இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

“நாங்கள் எங்கள் செயல்பாட்டை இன்னும் துரிதப்படுத்தினால், 10 முதல் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரத்தை அடைந்து விடுவோம் என்று சொல்கிறேன்” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.

0
டந்த ஏப்ரல் 10 அன்று வடமாநிலங்களில் ராம நவமி என்ற பெயரில் திட்டமிட்டு கலவரங்களை நடத்தியது சங்கப் பரிவாரக் கும்பல். இந்த கலவரங்கள் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு, இந்துவெறியர்களின் நிகழ்ச்சி ஒன்றில் அகிம்சையைப் பற்றி பேசியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று ஹரித்வாரில் நடைபெற்ற இந்துசாமியார்கள் ஒன்றிணைந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பகவத், இந்து ராஷ்டிரம் என்ற கனவு இன்னும் சில ஆண்டுகளில் நிறைவேற்றிவிடுவோம் என்று கொக்கரித்துள்ளார்.
“நீங்கள் இந்துராஷ்டிரத்தை அடைய 20 முதல் 25 ஆண்டுகள் ஆகலாம் என்று பேசினீர்கள், ஆனால், நாங்கள் எங்கள் செயல்பாட்டை இன்னும் துரிதப்படுத்தினால், 10 முதல் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரத்தை அடைந்து விடுவோம் என்று சொல்கிறேன். அந்த காலங்களில் நாம் சுவாமி விவேகானந்தரும் மகரிஷி அரவிந்தரும் கற்பனை செய்த இந்தியாவைப் (இந்துராஷ்டிரத்தை) பார்ப்போம்” என்று மோகன் பகவத் கூறினார்.
படிக்க :
40000 ஆண்டுகளாக இந்தியர்களின் மரபணு மாறவில்லையாம் – மோகன் பகவத்தின் அண்டப் புளுகு
மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?
“எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அடைய முடியாது; என்னிடம் அதிகாரம் இல்லை. அது மக்களிடம் உள்ளது. கட்டுப்பாடு அவர்களிடம் உள்ளது. அவர்கள் தயாராக இருக்கும்போது, ​​அனைவரின் நடத்தையும் மாறுகிறது” “அச்சமின்றி முன்னுதாரணமாக இணைந்து நடப்போம். அகிம்சை பற்றி பேசுவோம்; ஆனால் தடியுடன் நடப்போம்; அந்த தடி மிகவும் கனமானதாக இருக்கும்” “எங்களுக்கு யாருடமும் பகையோ, வெறுப்போ இல்லை. உலகம் அதிகாரத்தை மட்டுமே புரிந்து கொள்கிறது. நம்மிடம் பலம் இருக்க வேண்டும் அது புலப்பட வேண்டும்” என்கிறார் பகவத்.
“மதத்தின் நோக்கங்களே இந்தியாவின் நோக்கங்கள். சுவாமி விவேகானந்தர் மதமே இந்தியாவின் உயிர் என்றார். மத முன்னேற்றம் இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை. சனாதன தர்மம் என்பது இந்துராஷ்டிரம் மட்டுமே. இந்தியா தனது முன்னேற்றப் பயணத்தைத் தொடங்கிவிட்டது, அதை இப்போது நிறுத்த முடியாது.” “அதை நிறுத்த விரும்புவோர் அகற்றப்படுவார்கள் அல்லது அழித்தொழிக்கப்படுவாரக்ள், ஆனால் இந்தியா அதை நிறுத்தாது” “இப்போது வாகனம் முடக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை இடையில் நிறுத்த முடியாது. எனவே குறுக்கே யாரும் வந்துவிடக்கூடாது.” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
“நமது பன்முகத்தன்மையை நாம் உள்வாங்கியிருக்கிறோம். நமது பன்முகத்தன்மையையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளோம். ஆனால் பன்முகத்தன்மை காரணமாக நாம் (ஒருவருக்கொருவர்) வேறுபட்டவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்றாக அணிவகுத்தால், நமது இலக்கை (20-25 ஆண்டுகளில்) அடைவோம்” என்கிறார் பகவத்.
நாளுக்கு நாள் மதக்கலவரங்கள் அதிகரித்துவரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு, இந்துராஷ்டிரத்தின் துரிதமான செயல்பாடுகளையே நமக்கு உணர்ந்துகிறது.
படிக்க :
♦ படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
சமீபத்தில் நடைபெற்ற ராம நவமி கலவரங்கள் அதற்கு ஒரு நல்ல உதாரணம். பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலவரங்களை நடத்தியுள்ளனர் சங்கப் பரிவார கும்பல். டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சமைக்கக்கூடாது என்றுகூறி ஆறு மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி. அத்தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு பிறகு, பல்கலைக்கழக வாயிலில் காவிக் கொடியை பறக்கவிட்ட இந்து சேனா என்ற காவிக் குண்டர்கள் ‘காவி அவமதிக்கப்பட்டால் கடுமையாக நடவடிக்கைகள் அரங்கேறும் என்று எச்சரித்தது சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. அதேபோல ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இரண்டு செங்கலையும் படங்களையும் வைத்து அனுமன் கோவில் என பூஜை நடத்தி வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வரும் இந்துராஷ்டிர கனவை தகர்த்தெறிய நாட்டுமக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங்கப் பரிவாரக் கும்பலின் கூக்குரலை புறம் தள்ளிவிட்டு உழைக்கும் வர்க்கமாய் அணிதிரள வேண்டிய தருணமிது.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர், இந்தியன் எஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க