நேற்று முளைத்த கோவிட்-19 வைரஸின் மரபணு கூட நாளுக்கு நாள் மாறுகிறது ஆனால் “இந்தியர்களின் மரபணு கடந்த 40 ஆயிரம் ஆண்டுகளாக மாறாதிருப்பதாக” ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். இமாச்சலப்பிரதேசம், தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதை கூறிய அவர் “தான் கூறுவது பொய்யில்லை” என்றும் வலிந்து தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னரும் ஒருமுறை மோகன் பகவத் இப்படி கூறியிருக்கிறார். கடந்த 2021, ஜூலையில், ஆர்.எஸ்.எஸ்.-ன் முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மும்பையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத் இதே கருத்தை பேசியிருந்தார். மேலும் முன்னோர் பெருமை,  தேசியவாதம் மட்டுமே இந்து முஸ்லீம்களை ஒருங்கிணைப்பதற்கான அடிப்படை என்று கூறியிருந்தார்.
இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் முதன்மையான இலக்குகளில் ஒன்று. அதன் முன்னெடுப்பாகதான் மோடி அரசாங்கம் ஒரே நாடு, ஒரே  தேர்தல், ஒரே ரேசன் உள்ளிட்ட திட்டங்களை சட்டங்களாக்கியுள்ளது. சமீபத்தில், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது.
இந்து பெரும்பான்மையினரின் கீழ் மத சிறுபான்மையினரைக் கொண்டு வருவதும், இந்து சிறுபான்மையின பார்ப்பன பனியா கும்பலின்கீழ் இந்துப் பெரும்பான்மையினரை கொண்டு வருவதும்தான் அகண்டபாரதத்தின் அடிப்படை. ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பார்கள் அதுபோல மோகனின் “மாறாத மரபணு” கூற்றுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ்.-ன் இப்படியான பார்ப்பனிய நலன் அடங்கியுள்ளது.
படிக்க :
சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !
அறிவியல் என்ன கூறுகிறது? என்பதைப் பார்ப்போம். அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளின் படி, 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனின் மரபணுவும் தற்கால மனிதரது மரபணுவும் ஒன்றல்ல. இன்றைய மனித சமூகம் பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்திருக்கிறது. இந்த இடப்பெயற்ச்சி மூலம்தான் உலகம் முழுதும் மனித சமூகம் பல்கிப் பெருகியிருக்கிறது.
ராகிகர்ஹியில் (Rakhigarhi) கிடைத்த கி.மு 2,600 ஆண்டுகள் காலகட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டின் மரபணுவை ஆய்வு செய்ததில், ஐரோப்பிய – ஆசிய ஸ்டெப்பி (ஆரிய) மரபணு கூறுகள் எதுவும் அந்த எலும்புக்கூட்டில் இல்லை. ஆனால், தற்போதைய இந்தியர்களில் ஏறக்குறைய பலருக்கும் ஸ்டெப்பி மரபணு கலந்துள்ளது. இது ஆரியர்கள் இடப்பெயர்வின் மூலம் இந்திய நிலப்பகுதிக்குள் வந்திருப்பதை உறுதி செய்கிறது. 4,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த பெண்ணின் மரபணுவுடன் பொருந்திபோகும் மரபணு கொண்டவர்கள் எண்ணிக்கையே மிகவும் சொற்பம் எனில் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய மரபணு எப்படி தற்கால இந்தியருடன் ஒன்றிப்போகும் ?

புவிப்பரப்பில் வாழும் இன்றைய மனித சமூகம் வெவ்வேறு காலக்கட்டங்களில் நான்கு வகையான இடப்பெயர்ச்சிகளின் விளைவினால் உருவாகியுள்ளதாக மொழியியல், தொல்லியியல், மரபணுவியல் உள்ளிட்ட அறிவியல் துறைகளின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதை வரலாற்றாசிரியரான டோனி ஜோசப் தன்னுடைய “ஆதி இந்தியர்கள் – Early Indians” என்ற நூலில் விவரித்துள்ளார்.
மனித இடப்பெயற்வுகள் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து நடந்தேறியவை. வேளாண் கண்டுபிடிப்புகள், இயற்கைப் பேரழிவுகள், இனக் குழுக்களுக்கு இடையேயான மோதல்கள், வாணிபம், சந்தைகளுக்காக நாடு பிடித்தல் உள்ளிட்ட காரணங்களால் அவை நடந்தேறின.
முதல் மனித இடப்பெயற்ச்சி (Out of Africa Migration) ஏறக்குறைய  70,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவிலிருந்து தொடங்கி உலகம் முழுக்கப் பரவியது. கடைசியாக, 16 – 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க கண்டத்தில் முடிவுற்றது. இது பெரும்பாலும் இயற்கை பேரிடர்களால் நடந்தது.
அடுத்ததாக வேளாண் கண்டுபிடிப்புகளுடன் முன்னேறிய மனித சமூகத்தின் முன்னோடிகள் மெசப்படோமியா, இந்தியா, சீனா, எகிப்து என பரவியதில் அடுத்தக்கட்ட விரிவாக்கம் நடந்தேறியது. இந்த பரவல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்தது.
மூன்றாவதாக, இரதங்கள் தயரிப்பதிலும், உலோகவியல் துறையிலும், குதிரையேற்றத்திலும் விற்பன்னர்களான ஸ்டெப்பி புல்வெளியினர் (ஆரியர்) ஐரோப்பா, ஆசியா முழுவதும் கி.மு 3000 முதல் கி.மு 1,500 வரையான ஆண்டுகளில் பரவினர்.
நான்காவதாக, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்கள் உலகத்தின் பெரும்பாலான பகுதிகளை கடல்வழியாக பயணம்செய்து சந்தைகளுக்காக அடிமைப்படுத்தியதில் இனக்கலப்பு நடந்தேறியது.
மரபணு ஆய்வில் கிடைந்த பண்டைய டிஎன்ஏ
ஆனால், முந்தைய இடப்பெயர்வு கால இனக்கலப்புகள் போலல்லாது ஐரோப்பியர்கள் எண்ணிக்கை இந்த முறை மிகக்குறைவாக இருந்ததால் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், ஆப்பிரிக்காவில் தொடங்கிய முதல் இடப்பெயர்வும், ஸ்டெப்பி ஆரியர்களின் இடப்பெயர்வும் இந்திய மக்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் தன்மையையும் தீர்மானித்தது.
மேற்கிலிருந்து ஒன்றும், கிழக்கிலிருந்து ஒன்றுமாக வேளாண் தொடர்பான இரண்டு இடம்பெயர்வுகள் இந்திய மக்கள்தொகையின் தன்மையை மாற்றியிருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் புரட்சியைத் தொடங்கிய முதல் இந்தியர்கள் மற்றும் ஆரம்பகால ஈரானிய வேளாண் மக்களுடன் இனக்கலப்பிற்கு பிறகு மேற்கத்திய குடியேற்றங்கள் இந்தியாவில் நடந்தேறின.
சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, சீனா வேளாண்மையை மேற்கொண்டதன் விளைவாக தொடங்கிய மக்கள்தொகை இயக்கத்தின் முனை இந்தியாவை அடைந்ததும், அதனுடன் உலகின் பெரும் மொழிக்குடும்பங்களில் ஒன்றான ஆஸ்ரோ – ஆசிய மொழிகளை இங்கே கொண்டு வந்தபோது கிழக்கு இடம்பெயர்வு நடந்தேறியது.
ஐரோப்பிய – ஆசிய ஸ்டெப்பி இடப்பெயர்வு சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்தோ – ஐரோப்பிய மொழிகளை கி.மு 2000 – கி.மு 1500 வாக்கில் இந்திய நிலப்பகுதிக்குள் கொண்டு வந்தது.  2019-ல் வெளியான “தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் மனித மக்கள்தொகை உருவாக்கம்” என்ற ஆய்வுக்கட்டுரை இதை விரிவாக விளக்குகிறது. இந்த இடப்பெயர்வுகளால கி.மு 1,500-ம் ஆண்டில் இந்தியாவின் நான்கு பெரும் மனித சமூக பிரிவுகள் உருவாகிவிட்டன. அதன்பிறகு கி.பி 100 வரை நடந்ததை மரபணு ஆய்வுகள் விளக்குகின்றன.
கி.பி 100-க்கு பிறகு இந்தியாவின் தனிச்சிறப்பு வாய்ந்த வர்ணாசிரம சாதிய கட்டுமான இறுக்கத்தினால் ஏற்பட்ட அகமணமுறையினால் இதுபோன்ற இனக்கலப்புகள் நடப்பது சாத்தியமில்லாமல் போனது.
படிக்க :
ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு !
மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?
இந்தியாவின் அனைத்து மக்களின் மரபணுவிலும் குடியேற்றங்களின் வழித்தடங்கள் புதைந்துள்ளன. தென்னிந்திய மக்களின் மரபணுவிலும் ஸ்டெப்பி ஆரிய இனமக்களின் மரபணு தவிர முந்தைய இனக்கலப்புகளின் மரபணுக்கூறுகள் புதைந்தே உள்ளன என்று உறுதியாகக் கூறலாம்.
எந்த சாதியாக இருந்தாலும், எந்த மொழியினராக இருந்தாலும், எந்த பகுதியில் வாழ்ந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும் அவர் முதல் இந்தியரிடமிருந்தே (Out of Africa) வம்சாவளியைப் பெற்றுள்ளார். இனக்கலப்பிற்கு ஆளாகாத இந்தியர் என்று எவருமில்லை அதாவது இனக்கலப்பிற்கு ஆளாகாத எந்த மனித இனமும் உலகில் கிடையாது என்று உறுதியாகக் கூறலாம். எனவே “தூய்மையான இனம்” என்ற ஒன்றோ 40 ஆயிரம் ஆண்டுகள் “மாறாத மரபணு” என்ற ஒன்றோ எதார்த்தத்தில் கிடையாது.
மோகன் பகவத் புளுகுவதுபோல தேசியவாதமும் முன்னோர்கள் பெருமை பேசுதலும் இந்து -முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்காது. ஹிட்லர் பேசிய ஆரிய இனப்பெருமை யூத இனத்தையும், இலங்கையில் பௌத்த இனவெறி தமிழர்களையும், மியன்மரில் பௌத்த இனவெறி ரோஹிங்கிய முஸ்லீம்களையும் இன அழிப்பு செய்ததுதான் வரலாறு.
உண்மையில் அறிவியல் அடிப்படையிலான மனித சமூக இனப்பரவல் குறித்த புரிதலை உருவாக்குவதும், நாடுகளுக்கிடையேயான முதலாளித்துவ கோடுகள் அழிக்கப்பட்டு சோசலிசம் உருவாவதும்தான் ஒட்டு மொத்த மனித குலத்தையும் பாதுகாக்க வல்லது.

ஆறுமுகம்
செய்தி ஆதாரம் : த வயர்

1 மறுமொழி

  1. இது மோகன் பகவத்தின் RSS ஆட்சி. அவன் எச்சில் துப்பினாலும் செய்தி தான். இந்திய மக்களை மனுவின் கண்ணில் பார்க்கும் குருடன் இவன் . வழக்கம் போல் அறிவிழி செய்தி தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க