2019-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஒன்பது மாநில தேர்தல்களின் போது, பாஜக-விற்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பல விளம்பரங்களை வெளியிட்டது நியூ எமர்ஜிங் வேர்ல்டு ஆஃப் ஜெர்னலிசம் (New Emerging World of Journalism) நியூஜே (NewJ) என்ற முகநூல் பக்கம். இம்முகநூல் பக்கம், முஸ்லீம்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோர்மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக பல விளம்பரங்களை வெளியிட்டிருந்தது. மோடி மீண்டும் பிரதமரானதில் இத்தகைய விளம்பரங்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

ஆய்வு நிறுவனமான ஆட்.வாட்ச்-ம் (ad.Watch) மற்றும் தி ரிபோர்ட்டர்ஸ் கலெக்டிவ் (The Reporters Collective) இணைந்து, இந்தியாவில் அரசியல் விளம்பரங்களுக்காக –தேர்தலையொட்டி- மட்டும் ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமாக செலவழித்த விளம்பரதாரர்களைப் பற்றி ஆய்வு செய்தது. அதில், பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2020 வரை, நியூஜே முகநூல் பக்கத்தால் மட்டும் 718 அரசியல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவை 290 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை அடைந்துள்ளது என ஆய்வு கூறியது.

படிக்க :

♦ இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

♦ சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !

2018-ம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பா.ஜ.க.விற்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் மிகவும் நெருக்கமானது. இதன் நிறுவனர் ஷலப் உபாத்யாய்-ன் தந்தை உமேஷ் உபாத்யாய், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராகவும், நெட்வொர்க் 18 குழுமத்தின் செய்தி தலைவராகவும் பணியாற்றியவர். அவரது உறவினரான சதீஷ் உபாத்யாய், டெல்லியின் முன்னாள் பாஜக தலைவர்.

2018-ல் ரூ.1 இலட்சம் முதலீட்டைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2020 வரை எந்த வருமானமும் ஈட்டவில்லை. 2019-ல் அதன் வருமானம் ரூ.33 லட்சத்து 70 ஆயிரம்; ஆனால், நட்டமோ ரூ.2 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம். இப்படி, பல மடங்கு நடத்தில் இயங்கும் இந்நிறுவனம் எப்படி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக விளம்பரம் செய்திருக்க முடியும் என்று கேள்வி எழலாம்?

அதாவது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், நியூஜே நிறுவனத்திற்கு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8 கோடியே 40 லட்சம் கடன் கொடுத்து, அதன் 75 சதவிகித பங்குகளை சிறிது காலத்திற்கு பின்பு வாங்கியது ரிலையன்ஸ். அடுத்த ஆண்டே, மீண்டும் ரூ.12 கோடியே 50 லட்சம் கடனை நியூஜே-வுக்கு கொடுத்தது.

மார்ச் 2020-ம் நிதியாண்டில் நியூஜே வருவாயை ஈட்டியதாக தரவுகள் இல்லை. இருந்தும் ரிலையன்ஸ் அளித்த கடன் மூலம் பாஜக ஆதரவு விளம்பரங்களுக்கு செலவு செய்த தொகை ரூ.2 கோடியே 73 லட்சம். இந்த காலக்கட்டத்தில்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிலின் பங்குகளை, ரிலையன்ஸ் குழுமத்தில் ஒன்றான ஜியோ நிறுவனம் வாங்கி கொண்டது. 2021-ம் ஆண்டு இறுதியில் ஜியோ நிறுவனமானது நியூஜே-வுக்கு 0.0001 சதவிகித ஆண்டு வட்டி விகிதத்தில், ரூ.8 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரம் கடனாக வழங்கியது.

நியூஜே-வினுடைய ரிலையன்ஸ் பங்கினை ஜியோ எடுத்துக் கொள்வதற்கு ஆறு நாட்களுக்கு முன்புதான் ‘ஆர்ட்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷனை’ (Articles Of Association) என்று நிறுவனத்தில் பெயரை திருத்தியது நியூஜே. இதன் மூலம் நியூஜே-வின் செய்தி உள்ளடகத்தையும், அது என்ன பகிர வேண்டும் என்பதையும் ஜியோ தான் தீர்மானிக்கும்; கட்டுப்படுத்தும்.

இப்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் நியூஜே முகநூல் பக்கம் மூலம் பாஜக-வுக்கும் மோடிக்கும் ஆதரவாக பல கோடிகளை செலவு செய்து 2019 தேர்தலில் வெற்றிப் பெற வழிவகை செய்துகொடுத்திருக்கிறது.

பாஜக என்றாலே பொய்யும் புரட்டும் தானே !

இத்தகைய விளம்பரங்களில் அடிப்படையான விஷயம் உள்ளது. அது, தவறான மற்றும் பொய் தகவல்களைக் கொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான மத உணர்வினை தூண்டுவது, எதிர்க்கட்சிகளை இழிவுப்படுத்துவது, இதன்மூலம் பாஜக-வுக்கும் இந்துத்துவ சித்தாந்தத்துக்கும் ஆதரவினை திரட்டுவது என்பதுதான். முகநூலில் பதிவிடப்படும் இத்தகைய விளம்பரங்களுக்கும் வீடியோ பதிவுகளுக்கும் அதிக பணத்தை செலவுசெய்வதால் பல ஆயிரக்கணக்கான முகநூல் பயனர்களை சென்றடைகிறது.

அதுமட்டுமல்லாமல், பாஜக அல்லது இந்துத்துவ சித்தாந்தம் சார்ந்த கருத்துக்கள் பெரும்பாலும் இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய அரசியல்சாரா தகவல் என்ற போர்வைக்குள் பரப்பப்படுகின்றன. உதாரணத்திற்கு, கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தனது கால்களால் தேர்வினை எழுதும் வீடியோ பகிரப்பட்டிருக்கும். ஆனால் அதனிடையில் மோடியின் தேர்தல் பிரச்சாரம் குறித்தோ அல்லது முஸ்லீம் வெறுப்பு பிரச்சார செய்தியோ அடங்கியிருக்கும். ஆக, நியூஜே-வின் வீடியோக்கள், விளம்பரங்கள் அனைத்தும் சாதாரண மக்களை எளிமையாக சென்றடையும் விதத்தில் உருவாக்கப்படுகிறது. அதேபோல, முஸ்லீம்களுக்கு எதிரான இந்துத்துவ வெறுப்பு அரசியலை தாங்கிவரும் தவறான தகவல் மக்களிடையே வேகமாக பரவி குறிப்பிட்ட அளவிற்கு வினையாற்றுகிறது.

உதாரணத்துக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவ பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர், பாஜக சார்பில் போபால் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே, ‘மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரக்யாவுக்கும் குற்றத்துக்கும் சம்பந்தமில்லை; அவ்வழக்கில் இருந்து அவர் விடுதலைச் செய்யப்பட்டார்’ என பொய் செய்தி ஒன்றை வீடியோவாக வெளியிட்டது நியூஜே. இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டது; பிரக்யா சிங்கும் அத்தேர்தலில் வெற்றி கிட்டியது.

அதேபோல, 2019 தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக அரசாங்கம் ‘பயங்கரவாதத்தின்மீது மென்மையாக நடந்துகொள்கிறது’ என பேசிய ராகுல் காந்தி, அதற்கு ஆதாரமாக மசூத் அசார் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைவரை பாஜக ஆட்சியின்போது வாஜ்பாய் விடுவித்ததை எடுத்துக் காட்டினார். பயங்கரவாதத்தின்மீது பாஜக-வின் அணுகுமுறையை பற்றி வாய்திறக்காமல், மசூத் அசாரை ராகுல், ‘ஜி’ என்று அழைத்ததை பெரிதாக்கியது நியூஜே.

2019-ம் ஆண்டு இந்தியாவில் ரிலையன்ஸ்க்கு போட்டியாக வளர்ந்துவரும் அமேசான் நிறுவனம், சில பொருட்களை இந்து கடவுளின் படங்கள் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறது. இதற்கெதிராக, “BoycottAmazon” என்ற ஹேஷ்டாகை டிரண்ட் செய்தது இந்துமதவெறிக்கும்பல். நியூஜே இவ்விஷயத்தை கையிலெடுத்து வெறுப்பு அரசியலை தூண்டிவிட முயற்சித்தது.

2019 டிசம்பரில், முஸ்லீம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு எந்த எதிர்வினையும் காட்டாத நியூஜே, நவம்பர் 2020-ம் ஆண்டு வங்கதேசத்தில் இந்துத்துக்களை முஸ்லீம்கள் தாக்கும் வீடியோவை வெளியிட்டு, “சிறுபான்மை இந்துக்கள் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம்களால் தாக்கப்படுகிறார்கள். குடியுரிமை சட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று இப்போது புரிகிறதா” எனச் கேள்வியெழுப்பியிருந்தது.

இப்படி பாஜக-வுக்கு ஆதரவாகவும், முஸ்லீம் சிறும்பான்மையினருக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படுகிறது நியூஜே. ஆனால், தங்களுக்கும் பாஜக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லாததுபோலவும் தன்னை ஓர் செய்தி நிறுவனமாகக் காட்டி கொள்கிறது.

தேர்தல் கமிஷனும் முகநூல் நிறுவனமும் பாசிசத்தின் கூட்டுக் களவாணிகளே !

இந்திய தேர்தல் சட்ட பிரிவு 171H, வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தின் போது செலவிடும் பணத்தை வரம்பிடுகின்றது. வேட்பாளரல்லாது மூன்றாம் நபரால் விளம்பரம் செய்யப்படுமேயானால், அது வேட்பாளரின் செலவு, கணக்கில் சேர்க்கப்படும்.

அதேபோல, தேர்தல் நேரத்தின்போது, கட்சியாலும் வேட்பாளாராலும் நேரடியாக நிதியளிக்கபடாத விளம்பரங்களை வெளியிடுவது இந்திய அரசியல் சட்டத்தின்படி குற்றமாகும். அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் பதிவுகள் அல்லது விளம்பரங்களுக்கும் அந்தந்த கட்சிகள்தான் பொறுப்பாகும். ஆக, தேர்தல்கள் ஒட்டி கட்சிக்களுக்கு வெளியே வெளியிடப்படும் விளம்பரங்களைப் பயன்படுத்துவதை இந்த சட்டம் தடை செய்கிறது.

ஆனால், முகநூல் போன்ற சமூகவலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் இந்த தடைகளை நீட்டிக்கவில்லை. அதாவது கட்சி சார்பற்றவர்கள் (வேட்பாளர்கள் (அ) கட்சியின் நேரடியான தலையீடில்லாமல்) பணத்தை செலவழித்து விளம்பரங்கள் செய்யலாம் என்கிறது. இதனை நிழல் விளம்பரங்கள் (Surrogate Advertisements) என்பார்கள். முகநூல் நிறுவனமும் பாஜக மற்றும் அதன் வேட்பாளர்களை முன்னிறுத்தும் நிழல் விளம்பரங்களையும் செய்திகளையும் அமைதியாக அனுமதித்து வருகிறது.

பொதுவாக முகநூலில் உள்ள மென்பொருளே முகநூலின் சமூக விதிகள், அதன் வழிகாட்டுதலின்படி தவறான செய்திகளையும், வீடியோக்களையும் வன்முறை அல்லது ஒருதரப்பினரை குறிவைக்கும் பதிவுகளையும் தானாகவே நீக்கிவிடும். ஆனால் பாஜக தொடர்பாக நியூஜே வெளியிட்ட பொய் செய்திகளை முகநூல் நிர்வாகம் நீக்கவில்லை.

படிக்க :

♦ எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1

♦ மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வெளியாகும் இத்தகைய நிழல் விளம்பரங்களுக்கு எதிராக முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறதென்றாலும், அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியினரின் 687 முகநூல் பக்கங்களையும், கணக்குகளையும்தான் நீக்கியுள்ளது. ஆனால், பாஜகவை விளம்பரப்படுத்திய ஒரு முகநூல் பக்கம் மற்றும் 14 முகநூல் கணக்குகள் என மிகவும் சொற்பமானவற்றை மட்டுமே நீக்கியுள்ளது. இதுவும் சில்வர் டச் (Silver Touch) என்ற ஐடி நிறுவனத்துக்கு சொந்தமான கணக்குகள்.

சட்டம் இப்படியிருக்க, நாடாளுமன்ற தேர்தல்களின்போது தேர்தல் குறித்த நிழல் விளம்பரங்களை வெளியிட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தோடு முகநூல் நிறுவனத்தின் இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தைக் (Internet and Mobile Association of India) கொண்டு சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்று ஃபிரான்சிஸ் ஹவ்கன் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகிறது.

000

ஒவ்வொரு தேர்தலின் போது, உழைக்கும் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் தேர்தல் ஜனநாயம் என்ற பிம்மம் மேற்கண்ட நடவடிக்கைகளால் வேரும் மாயத்தோற்றம்தான் என்பதை புரிந்துகொள்ள முடியும். அதாவது, கார்ப்பரேட் முதலாளிகள் யாரை கைக்காட்டுகிறார்களோ அவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர போகிறார்கள். ஆக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை தேர்தல் களத்தில் வெற்றிக் கொள்ளலாம் என்று இனியும் எண்ணிக் கொண்டிருப்பது முட்டாள்தனம். நமது பாசிச எதிர்ப்பு என்பது தேர்தல் களம் அல்ல போராட்டக்களம்.


கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க