பாகியா பிர்ஜியா ஒரு சிக்கலை சரி செய்ய வேண்டிய சூழலில் உள்ளார். 42 வயது விவசாய தொழிலாளியான இவருக்கு அந்தியோதயா அன்ன யோஜனாவின் (ஏழ்மையான இந்தியர்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் திட்டம்) கீழ் 35 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் கிடைக்கின்றன. பாதிக்கப்படும் பழங்குடிப்பிரிவில் இருப்பதால் பிர்ஜியாவிற்கு இது வழங்கப்படுகிறது.

ஆனால் மாநில தலைநகரான ராஞ்சிக்கு மேற்கே 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லடேகர் மாவட்டத்தின் தொலைதூர மகுவாடாண் (Mahuadanr) தொகுதியில் வசிக்கும் அவருக்கு சற்று நடந்து செல்லும் தொலைவில் உள்ள சகோதரரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களுடன் தானியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குடும்ப அட்டை இல்லாததால் அவரது சகோதரரர் குடும்பம் இந்தியாவின் பொது பகிர்மான அமைப்பிலிருந்து விலையில்லா உணவு தானியங்களைப் பெற முடிவதில்லை.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களில் ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் நடந்து டிசம்பர் 23-ம் தேதியில் முடிவு வெளியாகவுள்ளது. இந்நிலையில் 2014 மற்றும் 2018-க்கு இடையில் PDS-ல் உள்ள போலிப் பயனாளிகளை நீக்குவதற்காக நடத்தப்பட்ட செயல்முறையினால் உணவு தானியங்களைப் பெற முடியாத நிலையில் ஒரு பகுதி ஏழை மக்கள் உள்ளனர். தொழில்நுட்பத்தை சார்ந்துள்ள இந்த தீர்வானது சில நேரங்களில் பயனாளிகளுக்கான கதவை சட்டவிரோதமாக அடைத்துள்ளது.

புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?

ஜார்கண்டின் நலிவடைந்த 3.3 கோடி மக்களில் 71% அல்லது 2.33 கோடி மக்களை பாதுகாப்பதில் PDS அமைப்பு தோல்வியடைந்துள்ளது. ஜார்கண்டில் 2015 மற்றும் 2019 -க்கு இடையில் பட்டினி மற்றும் மானிய விலை உணவு தானியங்கள் கிடைக்காததால் 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு குறித்து செயல்படும் உணவுக்கான உரிமை என்ற அமைப்பு கூறுகிறது.

நான்கு நாட்களாக பலமுறை இதுகுறித்து தொடர்பு கொண்ட போதும் உணவு, பொது பகிர்மானம் மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மாநிலப் பொறுப்பாளரான அமிதாப் கவுசலை தொடர்பு கொள்ள இயலவில்லை.

PDS -ன் இயலாமை, ஜார்க்கண்டின் உயர் வறுமை விகிதம், தேசிய சராசரியான 7.4%, ஒப்பிடும் போது 9.2% வேலையின்மை விகிதம், தேசிய சராசரியான 75.4% ஒப்பிடும் போது 70.3% கல்வியறிவு விகிதம் மற்றும் நாட்டின் சில மோசமான ஊட்டச்சத்து குறியீடுகளுடன் இணைந்து கடுமையான ஊட்டச்சத்து நெருக்கடிக்கு வழி வகுத்திருக்கிறது.

குன்றிய வளர்ச்சி  பாதிப்பில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் ஜார்கண்ட் உள்ளது என்றும் 15-49 வயது பெண்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ளது என்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16 தெரிவித்துள்ளது. விளைவாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 29 இறப்புகள் என நாட்டிலேயே 14-வதாக இருக்கிறது.

பாரதிய ஜனதா தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்த நெருக்கடி கடுமையாக உள்ளது. பட்டினியால் இந்த மரணங்கள் நடக்கவில்லை என்று முதலமைச்சர் ரகுபார் தாஸ் முதலில் மறுத்தாலும் வேறு வழியில்லாமல் இந்த இறப்புகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை நியமிக்க ஆணையிட்டார்.

ஆதாரின் தொடர்பு :

தினசரி கூலியாக ரூ. 150 -க்கு மாதம் 12-15 நாட்கள் வேலை தேடி சம்பாதிக்கும் கைம்பெண் பிரிஜா தனியாக வசிக்கிறார். அவரது சகோதரரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களில் எவருக்கும் ஆதார் இல்லை என்பதால், விலையில்லா உணவு தானியங்களை பெறுவதற்கு குடும்ப அட்டை இல்லை.

நவம்பர் 30 வரை மாநில மக்கள்தொகையில் 91.3% பேர் ஆதார் ( தேசிய எண்ணிக்கை 89.6% ) பெற்றிருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) அறிக்கை கூறுகிறது.

பிரிஜாவின் சகோதரரின் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஆதார் அட்டைகளைப் பெற வேண்டுமென்றால் 120 கி.மீ தூரத்தில் உள்ள மாவட்ட தலைமையகத்திற்கு பயணிக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் ஆதாரில் சேர்க்க மறுக்கிறார்கள் – இதற்கு பணம் செலவாகும்.

ஆதாருக்கான செலவினங்களை பிரிஜா பட்டியலிட்டார்: ஒவ்வொருவருக்கும் பேருந்து கட்டணம் ரூ. 80 மற்றும் சேர்க்கைக்கு தலா ரூ. 300 – 400. ஆதார் பதிவு இலவசம் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால் முகவர்கள் மற்றும் தொகுதியில் உள்ள அரசாங்க அதிகாரிகள் கூட அந்த கட்டணத்தை கேட்டதாக பிர்ஜியா கூறினார்.

இது போன்ற பயணத்திற்கான செலவு என்பது கிட்டத்தட்ட அவர்களது ஒரு மாத வருமானத்தைக் குறிக்கும்.

“அவர்களால் சந்தையில் இருந்து எதையும் வாங்க முடியாது என்பதால், எனக்கு கிடைக்கும் உணவு தானியத்திலிருந்து கொடுத்து உதவி செய்கிறேன்” என்று அவர் கூறினார்.

அவரது சகோதரர் டிசம்பர் 2018-ல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மேலும் அவரது சகோதரரின் மனைவி உள்ளூர் சந்தையில் ஓரிரு உணவகங்களில் தட்டுக்கழுவி நாளைக்கு சுமார் ரூ. 100 சம்பாதித்தார். குடும்பம் உணவு இல்லாமல் அந்த மாதத்தில் ஓடியது.

புத்தாண்டன்று, அவரது சகோதரருடன் இருந்த அவரது தாயார் புத்னி இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு பல நாட்கள் உணவு இல்லாமல் அந்த குடும்பம் எப்படி இருந்தது என்பதை விவரித்தார்.

மாண்டு போன அவரது தாயாரை கிராமவாசிகள் பார்க்கும்வரை அவர் பட்டினியால் வாடியுள்ளார். வேலை தேடுவதிலிருந்து உள்ளூர் பள்ளிக்கு செல்வதுவரை பல்வேறு காரணங்களுக்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் அப்போது வீட்டில் இல்லை.

படிக்க:
♦ உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா
♦ உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

ஒவ்வொரு மாதமும் புத்னி போன்ற PVTG உறுப்பினர்களுக்கு நேரடியாக வீட்டு வாசலில் உணவுப்பொருள்கள் வழங்கப்படும், என்ற ஒரு பெயரளவிலான திட்டம் ஜார்கண்ட் அரசாங்கத்திடம் இருந்தாலும், அது அனைவரையும் சென்றடையவில்லை. ஒரு கிலோ மீட்டருக்கும் சற்று குறைவான தூரத்தில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று தனது உணவுப்பொருள்களுக்காக ஒவ்வொரு மாதமும் வரிசையில் நிற்க வேண்டும்.

அவரது தாயார் இறந்த போதிலும் அவருக்கான உணவு தானியங்களை உள்ளூர் நியாய விலை கடை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

“நான் அவர்களிடம் பல முறை சென்றிருக்கிறேன், ஆனால் எங்களுக்கு ஆதார் அட்டைகளையும் வழங்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்று பிரிஜா கூறினார். சத்தீஸ்கரின் எல்லையில் தன்னுடய கிராமம் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், “நாங்கள் அந்த பக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இடத்தை சேர்ந்தவர்கள் அல்ல எனவே நாங்கள் வெளியாட்கள் என்று அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள்” என்று மேலும் கூறினார். தனது குடும்பம் நான்கு பத்தாண்டுகளாக ஜார்க்கண்டில் வாக்களித்துள்ளது என “வெளியாட்கள்” என்ற குற்றச்சாட்டுகளுக்கு பிர்ஜியா பதிலளித்தார்.

மக்களிடம் சொந்த வீட்டு முகவரிக்கான ஆவணங்கள் இருந்தால் போதும், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எந்த நிலையிலும் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க விதிகள் அனுமதிக்கின்றன.

ஜார்கண்ட் முழுவதும் பிர்ஜியாவின் கதையை காண முடிகிறது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 27,000 என்ற வறுமைகோடு வரையறையின் படி ஜார்கண்டின் மக்கள் தொகையில் 39.1% வறுமையில் வாழ்கின்றனர். சத்தீஸ்கருக்குப் பிறகு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் ஜார்கண்டில் உள்ளனர்.

பாகியா பிரிஜாவின் குடும்பத்தைப் போலவே, ஜார்க்கண்டின் பல PDS சிக்கல்களுக்கு ஆதார் காரணமாக உள்ளது. போலிகளை உண்மையான பயனாளிகளிடமிருந்து பிரிக்க உதவும் என்ற மைய அரசின் நீண்டகால கூற்றுக்கு ஏற்ப, குடும்ப அட்டைக்கு ஆதாரை கட்டாயமாக்கிய மாநிலங்களில் ஜார்கண்டும் ஒன்றாகும்.

பிப்ரவரி 2018 -ல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட தரவுகளின்படி, 2013 மற்றும் 2017 -க்கு இடையில் நீக்கப்பட்ட 2.75 கோடி போலி குடும்ப அட்டைகளில் 4,53,000 குடும்ப அட்டைகள் ஜார்கண்டை சேர்ந்தவை. PDS பகிர்மானத்தை இன்னும் துல்லியமாகவும், பயனுள்ள முறையிலும் திறமையாகவும் கொண்டு சேர்ப்பதற்கு தான் இந்த செயல்முறை என்று அரசாங்கம் கூறியது.

உண்மையில், PDS -ஆதார் இணைப்பு என்பது பிரிஜா போன்ற பயனாளிகளுக்கு புதிய சிக்கல்களை தான் கொண்டு வந்துள்ளது.

டிசம்பர் 2017-ல், ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்டத்தில், ஆறு மாதங்களுக்கு நியாய விலைக்கடையில் தானியங்கள் மறுக்கப்பட்டதால் 11 வயது சந்தோஷி குமார் பட்டினியால் இறந்த செய்தியை ஊடக அறிக்கைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அவரது குடும்ப அட்டை அரசாங்கத்தால் நீக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

உயிரியளவியல் சரிபார்ப்பு:
குடும்ப அட்டைகளை ஆதாரோடு கட்டாயமாக இணைப்பது மட்டுமல்லாமல் மின்னணு விற்பனை முனை (point-of-sale) கருவி மூலம் PDS பயனாளிகள் சரிபார்ப்பை 2016-ம் ஆண்டில் ஜார்கண்ட் அரசு தானியங்கிமயமாக்கியது. உணவுப் பொருள்களை வழங்கும் போது பயனாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த உயிரியளவியல் முறையை பயன்படுத்தும் படி ஒவ்வொரு நியாய விலைக் கடைகளும் வலியுறுத்தப்பட்டன.

இருப்பினும், இந்த ஆரவாரமான நடைமுறை குடும்பங்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடும்.

மகுவாடாண்டிற்கு (லாட்டிஹார் மாவட்டம்) வடக்கே 150 கி.மீ தொலைவில் உள்ள கார்வா மாவட்டத்திலுள்ள பெஷ்கா கிராமத்திலுள்ள 28 வயதான சகிலா பீபியின் குடும்பம், ஏப்ரல் 2018 -லிருந்து 20 மாதங்களில் 8 மாதங்களுக்கு உணவுப்பொருள்களை நியாய விலைக்கடையில் பெறவில்லை. மாநில தேர்தல்களை முன்னிட்டு ஆகஸ்ட் 2019 -க்குப் பிறகுதான் மீண்டும் நிலைமை சரியானது.

படத்திலுள்ளவாறு அவரது குடும்ப அட்டையில் உள்ள சில உள்ளீடுகளில் நீல நிற மை அடையாளம் உள்ளன.

28 வயதான ஷகிலா பீபி தனது குடும்ப அட்டையை காட்டுகிறார். இது ரேஷன் பொருள்கள் பகிர்மானத்தில் உள்ள இடைவெளிகளைக் காட்டுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் அட்டையை வைத்திருந்தாலும், உணவுப்பொருள்களை வாங்க அவை போதுமானதாக இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

“ஒவ்வொரு முறையும் நான் நியாயவிலை கடைக்குச் செல்லும்போது, என் கட்டைவிரலை கருவி சரியாக அடையாளம் காட்டாது. கடைக்காரரும் திரும்பி மறுபடியும் வரும்படி என்னிடம் சொல்லுவார்” என்று அவர் கூறினார். அவர் மீண்டும் வருவார். மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்.

“உணவு தானியங்கள் முடிந்துவிட்டன, அடுத்த மாதம் நான் திரும்பி வர வேண்டும் என்று அவர் கூறுவார்” என்று கூறினார். ஆனால் அடுத்த மாதம் திரும்பிச் செல்லும்போது முந்தைய மாத பொருள்களை இனி கொடுக்க முடியாது என்று கடைக்காரர் கூறுவார்.

ஷகிலா பீபிக்கு நான்கு இளம் குழந்தைகள் உள்ளனர் – மூத்த குழந்தைக்கு 13 வயதாகிறது. இளைய குழந்தைக்கு எட்டு வயதாகிறது. ஆனால் அவரது கணவருக்கு நிலையான வேலை இல்லை என்பதால் அவரது குடும்பதிற்கும் நிலையான வருமானமும் கிடையாது.

அவரது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் அரிசி, சோளம் மற்றும் குளிர்காலத்தில் கடுகு ஆகியவற்றை அவர்கள் பயிரிடுகிறார்கள். ஆனால் நியாய விலைக்கடை பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் கடந்த ஆண்டு கையிருப்பில் இருந்து மிச்சமான அரிசியை கொண்டு சமாளிக்க வேண்டும்.

ஷகிலா பீபி நாளுக்கு இரண்டு முறை அரிசியைக் கொதிக்க வைத்து தனது குழந்தைகளுக்கு கஞ்சித் தண்ணியை பரிமாறுகிறார். சில நாட்களில், அவர் தனது குழந்தைகளுக்கு சிறிது உப்பு சேர்த்து உணவளிப்பார். மற்ற நாட்களில் சோறுடன் கடுகு இலை சட்னி செய்து கொடுப்பார்.

ஷகிலா பீபி அவரது குழந்தைகளுடன்.

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் (District Legal Services Authority) உறுப்பினரும் கிராமவாசியுமான கலாமுதீன் அன்சாரியிடம் செல்லும் வரை இது தொடர்ந்தது. ஏதோ தவறு இருப்பதை அன்சாரி உணர்ந்தார். அவர் ஷகிலா பீபியிடம் விதிகளை சுட்டிக்காட்டினார்: உயிரியளவியல் அடையாளம் பொருந்தவில்லை என்றால் பயனாளியை நேரில் சரி பார்தது பொருள்களை கடைக்காரர் கொடுக்க வேண்டும்.

“எந்தவொரு சூழ்நிலையிலும் பயனாளிகளுக்கு பொருள்களை நியாயவிலை கடைக்காரர்கள் மறுக்க முடியாது என்று விதிகள் தெளிவாகக் கூறுகின்றன” என்று அன்சாரி கூறினார். “உண்மையில், அடையாளம் பொருந்தாத நிலையில் ஒரு பதிவேட்டின் மூலம் பயனாளிகளின் விவரங்களை கவனித்து அவர்களுக்கு உரிய பொருளை கடைக்காரர் வழங்க வேண்டும்.”

புகார் கொடுத்தப்பின் குறைந்தது இரண்டு மாதங்களாவது உணவுப்பொருள்கள் ஷகிலா பீபிக்கு கிடைக்கவில்லை. கடைக்காரர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் ஜூன் மாதத்திலிருந்து அவர் தனது பொருட்களை தவறாமல் பெறத் தொடங்கினார். POS கருவி அவரது கட்டைவிரலை இன்னும் ஏற்கவில்லை. ஆனால் இப்போது ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற்று அடையாளத்தை சரிபார்த்து கொள்கிறார்.

படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
♦ ஜார்கண்ட் : ஆதாரை இணைக்கவில்லை என்றால் மரணம் !

தொழில்நுட்பம் ஒரு தீர்வல்ல :
ஷகிலா பீபியின் மண் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தூசி நிறைந்த, சீரற்ற சாலையின் புதர்களைத் தாண்டி ஹலிமா அன்சாரியின் வீடு உள்ளது.

POS கருவி 28 வயதான ஹலிமா அன்சாரியின் கட்டைவிரல் ரேகையை ஏற்காததால் நியாய விலைக்கடை பொருள்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒன்பது மாதங்கள் கிடைக்கவில்லை. அதே ஒரு முறை கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, ஷகிலா பீபிக்கு சில நாட்களுக்கு பிறகு பொருள்களை கடைக்காரர் மீண்டும் கொடுக்க தொடங்கினார்.

முதல் இரண்டு மாதங்களுக்கு உணவுப்பொருள்கள் சீராக கிடைத்ததில் ஹலிமா அன்சாரிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இது பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றியது” என்று அவர் கூறினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கல் ஒன்று இருப்பதை உணர்ந்தார்.

சரக்கு வண்டி ஓட்டுனரான அவரது கணவர் கைப்பேசியை வேலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். வழக்கமாக ஜார்கண்டிலிருந்து ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களுக்கு சரக்குகளை ஓட்டி செல்கிறார். எனவே, அவர் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வேலையில் ஈடுபடுகிறார் என்று அவர் விளக்கினார்.

ஹலிமா அன்சாரி, சரக்கு வண்டி ஓட்டுனரான அவரது கணவர் தொடர்ந்து பல மாதங்களாக வேலையில் இருக்கும் போது பொருள்களை வாங்க முடியாது.

இதன் பொருள் அவரால் இனி OTP-ஐ பயன்படுத்த முடியாது. “எங்களால் இன்னொரு கைப்பேசியை வாங்க முடியவில்லை என்று கடைக்காரருக்கு நிலைமையை விளக்கினேன். ஆனால் அவர் செவிசாய்க்கவில்லை.” என்று ஹலிமா அன்சாரி கூறினார்.

ஒருமுறை கடவுச்சொல்லை சார்ந்து இருப்பது என்பது உணவு தானியங்களின் ஒதுக்கீட்டை பெறுவதில் மக்களுக்கு புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்று DLSA உறுப்பினர் கலாமுதீன் அன்சாரி கூறினர்.

“கார்வாவில் (Garhwa) மொபைல் போன் இணைப்பு இல்லாத சில கிராமங்கள் உள்ளதால் நெட்வொர்க்குடன் இணைக்க நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் கிராமவாசிகள் உள்ளனர் – சிலநேரங்களில் 5-6 கிமீ தூரம் சென்று கூட ஒருமுறை கடவுச்சொல்லிற்காக காத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். இந்த புகார்களுக்கு கருத்து தெரிவிக்க பெஷ்கா கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடை முகவரான வீரேந்திர துபே மறுத்துவிட்டார்.

ஆதாரும் பயனாளர் நீக்கமும் :
நவம்பர் 2019-ல், மும்பையைச் சேர்ந்த சமூக தாக்க அறிவுறுத்தல் குழுவான டால்பெர்க் (Dalberg) நடத்திய ஒரு கணக்கெடுப்பின் முடிவுகள் ஆதார் இணைப்பினால் ஏற்பட்ட பயனாளர் நீக்கங்களை சுட்டிக்காட்டின.

ஆதார் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள சேவைகளில் ஆதார்-பி.டி.எஸ் இணைப்பு சேவைதான் மிகவும் மோசமானது என்பது அனுபவபூர்வமாக மக்களுக்கு தெரிந்தது. ஆதார் இணைப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சலுகைகள் பறிக்கப்பட்ட ஆறாவது மாநிலம் ஜார்கண்ட் (5.9%) என்று கணக்கெடுப்பு காட்டுகிறது.

நாடு தழுவிய அளவில், கடைசியாக PDS-ன் கீழ் உணவு தானியங்களைப் பெற முயற்சித்த 1.5% பயனர்களுக்கு உயிரியளவியல் அடையாள சோதனை தோல்வியையே தந்துள்ளது.

குறைபாடுகள் இருந்தாலும் ஆதாருக்கு அதிக வரவேற்பு இருப்பதாக அறிக்கை கூறியிருக்கிறது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் PDS, ஓய்வூதியம் மற்றும் ஊதியங்கள் போன்றவை ஆதார் முறையாக வழங்கியுள்ளதாக 80% பயனர்கள் கருதுகின்றனர். ஆதார் இணைப்பு சிக்கலால் பதிக்கப்பட்டவர்களில் 67 விழுக்கட்டினர் ஆதார் குறித்து மன நிறைவு கொண்டதாக கூறினர்.

“கிடைத்தால் போதும் என்று எண்ணுவதால் பல மாதங்களாக தவறவிட்டவர்கள் கூட ஆதார் அவர்களுக்கான சேவையை மறுப்பதாக உணரவில்லை” என்று அறிக்கை கூறியது. “நல்ல நோக்கங்களுடன் ஆதார் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது” என்ற நம்பிக்கையை பலர் வைத்திருந்தனர். எனவே, இதன் விளைவாக ஏற்படும் எந்தவொரு சிக்கலும் இறுதியில் தீர்க்கப்படும் என்றே அவர்கள் நம்புகின்றனர்.

ஊட்டச்சத்தில் சமரசம் :
திறனற்ற PDS நடைமுறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊட்டச்சத்து நெருக்கடியை அதிகரிக்கும் என்று பிரச்சாரகர்கள் மத்தியில் இப்போது ஒரு அச்சம் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஒருபோதும் பழங்களை வாங்குவதில்லை, சிலர் மட்டுமே காய்கறிகளை தவறாமல் வாங்குகிறார்கள் என்று கார்வாவைச் சேர்ந்த DLSA உறுப்பினர் அன்சாரி கூறினார்.

மாதிரிப் படம்.

உலகளாவிய பட்டினி குறியீடு – 2018 ஆய்வு மற்றும் குடிமை சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி இந்தியாவில் “கடுமையான” பட்டினி சிக்கல் இருப்பதாகவும், அது அதன் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கையை விட மோசமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஜார்க்கண்டின் 59.3% மக்கள் மட்டுமே ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட முடியும் என்றும், 50.3% மக்களுக்கு போதுமான உணவு இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தீவிர வறுமை முதல் இரத்த சோகை பாதிப்புக்குள்ளான பகுதிகள் வரை – ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் மோசமான ஊட்டச்சத்துக்கு பங்களிக்கும் உள்ளார்ந்த காரணிகள் உள்ளன, என்று உணவு உரிமை பிரச்சாரத்தின் மாநில அமைப்பாளாரும், ஜார்க்கண்ட் அரசாங்கத்தால் மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் பட்டினி சிக்கலை ஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட குழுவின் உறுப்பினருமான அஸ்ரஃபி நந்த் பிரசாத் கூறினார்.

இதற்கிடையில், உணவு தானியங்கள் மறுக்கப்படுவதுடன் சேர்ந்து அரசின் மோசமான ஊட்டச்சத்து திட்டமும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. “கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் போன்ற அரசாங்கத்தின் திட்டங்கள், அதை செயல்படுத்துவதில் பல சிக்கல்களைக் கொண்டுள்ளன” என்று அவர் கூறினார். “பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு கூட சரியாக வழங்கப்படுவது இல்லை” என்றும் கூறினார்.


கட்டுரையாளர்  : Kunal Purohit
தமிழாக்கம்  : சுகுமார்
செய்தி : ஸ்க்ரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க