குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து குஜராத் 2002 படுகொலை தொடர்பான உள்ளடக்கத்தை நீக்கிவிட்டது.
கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு “பாடநூல் பகுத்தறிவு” பயிற்சியின் ஒரு பகுதியாக 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து குஜராத் கலவரங்கள் பற்றிய உள்ளடக்கத்தை NCERT கைவிட்டுள்ளது.
“நக்சலைட் இயக்கத்தின்” வரலாறு குறித்த புத்தகத்தின் பக்கம் 105 மற்றும் “எமர்ஜென்சி தொடர்பான சர்ச்சைகள்” என்ற தலைப்பில் 113-117 பக்கங்களும் கைவிடப்பட்டுள்ளன.
கடந்த 2002 குஜராத் கலவரம் கோத்ராவில் ஒரு ரயில் பெட்டியில் இருந்த 58 இந்து யாத்ரீகர்கள் (கரசேவகர்கள்) எரித்துக் கொல்லப்பட்டதை அடுத்து வெடித்தது, இது பல மாதங்களாக நீடித்த பெரிய அளவிலான வன்முறைக்கு வழிவகுத்தது. அடுத்த சில மாதங்களில், 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர் மற்றும் கிட்டத்தட்ட 2,500 பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பல்வேறு அறிஞர்கள், அமைப்புகள், முற்போக்காளர்கள் குஜராத் படுகொலையை முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஓர் ‘இனப்படுகொலை’ என்று கூறி, இந்த கொலைக்கு மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசும் உடந்தையாக இருந்துள்ளது என்று கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும், கடந்த 2012-ம் ஆண்டில், குஜராத் படுகொலையை பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அரசின் உடந்தை மற்றும் மோடியின் பங்கு பற்றிய குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
தற்போது குஜராத் கலவரம் தொடர்பான உள்ளடக்கத்தை 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தி நீக்குவது தொடர்பாக NCERT-ன் குறிப்பில், நீக்குதல்கள் என்பது பகுத்தறிவு செயல்முறையின் ஒரு பகுதியாகும். கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மீதான உள்ளடக்கச் சுமையைக் குறைக்க வேண்டியது அவசியம். தேசிய கல்விக் கொள்கை-2020 இதையே வலியுறுத்துகிறது. இந்தப் பின்னணியில், அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை பகுத்தறிவுபடுத்தும் முயற்சியை என்.சி.இ.ஆர்.டி மேற்கொண்டுள்ளது.
“குஜராத் கலவரம், அரசு இயந்திரம் மதவெறிக்கு ஆளாகிறது என்பதைக் காட்டுகிறது. குஜராத்தைப் போலவே, அரசியல் நோக்கங்களுக்காக மத உணர்வுகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரிக்கின்றன. இது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று நீக்கப்பட்ட பத்திகளில் ஒன்று கூறுகிறது.
அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், “(குஜராத்) முதலமைச்சருக்கு அவர் சொன்ன ஒரு செய்தி, அவர் ‘ராஜ தர்மத்தை’பின்பற்ற வேண்டும் என்பதுதான். “ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களிடையே சாதி, மதம் மற்றும் மதத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது” என்று வாஜ்பாய் கூறியதாக அது மேற்கோளிட்டுள்ளது.
குஜராத் கலவரத்தை பற்றிய உண்மைகளில் சிலவற்றை மட்டுமே பாடத்திட்டத்தில் இருந்து வந்தது. அதுவும் தற்போது காவி பாசிஸ்டுகளால் பொருத்துக்கொள்ள முடியவில்லை போலும். தனக்கு சாதகமான வரலாறுகளை தவிர மற்ற வரலாறுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வேலையில் இறங்கியுள்ளது சங் பரிவார கும்பல். வீரம், தியாகம், பகுத்தறிவு பாடங்களை நீக்கிவிட்டு, புராணக்குப்பைகளையும், சாதிய பாகுபாடும் பெண்ணடிமை தனம் நிறைந்த பாடங்களை திணித்து வருகிறது.
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும். சங் பரிவாரத்திற்கு எதிரான பகுத்தறிவு, புரட்சிகர, கம்யூனிச சிந்தனைகளை மாணவர்கள் இளைஞர்கள் மனதில் விதைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.