ந்த மாநிலத்திலும் பட்டினிச் சாவுகள் எதுவும் பதிவாகவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 18-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பட்டினிச் சாவுகள் குறித்து ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது, 2015-ம் ஆண்டு சுகாதார ஆய்வு அறிக்கை மற்றும் ஒரு செய்தித்தாள் கட்டுரையின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி பட்டினி சாவுகளே இல்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டது.
ஒரு மாநிலம் கூட பட்டினிச் சாவுகள் இல்லை என்று ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை குறிப்பிட்டு, “நீங்கள் ஏன் 2015-2016 அறிக்கையைப் பார்க்கிறீர்கள்? இப்போது பட்டினி சாவுகள் இல்லை என்பதற்கு ஏதேனும் தரவுகள் இருக்கிறதா? செய்தித்தாள் செய்தியைப் ஏன் பார்க்க வேண்டும்?” என்று இந்திய தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் போபண்ணா மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்றிய அரசிடம் கேள்வியெழுப்பியது.
“நாட்டில் பட்டினிச் சாவுகள் இல்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? உங்களின் அதிகாரிகளிடம் பட்டினிச் சாவுகள் பற்றிய சமீபத்திய தகவல்கள் இருக்கிறதா? பட்டினிச் சாவுகள் நடக்கிறதா இல்லையா என்பதைக் குறிக்கும் ஆய்வு அறிக்கை ஏதேனும் உள்ளதா? உங்கள் அதிகாரிகளிடம் இத்தகவல்களை அளிக்கச் சொல்லுங்கள்” என்று நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கேட்டது.
படிக்க :
பட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா !
ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !
பட்டினி சாவுகளை பிரேத பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்றும், பட்டினி சாவுகளை அடையாளம் காண அதிகாரிகள் உண்மையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அஷிமா மண்டலா தெரிவித்தார்.
ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, “மாதிரி” சமூக சமையலறை திட்டத்தின் சாத்தியங்களை பற்றி ஆய்வு நடத்தவேண்டும். மாநிலங்களுக்கு சீரான சமூக சமையலறை திட்டத்தை உருவாக்குவது நீதித்துறையின் பொறுப்பல்ல. ஆனால் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து அதை மத்திய அரசு செய்ய வேண்டும். சமூக சமையலறை திட்டங்களுக்கான பரிந்துரைகளுடன் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினி சாவுகளின் நிலை குறித்த அறிக்கைகளை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ஜார்க்கண்டில் 2017-ம் ஆண்டு பட்டினிக்கு பலியான சிறுமி
ஆர்வலர்கள் அனுன் தவான் இஷான் தவான் மற்றும் குஞ்சனா சிங் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்த மனுவில், “நாட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இறப்புகளுக்கான புள்ளி விவரங்கள் இருந்தாலும் பட்டினியால் இறந்தவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் உள்ள மக்கள் தொகையில், பசியுடன் இருப்பவர்கள் தோராயமாக 24 சதவீதம் பேர். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் பாதிப்பு 14.8 சதவீதம் ஆகும். இது உலகளாவிய மற்றும் ஆசிய சராசரியை விட அதிகம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 19 கோடி மக்கள் தினமும் இரவில் வெறும் வயிற்றில் உறங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தேசிய சுகாதார ஆய்வு 2017-ல் தெரிவித்தது. மேலும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு நாளும் சுமார் 4500 குழந்தைகள் இறக்கின்றனர் என்பதும் பசியின் காரணமாக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளின் இறப்புகள் ஏற்படுகின்றன என்பதும் மிகவும் ஆபத்தான புள்ளிவிவரங்கள்.
வேலையின்மையாலும், சம்பளக் குறைவாலும் ஏராளமான மக்களும் குழந்தைகளும் போதுமான உணவுகளை உட்கொள்ள முடியாமல் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு இறக்கின்றனர். ஆனால், இறப்புகளே இல்லை என்று ஒரு பழைய தரவுகளைக் காட்டி பொய்கூறிவருகிறது ஒன்றிய மோடி அரசு. கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் மோடி அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
சந்துரு
செய்தி ஆதாரம் : தி இந்து, தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க