சியா பசிபிக் பிராந்தியத்திலேயே ஆதிக்கம் செலுத்தவல்ல நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக லோவி இன்ஸ்டிடியூட் எனும் ஆய்வமைப்பு தனது ஆசிய ஆதிக்க நாடுகளுக்கான ஆதிக்கக் குறியீட்டுப் பட்டியலில் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிட்டியூட் ஒவ்வொரு ஆண்டும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கொரோனா பாதிப்புகளால் உலகமே முடங்கி, பொருளாதாரம் தாறுமாறாகக் கீழிறங்கிக் கிடக்கும் 2020-ம் ஆண்டிற்கான ‘ஆதிக்க’ நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஆதிக்க நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாம் இடத்தை சீனாவும் பெற்றிருக்கின்றன. மூன்றாவது இடத்தில் ஜப்பானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளன.

படிக்க :
♦ இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !
♦ இதுதாண்டா இந்தியா – வறுமையின் தாயகம்

மொத்தம் 26 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்திற்கு வந்துள்ளன.

இன்றைய செய்தித்தாள்களில் இச்செய்திக்கு கணிசமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ஆளும்வர்க்கங்களைப் பொறுத்தவரையில் சாதி என்றாலும், நாடு என்றாலும் ஆதிக்கம் செய்வதுதானே முக்கியம். அந்த வகையில் அது ஒரு முக்க்கியச் செய்திதான்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செய்யும் இந்தியாவின் மற்றொரு பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் வெளியானது. மிகவும் மோசமாக பசிக் கொடுமை உள்ள நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம்பிடித்துள்ளது.

உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களில் இருந்து ஓவ்வொரு ஆண்டும் உலகளாவிய பட்டினி பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த 2020-ம் ஆண்டில், உலகளாவிய அளவில் 107 நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி இந்தியா உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 94-வது தரத்தில் பின் தங்கியுள்ளது.

இந்திய மக்களில் சுமார் 14% பேர் போதுமான ஊட்டச்சத்து இல்லாதவர்கள் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆசியா- பசிபிக் பிராந்திய ஆதிக்கநாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு வெகு தொலைவில் இருக்கும் – சரியாகச் சொல்லப் போனால், இந்தியாவால் ஆதிக்கம் செய்யப்படும் – நாடுகளாகிய பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பர்மா ஆகிய ஆசிய நாடுகள் பட்டினிப் பட்டியலில் இந்தியாவை விட முன்னேறி இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் மட்டும்தான் பின்னடைந்திருக்கிறது.

தமிழகத்தை விட சிறிய நாடான இலங்கை 64-வது இடத்தில் இருக்கிறது. நேபாளம் 73-வது இடத்திலும், பங்களாதேஷ் 75-வது இடத்திலும், பாகிஸ்தான் 88-வது இடத்திலும் இருக்கிறது.

சொந்த நாட்டு மக்கள் மீதான சுரண்டலில் இருந்து மக்களை திசைதிருப்ப, அவ்வப்போது பாகிஸ்தானுடன் ஒரண்டை இழுக்கவும், அவ்வப்போது சீனாவுடன் ஸ்டண்ட் அடிக்கவும் பெரும் பணத்தை இராணுவத்திற்கு செலவழித்து இராணுவரீதியான ஆதிக்கம் செய்து வருகிறது.

இது தவிர நேபாளம், இலங்கை உள்ளிட்ட சிறு சிறு நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளிடம் லாபியிங் செய்து தமது அரசின் புரவலர்களான aம்பானி, அதானி கும்பலின் தொழிலாதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கு, மக்களின் வரிப்பணத்தில் இருந்து அந்நாடுகளுக்கு கடனுதவி என்ற பெயரில் பொருளாதாரரீதியான ஆதிக்கம் செய்து வருகிறது இந்தியா.

ஆதிக்கம் செலுத்த அள்ளித் தெளிக்கும் லட்சக் கணக்கான கோடி பணத்தில் ஒரு பகுதியை இந்திய மக்களின் உணவு மற்றும் சுகாதாரத்தை உறுதிபடுத்த செலவழித்திருந்தாலே, மக்களை குறைந்தபட்ச ஆரோக்கியத்தோடும், பட்டினியின்றியும் இருக்கச் செய்திருக்க முடியும்.

ஆனால் பாசிச கும்பலின் ஆட்சியில் இதனை எதிர்பார்க்க முடியுமா ?


சரண்
நன்றி : தி வயர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க