னித குலத்திற்கு சேவையாற்றுவதே என் நோக்கம் ! நோயாளியின் நலனும், ஆரோக்கியமுமே என் குறிக்கோள் ! நோயாளியின் தனிப்பட்ட பிரைவேசியை நான் பாதுகாப்பேன் ! அவர் உடல் தொடர்பான ரகசியங்களை கண்ணியமாக பாதுகாப்பேன் ! எந்த நோயாளியையும் வயது, நிறம், இனம், குலம், பாலினம், அரசியல், சமூக சார்புகள் ஆகியவை சார்ந்து அணுக மாட்டேன் !” என்பதே மருத்துவ மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் ஹிப்போகிராட்டின் உறுதி மொழியாகும்.
இதை தூக்கியெறிந்துவிட்டு பார்ப்பன மனுதர்மத்தை தூக்கிபிடிக்கும் ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதி மொழி மூலம் மருத்துவ கல்வியை துவங்க வைக்க எத்தனிக்கிறது மோடி அரசு.
மருத்துவம் என்பது கடவுள் சிந்தனைகளின் மறுதலிப்பு ஆகும். விஞ்ஞான பூர்வமானது. எப்போதும் ‘சோதித்தறிதல் – வளர்த்தெடுத்தல் – சோதித்தறிதல்’ என்று இயங்கிக் கொண்டிருப்பது. ‘இது அவ்வளவுதான்’ என்று எங்கும் எப்போதும் தேங்கி நிற்பதில்லை. அதனால்தான் எத்தகைய நாசகார தொற்று வந்த போதும் அதற்குரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மனித குலத்தின் அழிவு நிறுத்தப்படுகிறது.
நவீன மனித சமுதாயத்தை ஒரு நூற்றாண்டுக்கு பின்னுக்கு தள்ளி மூடத்தனத்தில், மூடசிந்தனைகளில் ஊறிப்போன, ஒரு பார்ப்பன மேலாண்மை மனுதர்ம சமூக அமைப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அத்தனை அரசு நிறுவனங்களையும் அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொண்டிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில்தான் கல்வி நிறுவனங்களிலும் மாறுதலை செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நரித்தனமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில், ஒன்றுதான் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் உறுதியேற்பு நிகழ்ச்சியில் சமீபகாலங்களில் நடைபெறும் மாறுதல்கள்.
படிக்க :
கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை
’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு அகில இந்திய மருத்துவ கவுன்சில் (Medical Council of India) கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission)  ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையம் மருத்துவத் துறையை காவி – பார்ப்பன மயமாக்கும் வேலைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாக கண்டனக் குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டேதான் உள்ளன.
அதற்கேற்ப மருத்துவ கல்லூரிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சமஸ்கிருத உறுதிமொழி தேங்கிய குட்டையில் அழுகிப்போய் கிடக்கும் தண்ணீரில் அருமருந்து இருப்பதாக ஏமாற்றுகிறது. ‘எல்லாம் அவன் செயல்’ என்று மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆண், பெண் பாலின வேறுபாட்டை முக்கியத்துவமாக்குகிறது. பார்ப்பனிய மனுதருமத்தை கடைபிடிக்க வேண்டும் என்கிறது. மனிதகுல அழிவை சாத்தியமாக்குகிறது.
‘சாரக் ஷாபாத்’ என்ற மருத்துவ உறுதிமொழியை திணிப்பதற்கு ‘இந்திய மருத்துவ அசோஷேசியன்’ ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது ! காரணம், சாரக் ஷாபாத் உறுதிமொழியானது, ‘மருத்துவத்தை சாதிய மற்றும் பாலியல் கண்ணோட்டத்துடன் அணுகிறது’ என்று அது நம்பியது.
மொழி என்ற வகையில் மட்டுமல்ல உள்ளடக்கம் உணர்த்தும் பாடம் என்ற வகையிலும் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
பாராளுமன்றத்தால் இதற்காக நிறைவேற்றப்பட்டிருக்கும், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, மருத்துவத்துவ துறையின் சகலத்தையும் கட்டுப்படுத்ததக்க அதிகாரத்தை  தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கிறது. அதாவது, இதன்மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ பட்டங்களை கொடுப்பதும் தேசிய மருத்துவ ஆணைய சட்ட விதிகளின் படியாக கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதன்மூலம் மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரங்களை குவித்து ஒரு சர்வாதிகார ஆட்சிமுறையை பா.ஜ.க ஒன்றிய அரசு முன்னணுமானிக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஹிப்போகிரடிக் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை ஏற்க பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வந்தது. இந்த நிலையில், இதற்கு பல மாநிலங்களிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அதனை தொடர்ந்து மக்களவையில் மார்ச் 25-ம் தேதி ஒரு கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் மருத்துவர் பாரதி பவார் அவர்கள் “தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ‘இப்போகிரடிக்’ உறுதிமொழிக்கு பதிலாக ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை கட்டாயமாக்கும் எவ்வித பரிந்துரையும் தற்போதைக்கு இல்லை” என்று குறிப்பிட்டார்.
ஆனால், அதற்கு மாறாக தேசிய மருத்துவ ஆணையம் மார்ச் 31-ம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், “ஒவ்வொரு மாணவரும் மருத்துவக் கல்வியில் சேரும் பொழுது, மாற்றியமைக்கப்பட்ட ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது”. என் இருந்தது ! மேலும், இந்த சுற்றறிக்கையானது அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றிற்காக வெளியிடப்படும் சுற்றறிக்கை என்றும், இதை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது”. இதன் மூலம் தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாக மருத்துவ கல்வி நிறுவனங்ளை வலியுறுத்தியது.
‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை MBBS மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்துடன் சேர்த்து இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு வெளியிடப்பட்ட மார்ச் 31-ம் தேதியிட்ட சுற்றறிக்கையானது, தமிழக அரசிற்கும், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும். மேலும், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும்.
அப்போதே, இந்த ‘சரக் சப்த்’ உறுதி மொழியை யார் மாற்றியமைத்தார்கள்? இப்போது திடீரென உறுதிமொழியை மாற்றுவதற்கான தேவைகள் என்ன என்பதை பற்றியெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். இது பற்றிய விளக்கங்களை கேட்டு இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கை வெளியானதிலிருந்து, கடந்த ஒரு மாதத்தில், ‘சர்ச்சைக்குரிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்க வேண்டாம்’ என்று எவ்வித சுற்றறிக்கையோ, ஆணையோ தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடமிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு (டீன்) எழுதப்பட்டதாக தெரியவில்லை. அதே போல தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகமும், ‘மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்கத் தேவையில்லை’ என்று மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தவில்லை.
குறைந்தபட்சம், தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடமிருந்தோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திடமிருந்தோ, தமிழக அரசின் சுகாதாரத் துரையிடமிருந்தோ, ‘மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி ஒரு கடிதம் எழுதியிருந்தால் கூட இவ்வளவு பெரிய சர்ச்சை வந்திருக்காது.
மருத்துவக் கல்வியில் சமஸ்கிருத உறுதி மொழி விவகாரம் இவ்வளவு பெரிய சர்ச்சையாக வெடிக்க, இது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு, உரிய நேரத்தில் மறுப்பு தெரிவிக்காமல், கள்ளத்தனமாக அமைதி காத்த மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபுவும், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யனும், சுகாதராத்துறை முதன்மை செயலாளர் இராதா கிருஷ்ணனுமே பொறுப்பாவர். குறைந்தபட்சம் தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த சுற்றறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுடைய கவனத்திற்கு கொண்டு போய் விவாதித்து இருக்க வேண்டும்!
உயர்மட்டத்திலிருக்கும் பார்ப்பன – ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து திராவிட மாடலுக்கு எதிராக செயல்பட்டு பார்ப்பன மேலாண்மையை நிறுவப் போகிறார்கள் என்பதே கண்கூடாக தெரியும் உண்மை. இதனால்தான் சத்தமில்லாமல் திருவள்ளூர் ராமநாதபுரம் மதுரை மருத்துவ கல்லூரி உட்பட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசின் எதிர்ப்பு முடிவிற்கு மாறாக ‘மகரிஷி சாரக் ஷாபாத்தின்’ சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டு உள்ளது! அதில் சில கல்லூரிகளில் சுகாதார அமைச்சரும் பங்கேற்றிருப்பதாக செய்திகள் உள்ளன. குறிப்பாக, திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில். அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் கிளம்பவில்லை. அப்படியென்றால் மக்கள் கவனத்துக்கு வராத வகையில் ஆர்.எஸ்.எஸ் வேலைத்திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆனால், இதில் திராவிட மாடல் ஆட்சி சம்பந்தபட்டிருப்பதால் கூட்டணி கட்சிகளும் அடக்கியே வாசிக்கின்றன. இதனுடைய விளைவு பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் வளரும் வாய்ப்புகளை தங்கத்தட்டில் வைத்து தருகின்றன. தமிழகத்தில் பெரியார் மரபை காப்பாற்றுபவர்கள் மிக நுணுக்கமாக கவனித்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
மதுரை மருத்துவ கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நிதியமைச்சர் இந்த வேறுபாட்டை கண்டுபிடித்து தனது எதிர்ப்பை பதிவு செய்ததால் இது வெளியுலகுக்கு தெரிந்தது பொதுவெளியீல் இதைப்பற்றி விவாதங்களும் வெடித்தன.
திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் மா.சுப்ரமணியன் அவர்கள் மருத்துவ கல்வியின் மனித நேயத்திற்கு முற்றிலும் மாறான, பிற்போக்குத்தனமான இந்த போக்கு குறித்து இத்தனை நாட்களாக அமைதி காத்தது ஏன்? தங்களது அரசின் கோட்பாடு தெரியவில்லையா? அல்லது இதிலிருக்கும் ஆபத்து புரியவில்லையா? அல்லது வழக்கம்போல ‘அதிமுக ஆட்சி முதற்கொண்டு முதன்மை செயலராக இருக்கும் ராதாகிருட்டிணன்’ ஆலோசனைப்படி பேசாமல் இருந்து விட்டாரா?
இதுவாவது பரவாயில்லை. இதைப்பற்றிய கேள்விக்கு மருத்துவக் கல்லூரி டீன் சொன்ன பதில் “மெடிகல் கவுன்சில் வெப்சைட்டில் ஆங்கிலத்தில் இருந்த்தால் அதுதான் சரியானது போலிருக்கிறது என்று மாணவர்தலைவர் எடுத்து டீனிடமோ மூத்த புரொபசர்களிடமோ (அதாவது நிர்வாகத்தில் யாரையும்) கலந்தோலாசிக்காமல் தன்னிஷ்டத்துக்கு அந்த மாணவர் தலைவர் வாசித்துவிட்டார். எங்களுக்கே பிறகுதான் தெரியும்” இதைவிட நிர்வாகத்தில் பார்ப்பன் மயம் வேரூன்றுவதை காட்ட சாட்சியம் வேண்டுமா?
இதைவிட பெரிய கேலிக்கூத்து ஐந்து மாணவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அதற்கு தாங்கள்தான் பொறுப்பு என்பதாக விளக்கம் அளித்தது.
அதையடுத்து தனிப்பட்ட முறையில் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் மதுரை டீனுக்கு கொடுத்த தண்டனை ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்ததுதான் இது எல்லாவற்றுக்கும் மேலான வேடிக்கை..
இதன்மூலம் அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
தன்னுடைய அணியிலிருக்கும் ஒருவரை இழக்க விரும்பாமல் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் பின்னணியில் தகிடுதத்தங்கள் அரங்கேற்றி டீனை அதே இடத்தில் அமர வைத்துவிட்டன. எப்படி, சமஸ்கிருத மந்திரத்தை ஆங்கிலத்தில் மாற்றி எழுதி மாணவர்கள் மத்தியில் படிக்க வைத்தார்களோ அதைப்போலவே இனி ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகள் வெவ்வேறு வழிகளில் அரங்கேறப்போவது நிச்சயம்.
படிக்க :
உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !
முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் !
நமது முதல்வர் ‘தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகளில் நீட்டை ஒழிக்கப்போவதாக’ சபதமேற்கும் வேளையில் சமஸ்கிருதத்தில் உறுதி மொழியாம்!. திராவிட மாடல் ஆட்சியில் எறும்பு புற்றுகளுக்குள் கருநாகங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.. தலையெடுத்த ‘ஒரு பாம்பையும்’ நசுக்காமல், திராவிட மாடல் ஆட்சி வெற்று சபதங்களை மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறது.
“இதனை மேலும் சர்ச்சையாக ஆக்க வேண்டாம்” என்கிறார் அமைச்சர். பாவம் சுகாதார துறை அமைச்சர்! இவர் இரண்டாம் தலைமுறையாக இருக்க கூடும். பெரியாரின் மரபுகள் போராட்டங்கள் சமூகநீதிகள் ஆகியவற்றில் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கலாம். இதனால் வருகின்ற மருத்துவர்கள் ‘வந்தே மாதரம்; ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் சமுதாய அரங்கில் நுழைவதற்கான சாத்தியங்களை நினைத்து பாருங்கள்!
உயர்மட்டத்தில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் காவி – பார்ப்பன – ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளை அம்பலப்படுத்தி பொதுவெளிகளில் போராட்டம் துவங்கி நடத்தப்பட வேண்டும்.
இவர்களை நம்பி ஸ்டாலின் சாதிப்பார் என்று சமூகநீதி போராளிகள் வெறுமனே இருக்காமல் விழிப்புணர்வோடு வீதியிலிறங்கி போராடவில்லையென்றால் பெரியார் மண் என்பது வெற்று கோஷமாகி விடும். இல்லையென்றால் அடுக்கடுக்கான பிரச்சினைகளை பொதுவெளியில் பரவவிட்டு விவாதங்களை திசைதிருப்பி தனது தளமாக மாற்றுவதில் ஆரிய – பார்ப்பன கூட்டம் வெற்றி அடைவதற்கான சாத்திய கூறுகளை மறுப்பதற்கில்லை.

மணிவேல்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க