எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1
கூட்டாட்சியின் அடிப்படைகளை தகர்த்து ‘ஒற்றை தலைமை துருவ’ ஆட்சியை நோக்கி அதாவது பாசிச ஆட்சியை கொண்டுவருவதற்கான எத்தனிப்புகளை சட்டப்பூர்வமாக மோடி அரசு செய்து வருகிறது.
எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு – பாகம் 1
இந்திய குடியரசின் அடிப்படையான கூட்டாட்சி தத்ததுவத்தை மிக எளிமையான வடிவத்தில் திராவிட இயக்கங்கள் “மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என தமிழக மக்கள் மனதில் பதிய வைப்பதில் வெற்றியும் பெற்றனர். சமீப காலங்களில் கூட்டாட்சி தத்துவம் பற்றி பாஜக-வின் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ‘அதே வலிமை; அதே தொனியில்’ இல்லாமல் விவாதம் எழுப்படுகிறது.
“மோடியின் ஆட்சி ‘கூட்டாட்சி என்ற அரசியல் சாசனத்தின்’ அடிப்படையை சுற்றி எழுப்பியிருக்கும் அச்சுறுத்தல்களே” இத்தகைய விவாதத்திற்கு அவசியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமீபத்திய நாடாளுமன்ற விவாதங்களை ‘குறியீடுகளிலிருந்து உள்ளார்ந்த பொருள் பற்றியதாக’ மடைமாற்றியிருக்கிறது ஆளும் மோடி அரசு. எதிர்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகள் பறிக்கபடுவதை எதிர்த்து கடுமையாக ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர். சுயாட்சி பற்றி பேசினாலே “பிரிவினைவாதிகள்; தேசவிரோதிகள்” என தூற்றுவது தான் மோடி மற்றும் பாஜக-வினரின் பதிலாக இருக்கிறது.
பன்முக கலாச்சார பூமியில் ஒற்றை தலைமை – பார்ப்பன மதவெறி – இந்தி – நஞ்சை விதைக்கிறது மோடி அரசு.
பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம் ஆகியவற்றை கொண்ட பகுதிகளை ஒன்றிணைத்து அவற்றின் கூட்டாட்சியாகவே இந்தியா உருப்பெற்றது என்பது வரலாறு. மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல அதன் உள்ளாட்சி வரை அதிகார பகிர்வை அங்கீகரிக்கிறது அரசியல் சாசனம். எல்லா மாநிலங்களுக்கும் மேலானதாக அல்ல ஒரு கூட்டரசாங்கமாகவே மத்திய அரசை வரையறுத்திருக்கின்றது அரசியல் சட்டம். இந்த நிலைமைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அபாயம் ஏற்பட்டுள்ளது என ஜனநாயக உணர்வுள்ள அரசியல் விமர்சகர்கள் முதலாளித்துவ பத்திரிகைகளும் அறிவுஜீவிகளும் கூட பத்திபத்தியாக எழுதி வருகின்றனர்.
மோடி அரசின் தற்போதைய ஒரே செயல்பாடாக இருப்பது” அரசியல் – பொருளாதாரம் – கலாச்சாரம்” அனைத்திலும் தங்களது கொள்கைகளுக்கு ஏற்றவகையில் ஒரே சிந்தனைக்குள்ளானதாக மாற்றுவது. அதாவது ‘ஒத்திசைவை’ ஏற்படுத்துவது. இதில் இடைஞ்சலாக இருப்பவர்களை ‘ஒன்று வழிக்கு கொண்டு வருவது’ அல்லது ‘இல்லாதொழிப்பது’. இவற்றையெல்லாம் இருக்கும் சட்டங்களை பயன்படுத்தியே செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான பாசிச கும்பலிடம் நாடு சிக்கியிருக்கிறது.
உரிமை பற்றி பேசுவது நாட்டுக்கு எதிரானதாம்
மக்களுக்கு அவர்களது உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பவர்களை பேசுபவர்களை எழுதுகிறவர்களை செயல்படுபவர்களை ‘தேசவிரோத சக்திகள் பிரிவினைவாதிகள் நகர்புறநக்சல்கள் மாவோயிஸ்டுகளுக்கு உதவிசெய்பவர்கள்’ என பொய்யான குற்றங்களை சுமத்தி வேட்டையாடி வருகிறது மோடி அரசு.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பீமா கொரேகான் வழக்கு. தலித் மக்கள் ஒன்றுகூடி நடத்திய விழாவில் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவினர் ஏற்படுத்திய வன்முறையை ஒரு கலவரமாக மாற்றி மாவோயிஸ்டுகளுடன் இணைத்து மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக வளர்த்து அதற்கான சதி இலண்டனில் நடைபெற்றதாக விளக்கி 17 சமூக செயற்பாட்டாளர்களை ஊபா, ராஜதுரோகம் ஆகிய பிரிவுகளில் கைது செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைத்திருக்கிறது மோடி அரசு.
அவர்களில் ஸ்டான் சுவாமி என்ற பழங்குடியினருக்காக போராடியவர் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் சிறையிலேயே இறந்து விட்டார். விசாரணை வகைதொகையில்லாமல் நீண்டு கொண்டே போகிறது. அவர்களுக்கு பிணை மட்டுமல்ல சிகிச்சை கூட மறுக்கப்படுகிறது. அவர்களுக்கான ஆதரவு குரல்கள் மிக சன்னமானதாக மாறிப் போயிருக்கிறது.
அதுபோலவே தபோல்கர், கௌரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே போன்றோர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மக்களின் உரிமைகளுக்காக விழிப்புணர்வுக்காக எழுதியவர்கள் பேசியவர்கள் செயல்பாட்டாளர்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளை காவி – கார்ப்பரேட் மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளன. விசாரணை நீடிப்பதும், குற்றவாளிகளை பிடிப்பதிலும் காட்டும் மெத்தன போக்குகள் மோடி அரசுக்கு இருக்கும் ‘அக்கறையை’ பறைசாற்றுகிறது. இதன்மூலம் நிரந்தரமாக மக்கள் மனதில் அச்சத்தை நிலைநிறுத்தி மெத்த பணிவுடன் மோடி அரசை பின்பற்ற செய்வதே பிரதான நோக்கமாகும். நாட்டு மக்களை ஒரு அச்ச உணர்வோடு நடமாடச் செய்வதே மோடி அரசின் நோக்கம்.
2014-லிருந்து ஆட்சியிலிருந்தாலும் 2019-ல் அரிதி பெரும்பான்மையுடன் அரசை கைப்பற்றியதிலிருந்தே கூட்டாட்சியின் அடிப்படைகளை தகர்த்து ‘ஒற்றை தலைமை துருவ’ ஆட்சியை நோக்கி அதாவது பாசிச ஆட்சியை கொண்டுவருவதற்கான எத்தனிப்புகளை சட்டப்பூர்வமாக மோடி அரசு செய்து வருகிறது. இந்த 7½ ஆண்டுகளில் 356 சட்டப்பிரிவு 8 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய விசயம் இல்லை என்பதுபோல அதற்கும் மேலாக இந்திய கூட்டாட்சி முறைக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மோடி ஆட்சி.
முக்கியமான கொள்கைகளை வரையறுக்கும்போது அது நாடு முழுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உண்மையை புறந்தள்ளி அது சம்பந்தமாக மாநில அரசுகள் கருத்துகள் தெரிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்படுவது; பெரும்பாலான சட்டங்கள் பாராளுமன்றத்திலோ ராஜ்யசபாவிலோ விவாதிக்கப்படாமல் பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரடியாக அவசர சட்டங்களாக நிறைவேற்றப்படுவது ஆகியவற்றின் மூலம் சொல்லிக் கொள்ளப்படும் பாராளுமன்ற ராஜ்யசபா மாண்புகளை மோடி அரசு புதைகுழிக்கு அனுப்பிவிட்டது. இதன் மூலம் மாநில அரசுகளை கட்டளைகளை நிறைவேற்றும் இடத்தில் மட்டுமே வைத்திருக்கிறது.
இப்போது திரும்ப்பெறப்பட்ட விவசாய சட்டங்கள் விசயத்தில் இது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. நாடாளுமன்ற நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல் எதிர்கட்சிகளின் ஆட்சேபங்களை கூட கணக்கிலெடுக்காமல் அமுல்படுத்தப்பட்டதை பார்த்தோம்.
மிகப்பெரும் முடிவுகளான பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்; ரஃபேல் விமான ஒப்பந்தமும் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே நேரடியாக பிரதமர் அலுவலகத்தை மையமாக வைத்தே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
மாநில அரசுகளின் துறைகளிலும் மோடி அரசின் குறுக்கீடு!
இது மட்டுமா? கல்வி கூட்டுறவு சங்கங்கள் வங்கிகள் பற்றியெல்லாம் கொள்கை முடிவுகளையும் சட்டங்களையும் ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது. அமல்படுத்தும் பொறுப்பை மட்டும் மாநில அரசுகளிடம் விட்டு விட்டது.
சட்டம் ஒழுங்கு என்பது அரசியல் சட்டப்படி மாநிலங்களின் வரம்புக்குள் வரக் கூடியது. ஆனால், மோடி அரசோ மாநிலங்களின் வல்லமை மற்றும் தன்னாட்சி ஆகியவற்றை சிதைத்து சீர்குலைப்பதற்குண்டான அனைத்து வேலைகளையும் செய்கிறது. மாநில அரசுகளின் சட்டவரம்புக்குட்பட்ட பிரதேசங்களிலும் தங்களது சட்டங்களே செல்லுபடியாக வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் மோடி அரசு செயல்படுகிறது.
அரசியல் ரீதியாக தன்னை விமர்சிப்பவர்களை முடக்கி போட அவர்கள் மீது சட்ட விரோதமான முறையில் ஊபா(UAPA) சட்டத்தை ஏவுகிறது. மாநிலங்களுக்குள் அவர்களுக்கு தெரியாமலேயே தேசிய விசாரணை ஆணையத்தை(NIA) அனுப்பி மிரட்டுகிறது. இதன் மூலம் சட்ட ஒழுங்கு உட்பட நாட்டின் அத்தனை அதிகாரத்தையும் தன் கைகளுக்குள் முடக்கிகொண்டிருக்கிறது மோடி அரசு.
கோவிட்-19 சர்வதேச அச்சுறுத்தல் சமயத்தில் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து நாட்டை ஒருமுகமான முறையில் செயல்படுத்த நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனால், மோடியோ தன்னிச்சையாக மனம்போன போக்கில் செயல்பட்டதையே பார்க்க முடிந்தது. நாடு முழுவதும் மக்களை தட்டை தட்டி சத்தம் எழுப்பி கொரோனாவை விரட்டுவோம் என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் எம்.பி.க்களை கட்சி மாற செய்து பாஜக அரசு அமையும் வரை காத்திருந்து அதற்கு பிறகே கோவிட்-19 சர்வதேச அச்சுறுத்தலாக நாட்டில் அறிவித்தார். அது மட்டுமல்ல நான்கு மணிநேர அவகாசம் மட்டுமே கொடுத்து நாடு முழுதும் ஊரடங்கை அமுல்படுத்தினார். இந்த விசயத்தில் மாநிலங்களை கலந்தாலோசிக்காத்து மட்டுமல்ல அமைச்சரவை சகாக்களுக்கு கூட சொல்லவில்லை.
இதனால் நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது. இவற்றினால் மாநில அரசுகள் செய்வதறியாமல் திகைத்து போய் கையறு நிலையில் நின்றது காணமுடிந்தது. கடைசியில் ஊரடங்கு காரணமாக இடமாற்றத்தின் போது இறந்தவர்கள் பற்றிய எண்ணிக்கை கணக்கு தங்களிடம் இல்லை அதனால் நிவாரணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றுமோடி அரசு கைவிரித்தது.
ஊரடங்கு சட்டத்தினூடாகவே ‘தேசிய பேரிடர் மேலாண்மை’ சட்டத்தை அமுல்படுத்தியது. இப்போதும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வில்லை. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இப்போது கொரோனாவை வென்றுவிட்டதாக மோடி அரசு தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் தேவைப்படாத நிலையிலும் அமலில் உள்ளது.
இந்த சட்டம் ‘மக்களின் நகர்வை பற்றியும் பொருட்களின் இடப்பெயர்வு பற்றியும்’ கண்காணிக்க நேரடியாக மத்திய அரசுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுக்கிறது. அதனால் நிச்சயமாக நீண்ட காலத்துக்கு அமலில் இருக்கும் சாத்திய கூறுகளே அதிகம். தேசிய அளவில் குறிப்பிடத்தக்க பேரிடர்களை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பயன்படுத்தும் வகையில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள இந்த சட்டம் மோடியின் கைகளில் மாநிலங்கள் மேலான தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
(தொடரும்…)
மணிவேல் மூலக்கட்டுரை : ராமச்சந்திர குஹா நன்றி : ஸ்க்ரால்
இன்றைக்கு தேவையான கட்டுரை