மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) 2022-2023 கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்திலிருந்து பாகிஸ்தானின் புகழ்பெற்ற கவிஞர் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் எழுதிய கவிதைகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ள இரண்டு பகுதிகளை நீக்கியுள்ளது. இதுபற்றி ஏப்ரல் 21 அன்று செய்திகள் வெளியானது.
இந்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பாடப்புத்தகத்தின் 10-ம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடத்தில் ‘மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் – வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு’ என்ற பிரிவின் ஒரு பகுதியாக, அந்த இரண்டு பகுதிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன.
அந்த இரு பகுதிகளும் ஜனநாயகம் மற்றும் இணக்கத்திற்காக இப்போது செயல்படு என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் (ANHAD) மற்றும் இந்திய தன்னார்வ சுகாதார சங்கம் (Voluntary Health Association of India) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சுவரொட்டிகளை காட்டிய இரு படங்கள் தொடர்பானவை. அந்த இரண்டுமே பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன.
ANHAD சுவரொட்டி வரிகளை மேற்கோள் காட்டியது:
“கண்ணீர் சிந்துவது போதாது, வேதனையை அனுபவிப்பது போதாது, ரகசியமாக நீண்டகாலமாக நேசிப்பது போதாது… இன்று பொது சதுக்கத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைகளோடு வீதிகளில் நடக்கவும்.”
இந்த வரிகள் ஃபைஸ் அகமது லாகூர் சிறையில் இருந்தபோது அவரால் எழுதப்பட்ட பாடல்களில் ஒன்றான “விலங்கிட்ட கையோடு நட’’ என்ற பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. அந்த குறிப்பான பாடல், சிறையிலிருந்து டோங்காவில் உள்ள பல்மருத்துவரின் அலுவலகத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அவர் பலராலும் அங்கிகரிக்கப்பட்டவராக இருப்பதால் தனது பழக்கமான பாதைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கையில் எழுதியது.
வாலண்டரி ஹெல்த் அசோசியேஷன் வெளியிட்ட மற்ற சுவரொட்டியில், (டாக்காவில் இருந்து திரும்பும்போது) என்ற படத்திற்கு கீழ் உள்ள வரிகளை மேற்கோள் காட்டுகிறது.
“இத்தனை கூடல்களுக்கு பிறகும் நாங்கள் அந்நியர்களாகவே இருக்கிறோம், பல மழைகளுக்குப் பிறகும் இரத்தக் கறைகள் இருக்கிறது.”
1974-ல் வங்காளதேசத்திற்கு சென்று திரும்பிய பிறகு, அந்த நாட்டின் சுதந்திரத்திற்கான போருக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மேலே மொழிபெயர்க்கப்பட்ட வரிகளை ஃபைஸ் எழுதினார்.
ஃபைஸ் வசனங்களைத் தவிர, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான அஜித் நாத்தின் கார்ட்டூனும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கார்டூனில் ஒரு வெற்று நாற்காலி காட்டப்படுகிறது. அதில் பல்வேறு மதச் சின்னங்கள் உள்ளன. “இந்த நாற்காலி முதல்வர் பதவியில் இருப்பவர் தனது மதச்சார்பற்ற தகுதிகளை நிரூபிப்பதற்காக… அங்கு நிறைய முடிவுகள் எடுக்கும் நிலை இருக்கும்!”
பிற நீக்கங்கள்
வரவிருக்கும் கல்வியாண்டிற்காக தற்போதைய பாடத்திட்டத்தின் நீக்கப்பட்டிருக்கும் பல கூறுகளை எக்ஸ்பிரஸ் செய்தி ரிப்போர்ட் விவரிக்கிறது.
ஜனநாயக அரசியல் II பாடப்புத்தகத்திலேயே, ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’, ‘மக்கள் போராட்ட இயக்கம்’ மற்றும் ‘ஜனநாயகத்திற்கான சவால்கள்’ ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் சாதி, இனம் மற்றும் பிற வழிகளில் சமூகப் பிளவுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
11-ம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ‘மத்திய இஸ்லாமிய நிலங்கள்’ என்ற அத்தியாயம் நீக்கப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கூடுதலாக, “விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம்” பற்றிய உள்ளடக்கம் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மற்றும் “பனிப்போர் காலம் மற்றும் அணிசேரா இயக்கம்” பற்றிய தலைப்பு 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் கணிதப் பகுத்தறிவின் சில அத்தியாயங்களும் விடுபட்டுள்ளன.
பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் இருக்கும் உண்மை வரலாறுகளை திரிக்கவும், அழிக்கவும் பார்க்கிறது இந்த போலி புராண புரட்டுகளை பரப்பும் காவி பயங்கரவாதிகள்.