உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !

ஒருபுறம் இந்துமதவெறி வெறுப்புப் பிரச்சாரங்களை, கலவரங்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. மறுபுறம், பள்ளி சிறுவர்களின் பாடத்திட்டத்தில் புராணக்குப்பைகளை புகுத்துகிறது காவிக் கும்பல்.

0

டந்த மே 1-ம் தேதியன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் தன்சிங் ராவத், கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் இந்து மத நூல்களை உள்ளடக்கியதாக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“பொதுமக்களிடமிருந்தும், கல்வியாளர்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்ற பிறகு, வேதங்கள், பகவத் கீதை, ராமாயணம் மற்றும் உத்தரகாண்டின் வரலாறு ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்போம்” “இந்த நூல்களை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவதன் நோக்கம் பள்ளி மாணவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இந்திய அறிவை அறிமுகப்படுத்துவதாகும்” என்று கூறினார்.

இந்தியாவின் அறிவு, வேதங்கள், பகவத் கீதை, ராமாயணம் போன்ற இந்துத்துவ புத்தகங்கள் இருக்கிறது என்கிறார் அமைச்சர். ஆனால் ஆபாசக் கதைகளும், புராணப் புரட்டுகளும், ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் மூடத்தனங்களும், பெண்ணடிமைத்தனத்தை மனமுவந்து ஏற்கும் சிந்தனைகளும்தான் இந்த இந்துத்துவ புராணக் குப்பைகளில் நிரம்பி வழிகிறது என்பது ஊரறிந்த உண்மை.

தேசிய கல்விக் கொள்கையும் வரும் அமர்வில் அமல்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கை ஜூலை 2020-ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் சமஸ்கிருதத்தைப் படிப்பதையும் ஐந்தாம் வகுப்பு வரை ஒருவரின் தாய்மொழி அல்லது பிராந்திய மொழிகளில் கற்பித்தலையும் ஊக்குவிக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் கீழ் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை தயாரிக்க மே 2-ம் தேதி துறை அலுவலர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

படிக்க :

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸின் கவிதை நீக்கம் !

‘இந்தியில் பேசாதவர்கள் அந்நிய சக்திகள்’ – உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் !

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசமும் பகவத் கீதையை தங்கள் கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கவிருக்கின்றன. மார்ச் 17 அன்று, குஜராத் மாநிலத்தின் கல்வி அமைச்சர் ஜிது வகானி, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு நடத்தும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இந்து வேதத்தை சேர்க்கும் என்று தன்சிங் ராவத் கூறினார். இமாச்சல பிரதேச கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் பள்ளி மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 27 அன்று, கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், பகவத் கீதை, பைபிள், குரானைப் போன்றதல்ல; அது மத நூல் அல்ல. அது வாழ்க்கையின் மதிப்புகள் பற்றி பேசுகிறது என்று கூறினார்.

பகவத் கீதையில் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வாழ்க்கை மதிப்புகள் இருக்கின்றது என பாஜக ஆளும் மாநிலங்களில் அமைச்சர்கள் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. புராணக் குப்பைகளின் ஒன்றான பகவத் கீதையை புனித நூல் என்று சொல்வதே அயோக்கியத்தனம். அதிலும் அது மாணவர்களுக்கு வாழ்க்கை மதிப்புகளை கற்றுத்தரும் என்பது மதி கொண்ட மனிதர்கள் யாரும் ஒருபோதும் நம்பமாட்டாரகள்.

பாஜக ஆளும் மாநிலங்கள் தங்கள் பள்ளிப் பாடத்திட்டங்களில் இந்து மத நூல்களைச் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2022 – 2023 பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாகிஸ்தானிய உருது கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் கவிதையின் இரண்டு பகுதிகளை நீக்கியுள்ளது.

ஒருபுறம், மசூதிகளில் ஓதும் அசான் இசையை தடை, இந்துமதப் பண்டிகைகளில் முஸ்லீம் வியாபாரிகள் பொருட்கள் விற்க தடை. இறைச்சி விற்க தடை என பல்வேறு ஒடுக்குமுறைகளின் மூலம் முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்துமதவெறி வெறுப்புப் பிரச்சாரங்களை, கலவரங்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. மறுபுறம், பள்ளி சிறுவர்களின் பாடத்திட்டத்தில் புராணக்குப்பைகளை புகுத்துகிறது காவிக் கும்பல்.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து முஸ்லீம் மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்குள் வர தடை விதித்து அரசும் காவிக் குண்டர் படையும் தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது. தற்போது உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் உண்மை வரலாறுகளை நீக்குகிறது. பகவத் கீதை, இராமாயணம், வேதங்கள் போன்ற புராணக் குப்பைகள் நிறைந்த புத்தகங்களை பொதுமைப்படுத்தி புகுத்தி வருகிறது. வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வெளியே வந்த கோழைகளை வீரர்களாக சித்தரிக்க முயற்சிக்கிறது. இந்துமதவெறி கருத்துக்களும் பெண்ணடிமைத்தன கருத்துக்களும் பள்ளி மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்டால், அவர்கள் மதவெறியார்களாகவும், ஆணாதிக்கவெறியர்களாகவும் மாற்றப்படுவார்கள் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க