‘இந்தியில் பேசாதவர்கள் அந்நிய சக்திகள்’ – உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் !

இந்தி திணிக்கப்பட்டால் நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்படுவது உறுதி. தற்போது இந்தியில் பேசாதவர்கள் இந்நாட்டில் இருக்கக் கூடாது என்று வெளிப்படையாக பேசத்தொடங்கி விட்டார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள்.

0
ந்தி திணிப்பு பற்றிய பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், இந்தியை விரும்பாதவர்கள் வெளிநாட்டினர் என்றும், இந்தி பேசாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு இடத்தில் குடியேற வேண்டும் என்றும் கூறி வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.
கேஜிஎஃப் 2 வெற்றி குறித்த நடிகர் கிச்சா சுதீப்பின் கருத்துக்களுக்கு நடிகர் அஜய் தேவ்கன் ட்வீட் செய்ததில் இருந்து இந்தி பற்றிய பிரச்சினை மீண்டும் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் படங்களை தென்னிந்திய மொழிகளின் டப்பிங் செய்து வெளியிடுவதன் மூலம் இலாபம் ஈட்ட முயற்சிப்பதாக சுதீப் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த அஜய் தேவ்கன் “அப்படியானால், கன்னட திரைப்படங்கள் ஏன் இந்தியில் டப் செய்யப்படுகிறது” என்று இந்தியில் ட்விட் செய்துள்ளார்.
இந்த ட்விட்டர் பரிமாற்றம் சமூக ஊடகங்களில் ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியது.மேலும் இரண்டு முன்னாள் கர்நாடக முதல்வர்களான சித்தராமையா மற்றும் எச்டி குமாரசாமி ஆகியோர் சுதீபுக்கு ஆதரித்து அஜய் தேவ்கனை வசைப்பாடினார்கள்.
படிக்க :
♦ பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !

♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த, உத்தரப்பிரதேச மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், “இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். இந்தியை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு அந்நியர் அல்லது அந்நிய சக்திகளுடன் தொடர்புடையவர் என்று கருதப்படுவீர்கள். நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது – இந்தியா ‘இந்துஸ்தான்’ – அதாவது இந்தி பேசுபவர்களுக்கான இடம். இந்துஸ்தான் இந்தி பேசாதவர்களுக்கு ஏற்ற இடமல்ல. அவர்கள் இந்த நாட்டை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும்” என்றார்.
அரசியலமைப்பின் 343-வது பிரிவின் படியும், பிற்கால திருத்தத்தின்படியும், இந்தி ஆங்கிலத்துடன் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் அலுவல் மொழிதான் இந்தி. மாநிலங்களும் ஒரு மொழியை தங்கள் அதிகாரப்பூர்வ மொழியாக நியமிக்கலாம். தமிழ்நாட்டின் அலுவல் மொழி தமிழ், மேற்கு வங்கத்தின் அதிகாரப்பூர்வ மொழி பெங்காலி.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் இந்தியில் பேச வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி ஏற்கப்பட வேண்டும் என்றும் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்து விவாதத்தைத் தூண்டினார்.
அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், இந்தி பேசாதவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுங்கள் என்று இந்து மதவெறியை தூண்டிவிடுகிறார்.
ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி என்ற இந்துராஷ்டிர திட்டத்தின் அடிப்படையிலேயே மோடி அரசு இந்தியை பல துறைகளில், பல மாநிலங்களில் திணிக்க முயற்சித்து வருகிறது. இந்தி திணிக்கப்பட்டால் இந்தியாவின் பன்முகத்தன்மை, பன்முகக் கலாச்சாரம் அழிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்தியில் பேசாதவர்கள் இந்நாட்டில் இருக்கக் கூடாது என்று வெளிப்படையாக பேசத்தொடங்கி விட்டார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள். இந்தியாவின் பல்வேறு மக்களின் மொழிகளை அழிக்க முற்படும், இந்தி பேசுபவர்களை தவிர மற்றவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற முற்படும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களத்தில் இறங்கி வீழ்த்துவதே நம் உடனடி பணி.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க