’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !

இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்றும், முஸ்லீம் மக்களை கொல்லவேண்டும் என்றும் காவி பயங்கரவாதிகள் அழைப்பு விடுக்கின்றனர். லவ் ஜிகாத், ஹலால் ஜிகாத் போன்ற பல ஜிகாத்துக்களை கூறி முஸ்லீம் மக்களை வதைக்கின்றனர்.

0
டந்த மே 1-ம் தேதியன்று அரியானா மாநிலம் அம்பாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதர்சன் தொலைக்காட்சியின் தலைவர் சுரேஷ் சவாங்கே, இந்தியாவை “இந்து ராஷ்டிரா” ஆக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த வீடியோ சமூக வலைதளங்களின் பரவி வருகிறது.
ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், சவான்கே, “இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற, தேவைப்பட்டால் நாங்கள் அதற்காக தியாகம் செய்வோம். ஆனால், எந்த விலை கொடுத்தாலும் நாட்டை இந்து ராஷ்டிராவாக ‘இந்து தேசம்’ என்று அறிவிப்போம். நமது இலக்கை அடையும் சக்தியை நம் முன்னோர்களும் தெய்வங்களும் நமக்குத் தரட்டும்.” என்று பேசியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ அசீம் கோயலும் சவான்கேவுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏ.வாக அல்ல ​​”நான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் கோயல். இங்கு நடைபெற்ற ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் குறித்த கருத்தரங்கில் கோயல் பங்கேற்றார்.
இப்படி வெறுப்பு பேச்சில் சவான்கே ஈடுபடுவது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சவாங்கே இதேபோன்ற உரையை நிகழ்த்தினார். இந்த நாட்டை இந்து ராஷ்டிரா ஆக்குவதற்கு எங்கள் கடைசி மூச்சு வரை போராடுவோம், செத்துமடிவோம், தேவைப்பட்டால் கொலையும் செய்வோம்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
படிக்க :
வெறுப்பு அரசியலை நிறுத்த மோடிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
நியூஜே முகநூல் மூலம் தேர்தல்களின்போது பாஜகவிற்கு ஆதரவாக வெறுப்பு பிரச்சாரம் செய்த ரிலையன்ஸ் !
கடந்த மாதம், வடமேற்கு டெல்லியின் புராரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து மகாபஞ்சாயத் சபாவின் அமைப்பாளர்கள் மற்றும் தஸ்னா தேவி கோயிலின் பூசாரி யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மற்றும் சுதர்சன் செய்தியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சவாங்கே உள்ளிட்ட பலர், முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் உரையை நிகழ்த்தினர். இதில் சவாங்கே, “பாகிஸ்தானில் இந்துக்கள் பெறும் அதே உரிமைகளை இந்திய முஸ்லீம்களும் பெற வேண்டும். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று கூறினார்.
நிகழ்வின் போது, ​​ நான்கு முஸ்லீம் பத்திரிகையாளர்கள் உட்பட ஐந்து பத்திரிகையாளர்கள் இந்துத்துவ கும்பலால் தாக்குதலுக்குள்ளானார்கள். பத்திரிகையாளர்களில் ஃப்ரீலான்ஸர்களான அர்பாப் அலி மற்றும் மீர் பைசல், புகைப்பட பத்திரிக்கையாளர் முகமது மெஹர்பான் மற்றும் தி குயின்ட்டின் முதன்மை நிருபர் மேகநாத் போஸ் ஆகியோர் அடங்குவர்.
முஸ்லீம் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துமதவெறியர்கள் மீது புகார் அளிக்க போலீசு நிலையம் சென்றபோதும் கூட புகார் ஏதும் பதியாமல் நீண்ட நேரம் அலைக்கழித்துள்ளது டெல்லி போலீசு. பின்னர், பத்திரிகையாளர்களை போலீசு வாகனத்தில் ஏற்றி சென்று இந்துமதவெறியர்களிடமிருந்து பாதுகாப்பதாக நாடகமாடியது. ஆனால் தாக்குதல் நடத்திய இந்துமதவெறியர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
இந்து மதவெறியர்களின் இந்த முஸ்லீம் வெறுப்பு பேச்சுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்று வெளியிப்படையாக உறுதிமொழி ஏற்கும் காவி பயங்கரவாதிகள், முஸ்லீம் மக்களை கொல்லவேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர். லவ் ஜிகாத், ஹலால் ஜிகாத் போன்ற பல ஜிகாத்துக்களை கூறி முஸ்லீம் மக்களை வதைக்கின்றனர்.
இந்துத்துவ தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்கள், பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள், சுதர்சன் டிவி போன்ற இந்துத்து ஊடகங்களின் நிருபர்கள் என அனைவரும் நிகழ்த்தும் வெறுப்பு பேச்சுக்களுக்கு, பஜரங் தள், அனுமன் சேனா, விஷ்வ இந்து பரிஷத் போன்று நூற்றுக்கணக்கில் புற்றீசல் போன்று பல்வேறு மாநிலங்களில் செயல்படும் காவி பயங்கரவாத அமைப்புகள் செயல்வடிவம் கொடுக்கின்றனர்.
தீவிரமடைந்து வரும் காவி பயங்கரவாதிகளின் வெறுப்பு பேச்சுக்களுக்கும், முஸ்லீம் சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக, உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி இந்த காவி – கார்ப்பரேட் பாசிச பயங்கரவாதிகளை வீதியில் இறங்கி வீழ்த்துவதே நம் முன் இருக்கும் உடனடி பணி.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க