கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களையும், அந்த நோய் குறித்த இன்னபிற ஆலோசனைகளையும் வழங்கும் ஆரோக்கிய சேது என்கிற திறன்பேசிச் செயலி கடந்த ஏப்ரல் 2ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் மிகக் குறுகிற காலத்திலேயே சுமார் 6 கோடி பேர் ‘ஆரோக்கிய சேது’ செயலியை தங்களது திறன்பேசியில் நிறுவியுள்ளனர். செல்பேசி சேவை நிறுவனங்கள் மட்டுமின்றி அரசும் தொடர்ந்து இந்த செயலியை நிறுவி ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில்’ பங்கேற்குமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றது.

ஆரோகிய சேது செயலியை திறன்பேசிகளில் நிறுவுவது குறித்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த செயலியை நிறுவிய பின் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ‘சிவப்பு பிரதேசங்கள்’ அருகில் இருந்தாலோ, பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தாலோ அதுகுறித்த எச்சரிகைகளை பயனர் பெற்று அதனடிப்படையில் தம்மை நோயில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்பது குறுஞ்செய்திகளின் சாரம்.

திறன்பேசிகளின் புவிசார் இருப்பிடத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஆரோக்கிய சேது செயலி, இதே செயலி நிறுவப்பட்ட பிற திறன்பேசிகள் அருகில் வருவதை ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ் மூலம் அறிந்து கொள்கிறது. அதே போல் செயலி நிறுவப்பட்ட திறன்பேசி எந்தெந்த இடங்களுக்குச் செல்கிறது என்பதை கண்காணித்து அந்த இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி இருப்பின் அது குறித்து எச்சரிகை செய்கிறது. அதே போல் செயலியை நிறுவிய ஒருவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அந்த விவரங்களை செயலியில் உள்ளீடு செய்தால் அந்த விவரங்கள் (அவர் சென்ற இடங்கள் உள்ளிட்டு) மையமான கணினிக்கு ஏற்றப்படுகின்றது.

ஒருவரின் புவிசார் இருப்பிடத்தை (geo location) இந்த செயலி தொடர்ந்து கண்காணிப்பதோ, அந்த தகவல்களை ‘பிற நிறுவனங்களுக்கு’ ‘வேறு நோக்கங்களுக்காக’ வழங்கப்படக்கூடும் என்பதைக் குறித்தோ பயனர்களுக்கு பெரிய அளவில் அக்கறை இல்லை என்பதையே குறுகிய காலத்தில் கோடிக்கணக்கானவர்கள் அதை தரவிறக்கம் செய்து தங்கள் செல்பேசிகளில் நிறுவியுள்ளது காட்டுகின்றது.

சிக்கல் என்னவென்றால், இந்தியாவில் தனியுரிமை (Privacy) குறித்த சட்டங்கள் தெளிவாக வறையறுக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இவ்வாறு தனிநபர்களின் விவரங்களை பெருமளவிற்கு சேகரித்து மின்தரவுகளாக ஒரே இடத்தில் குவித்து வைக்கவுள்ளது ஆரோக்கியசேது. இவ்வாறு குவிக்கப்படும் மின்தரவுகள் எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதைக் குறித்தோ, அது வேறு நிறுவனங்களுக்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்படாது என்கிற உத்திரவாதமோ கிடையாது.

படிக்க:
♦ இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !
♦ மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்ற வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் !

ஆதார் எண்ணுடன் குடிமக்களின் உயிரி மாதிரி விவரங்களை இணைப்பது ஒருவரின் தனியுரிமையில் அரசு தலையிடுவதாகும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது அரசு தரப்பில் இருந்து விநோதமான வாதங்கள் முன்வைக்கப்பட்டது நமக்கு நினைவிருக்கும். ஆரம்பத்தில் “உங்கள் தனிப்பட்ட விவரங்களை ஏன் தர மறுக்க வேண்டும்? மறைக்கும் அளவுக்கு நீங்கள் குற்றவாளிகள் இல்லையென்றால் அனைத்தையும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டியது தானே?” என்றார்கள். பின், “தனியுரிமை குறித்த கூப்பாடுகள் எல்லாம் வசதி படைத்தவர்களுடையது. அன்றாடங்காய்ச்சிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் போய்ச் சேர வேண்டாமா?” என்றனர்.

பிறகு, மெல்ல மெல்ல அரசின் மீது விமர்சனம் வைக்கிறவர்களை உளவு பார்ப்பதும், கண்காணிப்பதுமான போக்குகள் அம்பலமான போது, “அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு எதிரான தேச துரோகிகள்” என முத்திரை குத்தினர். பண மதிப்பழிப்பு போன்ற அரசின் கோமாளித்தனங்களை விமர்சித்தவர்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவாக வறண்ட ரொட்டியும் உப்பும் கொடுக்கப்பட்டதை அம்பலப் படுத்தியவர்களும், வியாபம் போன்ற ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களும், இந்திய அரசு வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய முதலாளிகள் குறித்து எழுதிய பத்திரிகையாளர்களும் ஒரே வீச்சில் “தேச துரோகிகள்” ஆயினர். குற்றங்களைப் புரிந்தவர்கள் ”தேசபக்தர்கள்” – அதை விமரிசித்தவர்கள் ”தேச துரோகிகள்”

இப்போது ஆரோக்கிய சேது செயலியில் உள்ள கோளாறுகளை சுட்டிக்காட்டினால், “கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் இருந்து மக்களை காக்க வேண்டாமோ? இந்த நேரத்திலா அரசியல் செய்வீர்கள்? மக்களின் உயிர்களோடு விளையாடலாமா?” என்கிறார்கள்.

குடிமக்களின் உரிமைகள் இவையிவை என அரசியல் சாசன சட்டம் தெளிவாக வறையறுத்துள்ளது – ஆனால், மக்களின் நலனுக்காக அதையெல்லாம் பிடுங்கிக் கொள்வது தவறில்லை என சிந்திக்கும் படி மக்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் சாரமாக சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால், “இந்தச் சட்டம் தவறென கருதும் உரிமை உங்களுக்கு உண்டு – ஆனால், அது தவறென்பதை விளக்க கூட்டம் நடத்துவதோ, முழக்கமிடுவதோ தண்டனைக்குரியது”.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்களுக்கு சிந்திக்கும் உரிமை உண்டு; ஆனால், அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அந்த சிந்தனையை வெளிப்படுத்தி விடக்கூடாது.

இந்த தத்துவத்தை நமது 24/7 செய்திச் சேணல்கள் வெவ்வேறு வார்த்தைகளில், வியாக்கியானங்களில் நம்மிடம் வலுவாக பதியவைத்தன. அடுத்து, தனது நோக்கங்களுக்கு பணியாதவர்களை அச்சுறுத்துவதன் மூலம் அடிபணிய வைக்கும் உத்தியையும் அரசு பின்பற்றுகிறது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பேன் கார்டுகள் செல்லாது என்கிற பிரச்சாரத்திற்கு அஞ்சி தங்களது ஆதார் எண்ணை பேன் கார்டுடன் இணைத்தவர்கள் ஏராளம். இப்போது ஆரோக்கிய சேதுவின் மூலம் குடிமக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதை நியாயப்படுத்த கொரோனா வைரஸ் உள்ளது.

கொரோனா வைரஸ் இந்திய சமூகத்தில் பல விநோதமான தர்க்கங்களை உருவாக்கி உள்ளது. தப்லீகி மாநாட்டுக்குச் சென்றவர்கள் பயங்கரவாதிகள்; திருப்பதியில் கூடியவர்கள் “மாட்டிக் கொண்ட அப்பாவி பக்தர்கள்”. தொழுகைக்காக கூடுவதற்கு வைரஸ் ஜிஹாத் என்று பெயர் – ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட கூடுவது தேச பக்தி. மருத்துவர்களின் தியாகத்திற்கு விளக்குப் பிடிக்கப்படும்; ஆனால், அவர்களின் பிணங்களுக்கு மயானம் மறுக்கப்படும்.

இதன் வரிசையில் குடிமக்களை கண்காணிப்பதும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் கொரோனா நியாயப்படுத்தியுள்ளது. உரிமையை விட உயிர் மேலானதல்லவா என்கிற வியாக்கியானத்தின் பொருள் “சுதந்திரம் வேண்டாம், சவுக்கடி போதும்” என்பதே.

கொரோனா போன்ற ஒரு மாபெரும் மனிதப் பேரழிவை எதிர்த்துப் போராட நவீன தொழில்நுட்பத்தையும், இணையத்தையும் பயன்படுத்துவது சரியானது தான். ஆனால், அப்படி பயன்படுத்தும் போது குடிமக்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படும் என்கிற உறுதி மொழியும், உத்திரவாதமும் வழங்கப்பட வேண்டும்.


 – தமிழண்ணல்

மூலக்கட்டுரை, நன்றி :  ஸ்க்ரால். 

1 மறுமொழி

  1. இவை அனைத்தும் மக்களின் மீது திணிக்கப்படும் அடிமை சாசன வரையறைகள், மானியங்கள் முதல் ஆணையங்கள் இணையம் வரை கங்கானி வரவு உறவுகள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க