ந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்றுதான்” என்று கடந்த ஜூலை 5-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பாகவத் பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தா இப்படிப் பேசியது என வியப்படைய வேண்டாம். பாபர் மசூதியை இடித்த அதே ஆர்.எஸ்.எஸ். – சங்க பரிவாரக் கும்பலின் தலைவர் மோகன் பாகவத் தான் இப்படிப் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ”தி மீட்டிங் ஆஃப் மைண்ட்ஸ்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில்தான் இந்தப் பொன்னான கருத்தை தெரிவித்தார் பாகவத். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் அந்த நூலை எழுதியவர் இப்திகார் அகமது எனும் இசுலாமியர் ஒருவர்.

இந்தியாவில் முசுலீம்கள் தங்கக் கூடாது என வெறுப்புடன் ஒருவர் பேசினால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. பசு புனிதமான விலங்குதான். ஆனால் பசுப் பாதுகாவலர் என்ற பெயரில் பலரும் அப்பாவிகளைத் தாக்குகிறார்கள். இது இந்துத்துவாவிற்கு எதிரானது. பலர் மீது பொய்யான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.” என்றெல்லாம் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார் பாகவத்.

படிக்க :
♦ படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !

அதோடு நிற்கவில்லை. இந்தியாவில் இஸ்லாம் மதம் ஆபத்தில் இருப்பதாக முசுலீம்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் முசுலீம்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்பவர்கள் இந்துத்துவவாதிகள் அல்ல என்றும் கூறி ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார் பாகவத்.

உத்தரப் பிரதேசத்தில் ஏதேனும் தேர்தல் வரப் போகிறதா என்று நமது மண்டையில் ஒரு சந்தேகம் இந்தச் சமயத்தில் எழும் என்பதையும் முன்னறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட பாகவத், அதையும் தானே குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முஸ்லீம்கள் பற்றி அதிகம் கவலைப்படுகிறது, வாக்கு வங்கி அரசியலுக்காகச் செயல்படுகிறது என்று சிலர் பேசலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ஐப் பொறுத்தவரையில், இந்தியாவில் ஜனநாயகத்தை முழுமையாக நம்புகிறது. இங்கு இந்துக்கள், முஸ்ஸிம்கள் ஆதிக்கம் என்பதைவிட இந்தியர்கள் ஆதிக்கம் என்ற நிலையைத்தான் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார் பாகவத்.

தேர்தலுக்காக இதைச் சொல்லவில்லை என்று தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் மோகன் பாகவத். எங்காவது ஆர்.எஸ்.எஸ். தேர்தலில் பங்கேற்றுப் பார்த்திருக்கிறீர்களா? ஆகவே நம்புங்கள். ஆர்.எஸ்.எஸ்.-க்கும் உத்தரப் பிரதேச தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ்.-ன் இலக்கு இந்து ராஷ்டிரம் அமைப்பதுதான். ஆர்.எஸ்.எஸ்.-ஐப் பொறுத்தவரையில் சட்டமன்றத் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ தமது இலக்கை அடைவதற்கான சிறு உபகரணம் தான்.

மோகன் பகவத்

மோகன் பாகவத் கூறியதில் பல விசயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் அவர் கூறிய இந்துக்களுக்கான ‘இலட்சணங்களை’ வைத்துப் பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான ஒட்டுமொத்த சங்க பரிவாரக் கும்பலிலும் இருக்கும் யாரும் இந்துவாக இருக்க முடியாது.

ஏனெனில், முசுலீம்களையும் கிறிஸ்தவர்களையும் வந்தேறிகள் என்று அழைப்பதுதான் சங்க பரிவாரத்தின் அடிப்படை. அவர்களது குருவும் வெள்ளைக்காரனுக்கு நாவால் ஷூ பாலிஷ் செய்துவிட்டவருமான ‘வீர’ சாவர்க்கர் பற்றி அனைவரும் அறிந்ததே. அவர் ஒரு கடவுள் மறுப்பாளர். இந்து ராஷ்டிரம் பற்றிய அவரது வரையரையில், முசுலீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவர் கடுமையாக எதிர்க்கிறார். சாவர்க்கர் எனும் இந்துத்துவ வெறியரின் இந்து ராஷ்டிரக் கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்கும் வகையில், முசுலீம்களும் இந்தியர்கள் தான் என்ற உண்மையைப் பேசியிருக்கிறார் பாகவத். ஏன் ?

மோடியை ஆட்சியில் அமர்த்த, உத்தரப் பிரதேசத்தில் லவ் ஜிகாத் எனும் கட்டுக் கதையை கிளப்பிவிட்டு முசுலீம்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டி குளிர்காய்ந்தது ஆர்.எஸ்.எஸ். தான். நேரடியாக பல சாதி இந்து கிராமங்களுக்குச் சென்று முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ். தான்.

மோடி ஆட்சியில் முதல்முறை அமர்ந்த பின்னர், கர் வாப்சி” என்ற பெயரில் உத்தரப் பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில் முசுலீம்கள் சிறுபான்மையாக இருக்கும் பகுதிகளில் அவர்களை மிரட்டி இந்து மதத்திற்கு மாறச் செய்தது ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல். முசுலீம்களுக்கு எதிரான படுகொலைகளையும் தாக்குதல்களையும் களத்தில் இறங்கிச் செய்வது, சங்க பரிவாரத்தின் பஜ்ரங் தள் அமைப்புதான்.

உ.பி முசாபர் நகர் கலவரம்

பசுவளைய மாநிலங்கள் என்று அழைக்கப்படும், உத்தரப் பிரதேசம், அரியானா, இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அந்தப் படுகொலைகளை நாடு முழுவதும் தூண்டிவிட்டு, கொலைகாரர்களை போற்றிப் புகழ்ந்து ஆராதித்ததும் சங்க பரிவாரக் கும்பல்தான்.

இப்படி, இவ்வளவு நாளும் முசுலீம்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் முன் நின்று செய்துவிட்டு, இன்று திடீரென முசுலீம்கள் மீதான பாசம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு வந்திருப்பது ஏன் ?

தமது இலக்கான இந்துராஷ்டிரக் கட்டுமானத்தை சோதித்துப் பார்க்கும் சோதனைச் சாவடியாக இருப்பது உத்தரப் பிரதேசம் தான். அதற்கு முன்னர் மோடியின் ஆட்சியதிகாரத்தின் கீழ், குஜராத் பயன்படுத்தப்பட்டதைப் போல இன்று உத்தரப் பிரதேசத்தில் ஒரு பாசிச ஆட்சியை அமல்படுத்தி வருகிறது சங்க பரிவாரக் கும்பல். அதன் தொடர்ச்சி கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் இவ்வளவு பிரயத்தனப் படுகிறார், பாகவத்.

கொரோனா நோய்த் தொற்றின், முதல் அலை, இரண்டாம் அலை ஆகியவற்றில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது வட இந்திய மாநிலங்கள் தான். குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. முக்கியமாக யோகியின் ஆட்சியில் சங்கபரிவாரக் கும்பலுக்குத் தேவையான மருத்துவ வசதியோ, ஆக்சிஜனோ கூட கிடைக்காத நிலைமைதான் நீடித்தது. இது அம்மாநில மக்களிடம், குறிப்பாக பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களிடமும் கடும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

படிக்க :
♦ அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

மேலும் விவசாயிகள் பெரும்பான்மையாக உள்ள உத்தரப் பிரதேசத்தில், ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களை எதிர்த்து உத்தரப் பிரதேச விவசாயிகள் களமிறங்கியுள்ளனர். நாமெல்லாம் இந்துக்கள் என இவ்வளவு நாளும் ஆர்.எஸ்.எஸ். சுட்ட வடைகள் எல்லாம் வீணாகிவிட்டன. போதாத குறைக்கு சமீபத்தில் பாஜக கிரிமினல்கள் உ.பி. எல்லையில் போராட்டத்தில் இருந்த விவசாயிகளைத் தாக்கியுள்ளனர்.

இது போக, யோகியை ஓய்த்துக் கட்ட உத்தரப் பிரதேச அரசியலில் மோடி அமித்ஷா கும்பல் ஏற்படுத்திய சலசலப்பும் அதனைத் தொடர்ந்து அங்கு பிளவு ஏற்பட்டிருக்கிறது.

மேற்கூறியவை அனைத்தும் சேர்ந்து எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதால், கடந்த முறை போல சாதி அரசியலால் மட்டுமே வெற்றியைப் பெற்றுவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 9-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு உத்தரப் பிரதேசத்தின் சித்திரக்கூட் எனும் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் ஒன்றுகூடி, உத்தரப் பிரதேச தேர்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

தமது இலக்கான இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைப்பதற்கான வழிமுறையில், ஆர்.எஸ்.எஸ்.-ற்கு ஒவ்வொரு மாநிலத் தேர்தலும் முக்கியமானது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, எம்.எல்.க்களை விலைக்கு வாங்குவது முதல் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது வரை அனைத்திலும் இறங்குகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.

வெற்றி பெற வேண்டுமென்றால், கலவரங்களையே செய்யத் தயங்காத ஆர்.எஸ்.எஸ்.-க்கு , முசுலீம்களைப் போற்றிப் புகழ்வது எல்லாம் கடினமான வேலையா என்ன ?

சரண்

செய்தி ஆதாரம் :
தமிழ் இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க