள், பள்ளிக் கூடங்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை காட்டிலும் இல்லம்தேடி கல்விக்கு மேற்பார்வையிட அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசால் நிர்பந்திக்கப்பட்டனர். இதனால் பள்ளிக் கல்வி பாதியில் பரிதவித்தது.
இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் ஒரு பக்கம் மாணவர்கள் வருகை அதிகம்; இன்னொரு பக்கம் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆசிரியர்களை மாற்று வேலைக்கு அனுப்பியது; இதெல்லாம் மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றத்தை கொண்டு வரவில்லை என்பதுதான் எதார்த்தம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அதன்பிறகு தேர்வு நடத்துவதைப் பற்றி எந்த முடிவும் செய்யாமல்; அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
கணிதம் போன்ற படத்தில் இவ்வளவு பேர் தோல்வி அடைந்து இருப்பது எதைக் காட்டுகிறது என்றால் மாணவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை என்பதுதான் எதார்த்தமாக தெரிகிறது.
இதுபோக, மாணவர்களின் நிலைமையை கணக்கில் கொள்ளாமல் கடினமான வினாத்தாள்கள் தேர்வில் கொடுக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் இந்தக் கல்வித் துறையின் அவலங்களை எழுந்து வந்து கேள்வி கேட்கப்போவதில்லை. தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவர்களுக்கோ மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் அதற்காக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நிலைமைக்கு கல்வித்துறை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத இந்த அரசுக்கு யார் மனநலஆலோசனை சொல்வது.
மனநல ஆலோசகர்கள் தொடர்ச்சியாக கூறுவதெல்லாம், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்; உற்சாகப்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் கவனமாக பார்க்க வேண்டும்; பெற்றோர்கள் கவனமாக பார்க்க வேண்டும். இதுதான். அரசின் நடவடிக்கை பற்றி பேசுவதில்லை. பாதிப்பை ஏற்படுத்துபவனுக்கு ஆலோசனை இல்லை பாதிக்கப்படுபவர்களுக்குதான் ஆலோசனை என்ன மண்ணாங்கட்டி மனநல ஆலோசனையோ தெரியவில்லை!
தற்போதைய சூழலில் கல்வி என்பது மதிப்பெண் அடிப்படையிலேயே உள்ளது. அதை கண்டிப்பாக மாற்ற வேண்டும். தனி நபர் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும் அதைப்பற்றி ஏன் அரசு அக்கறை கொள்வதில்லை என பார்க்க மறுக்கிறார்கள்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கைகளை அரசு அனுமதித்த பிறகு கல்வி என்பது காசுக்காக விற்கப்படும் ஒரு பொருளைப்போல் ஆகிவிட்டது. அரசும் படிப்படியாக கல்வியில் இருந்து ஒதுங்கி கொண்டே போகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல எங்கும் முளைத்துள்ளன. கடும் போட்டா போட்டியில் இறங்கி தங்கள் பள்ளிகள் இலாபம் சம்பாதிக்க கடும் போராட்டங்களை நடத்துகின்றனர். அதில், முக்கியமானதுதான் மதிப்பெண். மதிப்பெண்களை காட்டியே பெற்றோர்களை தங்கள் பக்கம் கவர்ந்து இழுக்கின்றனர்.
பல ஆயிரங்களிலும் இலட்சங்களிலும் பணங்களை வசூல் செய்கின்றனர். தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும் அவர்களின் மதிப்பெண் முறையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்துக்கு இதுநாள் வரை உற்சாகமூட்டி ஊக்கப்படுத்தி வந்துள்ளது அரசு.
இந்த ஒட்டுமொத்த போட்டாபோட்டியில் மக்களுக்கும் மாணவர்களுக்கும் மதிப்பெண் என்பதே முக்கியமானது என்ற சிந்தனையை ஆழப் பதிய வைத்துள்ளனர்.
இதனால் தேர்வுக்கு முன்பே அதிக மதிப்பெண் எடுக்க சொல்லி நிர்பந்தம் கொடுக்கிறார்கள். மதிப்பெண் எடுத்தால் மட்டும்தான்; இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமைக்கு மாணவர்களைத் தள்ளியுள்ளியது தனியார்மயமும் அதை தீவிரமாக அமல்படுத்திய அரசும்.
கொரோனா காலகட்டம் இந்த நிலைமையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது என்பதைத்தான் 12 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மாணவர்களின்மீது வன்முறையை நிகழ்த்தியுள்ள தனியார்மயத்தின்மீது நாம் வன்முறையை நிகழ்த்தும்போதுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையை அமல்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசை தூக்கி எறிந்து மக்கள் நலன் கொண்ட அரசை நிறுவுவதன் மூலமே கல்வியை சேவையாக மாற்ற முடியும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கல்வியாளர்களின் கோரிக்கையும் கல்வி என்பது சேவை அது அனைவருக்கும் இலவசம் என்பதை உயர்த்திப் பிடிப்பதுதான். பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கொண்ட கூட்டணியை உருவாக்கி எதிர்த்துப் போராடுவோம்.
தோழர் ரவி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, புமாஇமு, தமிழ்நாடு. 94448 36642.