Tuesday, June 18, 2024
முகப்புசெய்திஜார்கண்ட் : ஆதாரை இணைக்கவில்லை என்றால் மரணம் !

ஜார்கண்ட் : ஆதாரை இணைக்கவில்லை என்றால் மரணம் !

-

க்கள் நலத் திட்டங்களின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பினும், ஆதாரை மறைமுகமாகக் கட்டாயமாக்கி வருகிறது பாஜக அரசு. தான் ஆளும் மாநிலங்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு கண்டிப்பாக ஆதாருடன் ரேஷன் அட்டைகளை இணைத்திருக்க வேண்டும் என மக்களை நிர்பந்தித்து வருகிறது பாஜக.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் சிம்டேகா மாவட்டத்தில் கரிமாட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்திற்குத் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கும் மேலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படாத நிலையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பட்டினியால் பலியாகியுள்ளார்.

அச்சிறுமியின் தந்தை மனநிலை பாதிக்கப்பட்டவராதலால் வேலைக்குச் செல்வதில்லை. இவரது தாயும் சகோதரியும் அருகில் உள்ள பண்ணைக்கு புல்லறுக்கும் வேலைக்குச் சென்றால் வாரக் கூலியாக ரூ.80 முதல் 90 வரை மட்டுமே கிடைக்கும். இந்த சொற்ப சம்பளத்தைக் கொண்டு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவது என்பது கனவிலும் நினைக்க முடியாதது.

பட்டினி கொடுமையால் இறந்துபோன சிறுமி

ரேஷன்கடைகளில் சலுகை விலையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இவர்களது குடும்பம் பசியாறி வந்தது. இந்நிலையில் தான் ரேஷன் அட்டையுடன், மானியங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட ஆதார் எண்ணை இணைக்கும் பணியைத் துரிதப்படுத்தியது அம்மாநில பாஜக அரசு. அச்சிறுமியின் குடும்ப ரேஷன் அட்டை, ஆதார் எண் இணைக்கப்பட்ட பட்டியலில் வரவில்லை எனக் கூறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பாகவே அக்குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன.

இக்காலகட்டங்களில், பள்ளியில் கொடுக்கப்படும் ஒரு நேர மதிய உணவு, சிறுமி சந்தோஷிகுமாரியின் பசியை ஆற்றி வந்தது. தசராவை ஒட்டி, பள்ளியும் விடுமுறை விடப்பட்டதால் சுமார் 7 நாட்களுக்கு ஒருவேளை உணவும் கிடைக்காமல் பசியால் சுருண்ட சிறுமி சந்தோஷிகுமாரி, கடந்த செப்டம்பர் 28, 2017 அன்று பட்டினியால் இறந்து போனாள்.

சிறுமி சந்தோஷிகுமாரியின் மரணத்திற்குக் காரணம் பட்டினி அல்ல, மலேரியா தான் எனக் கூசாமல் பொய்யுரைத்திருகிறார்கள், அதிகார வர்க்கத்தினர். அதற்குத் தகுந்தாற் போல் உள்ளூர் மருத்துவரையும், அரசு அதிகாரிகளையும், பஞ்சாயத்துத் தலைவர்களையும் பேச வைத்திருக்கின்றனர். உள்ளூர் மருத்துவர் அவரது வீட்டிற்கு போய் மலேரியாவிற்கு ஊசி போட்டுவிட்டு வந்ததாகக் குறிப்பிடுகிறார். உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவரோ ஒரு படி மேலே போய், அவரது தாய் காலாவதியான மருந்தை உபயோகித்ததாகக் குறிப்பிடுகிறார்.

மொத்தத்தில் இப்பட்டினிப் படுகொலைக் குற்றத்திலிருந்து அரசைக் காப்பாற்ற மலேரியா, காலாவதியான மருந்து என பல்வேறு கதைகளை ஜோடித்திருக்கிறது அதிகாரவர்க்கம். ஆனாலும் இக்கும்பலால், ஆதாருடன் ரேஷன் அட்டை இணைக்கப்படாததால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை என்பதை மறுக்க முடியவில்லை. எனவே, பாஜக கும்பல் வழக்கமான தனது இரட்டை வேட நாடகத்தை ஆரம்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, ஜார்கண்ட் மாநில அரசின் பொது விநியோகத்துறை அமைச்சர் சரயூ ராய் அரசு அதிகாரிகளைக் கண்டித்தும், விசாரணை நடத்தப் போவதாகவும் ‘சவுண்டு’ விட்டிருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் நாராயணா, வெங்கடரமணா மற்றும் சுப்பு ஆகிய மூன்று ஏழைகள் ஆதாருடன் ரேஷன் அட்டைகள் இணைக்கப்படாததால், கடந்த 8 மாதங்களாக ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டு, தொடர்ச்சியான அரைப்பட்டினி நிலையால் கொல்லப்பட்டனர். சந்தோஷிகுமாரியின் மரணம் அம்பலப்பட்ட பின்னர், அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் வெளிவருகின்றன.

பல்வேறு பத்திரிக்கைகளும் சந்தோஷிகுமாரியின் மரணத்தை ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்கக் கட்டாயப்படுத்தியதன் விளைவில் நிகழ்ந்த முதல் மரணம் எனக் குறிப்பிடுகின்றனர். சந்தோஷிகுமாரியின் மரணம், பகிரங்கமாக வெளியில் தெரிந்த பட்டினிச்சாவு என்ற வகையில் வேண்டுமானால் முதல் மரணமாக இருக்கலாம்.

ஆனால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத காரணத்தால் ரேஷன் மானியப் பொருட்கள் மறுக்கப்பட்டு, அரைப்பட்டினியால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகி நிகழ்ந்த மரணங்கள், சந்தோஷிகுமாரி மரணத்தில் மலேரியாவைக் காரணமாகக் காட்டியது போல், பொய்யாகக் காரணம் காட்டப்பட்டு மறைக்கப்பட்ட பட்டினிச் சாவுகள், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நிகழ்ந்து கொண்டிருக்கும், நிகழவிருக்கும் மரணங்கள், என இந்தியா முழுவதும் பட்டினிச் சாவின் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் விழுந்திருக்கும் பிணங்கள் ஏராளம்.

சமீபத்தில் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் ஆதார் திட்டத் தலைவர் நந்தன் நீலகேனி, “ஆதார் எண்ணுடன் மானியங்களை இணைத்ததன் மூலம் இந்திய அரசிற்கு சுமார் 9 பில்லியன் டாலர் (ரூ.58,573 கோடி) நிதி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இலட்சக்கணக்கான சந்தோஷிகுமாரிகளுக்கும், நாராயணன்களுக்கும், வெங்கடரமணன்களுக்கும், சுப்புகளுக்கும் அவர்களது அடிப்படை உரிமையான உணவு மறுக்கப்பட்டு மரணத்தைத் தழுவியதன் விளைவு தான் இந்த ரூ.58,573 கோடி நிதி சேமிப்பு. ஆதாரின் மூலமாக ரேஷன் மானியம் மட்டுமா இரத்து செய்யப்பட்டது? ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்பது போன்று கலர்கலராக ‘ரீல்’ விட்டு சமையல் எரிவாயுவிற்கான மானியத்தையும் இரத்து செய்தது மோடி அரசு. ரேஷன் பொருட்களை சந்தை விலையில் முழுப்பணமும் செலுத்தி வாங்க நிர்பந்திப்பதன் மூலம் பல ஏழை எளிய மக்களை ரேஷன் மானியத்தில் இருந்து சர்வசாதாரணமாக விலக்கி வைத்துவிட்டது.

இந்தியாவில் ஆதாரின் மூலம் கோடிக்கணக்கான ஏழை எளியவர்களின் வாழ்வைக் குதறியெடுத்துவிட்டு, ஐ.எம்.எஃப். மற்றும் உலகவங்கி எஜமானர்களிடம் தனது இரத்தம் தோய்ந்த பற்களைக் காட்டி வாலாட்டியுள்ளார் நந்தன் நீலகேனி. ஏழைகளின் பிணத்தின் மீதிருந்து சுரண்டப்பட்டது தான் ‘மிச்சப்படுத்தப்பட்டதாகச்’ சொல்லப்படும் இப்பெரும் தொகை. இத்தொகைதான் சலுகைகளாகவும், கடன் ரத்தாகவும், அரசு தனியார் கூட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன.

ரேஷன், அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சலுகைகளை ஒழித்துக் கட்டுவதன் மூலம் பட்டினியாலும், நோய்களாலும் கொல்லும் கொலைகார அரசின் இருப்பைக் கேள்வி கேட்காத வரையில் இந்த பட்டினிச் சாவுகள் தொடரும்! ஏழைகளிடம் தொடங்கியிருக்கும் இந்தப் பட்டினிச் சாவுகள் வேலையிழப்பாக இன்று ஐ.டி. ஊழியர்கள் வரையிலும் தொடர்வதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதன் பின்னும், வளர்ச்சி – முன்னேற்றம் என்ற ஆளும்வர்க்கங்களின் மாயத் தோற்றத்திற்கு மயங்கியே கிடக்கப் போகிறோமா என்ன ?

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க