வீடிற்ற மக்களில் ஐந்தில் மூன்று பேர் அதே நகரத்தில் பிறந்தவர்கள் என்றும் அவர்களில் தலித்துகளே அதிகம் என்றும் 15 இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாட்னா, கயா, முசாஃபர்பூர், ராஞ்சி, தன்பாத், ஜாம்ஷெட்பூர், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், விசாகபட்டினம், குண்டூர், விஜயவாடா, மும்பை, புனே, நாசிக் ஆகிய நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வீடற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தலித்துகளாக இருப்பதன் பின்னணியில் உள்ள சாதிய இணைப்பையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஐரோப்பிய யூனியன் நிதி உதவுடன் இந்தோ குளோபல் சோசியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பும் மற்றொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் ஐந்து மாநிலங்களில் 15 நகரங்களில் 4382 பேரிடம் கணக்கெடுப்பை நடத்தியது.

வீடற்றவர்களில் 40 சதவீதம் பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்றும், அதில் 78.9 சதவீதம் பேர் வாழ்வாதாரத்துக்காக புலம் பெயர்ந்தவர்கள் என்றும் 13.7 சதவீதம் பேர் குடும்ப பிரச்சினை காரணமாக வந்தவர்கள் என்றும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.

homeless peopleவீடற்றவர்களில் 60 சதவீதத்தினர் அந்த நகரத்தையே பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்கிற விசயம் நகர்ப்புற வறுமை மற்றும் வீடற்ற தன்மை ஆகியவற்றின் உள் தலைமுறை சுழற்சியை சுட்டிக்காட்டுகிறது என்றும். உரிமைகள் மற்றும் உரிமைகளைப் பெறுவதற்கான தொடர்ச்சியான போராட்டத்தை அவர்கள் சந்திப்பதையும் இது காட்டுகிறது என ஆய்வு தகவல் கூறுகிறது. வியாழன்கிழமை உலக வீடற்றவர்கள் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன இந்த அமைப்புகள்.

இந்த ஆய்வில் பட்டியலின மக்கள் அதிக அளவில், 36 சதவீத பேர் நகர்ப்புறங்களில் வீடற்றவர்களாக உள்ளனர். அடுத்து 23 சதவீத பழங்குடிகளும் மற்ற பின்தங்கிய வகுப்பினர் 21 சதவீதத்தினரும் மற்றவர்கள் 20 சதவீத பேரும் வீடற்றவர்களாக உள்ளனர்.

“இது தெளிவாக சாதி அமைப்பு இந்தியாவில் மக்களை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றுகிறது என்பதைக் காட்டுகிறது. சாதி அமைப்பு அவர்களை கடைநிலைக்குத் தள்ளுவதோடு மனிதாபிமானமற்ற நிலைக்கும் தள்ளுகிறது.” என பேசுகிறது இந்த ஆய்வறிக்கை.

படிக்க:
வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! மின்னிதழ்

வீடற்றவர்களில் 70.5 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு அடையாளத்தை வைத்திருப்பவர்களாகவும் 66.4 சதவீதம் பேர் ஆதார் வைத்துள்ளவர்களாகவும் உள்ளனர். 39.5 சதவீத பேர் வாக்காளர் அட்டை வைத்துள்ளனர். இதில் 94 சதவீத பேர் வாக்களித்துள்ளனர். அதிக அளவிலான வாக்களிப்பு சதவீதம் இது எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

வாக்களித்த போதும்கூட, இவர்களில் 77.7 சதவீத பேர் அரசாங்கத்தின் எந்தவித நலத்திட்டங்களையும் பெறவில்லை என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 18.1 சதவீத பேர் மட்டுமே ரேசன் பெறுகிறார்கள். 12 சதவீதம் பேர் வீடற்றவர்களுக்கான தங்குமிடங்களைப் பயன்படுத்துகின்றனர்.

வீடற்றவர்களுக்கான தங்குமிடங்களில் வாழ்வதற்கான வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதையும் இந்த ஆய்வில் பங்கேற்றோர் தெரிவித்துள்ளனர். பாலின அடிப்படையில் தனித்தனி இடமில்லாதது, தங்குமிடங்களில் நடக்கும் துன்புறுத்தல்கள், திருட்டு பயம், இடமில்லாதது ஆகியவற்றை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் 58.4 சதவீதம் பேர் சுகாதார சேவையை பெறும்நிலையில் இருக்கிறார்கள்.

வீடற்றவர்கள் அரசாங்க அமைப்புகளிலிருந்து உதவி பெறுவதைக் காட்டிலும் தொந்திரவுகளையே அதிகமாக அனுபவிக்கின்றனர். 79 சதவீதம் பேர் இடத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி உள்ளாட்சி அமைப்புகளாலும் போலீசாலும் விரட்டப்படுகின்றனர். இதில் 14.7 சதவீத பேர் போலீசு மற்றும் கிரிமினல்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் வார்த்தை வழியிலான துன்புறுத்தலாகவே இது பிரயோகிக்கப்படுகிறது.

படிக்க:
ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை
♦ பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !

வீடற்றவர்களில் 17.5 சதவீதம் பேர் பிச்சை எடுப்பவர்களாகவும் 82.1 சதவீதம் பேர் தொழிலாளர்களாகவும் இதில் 23.6 சதவீதம் பேர் கட்டுமான தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

இந்த அறிக்கை கொள்கை வகுப்பாளர்களுக்கு சில விசயங்களை பரிந்துரைத்துள்ளது. “தங்குமிடங்களுக்கு அப்பால் சிந்தித்து, அவர்களுக்கு வீட்டுவசதியை உறுதி செய்வதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்வதற்கும் வீடற்ற மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகளை பெறவும் கொள்கை வகுக்க வேண்டும்” என்கிறது ஒரு பரிந்துரை.

“தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற திட்டங்களை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் தீவிர தேவை உள்ளது” எனவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லாதவரை, சாதி முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நகர்ப்புறங்களை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கும். பொருளாரத்தை கையாளத் தெரியாத, சாதியத்தை ஊக்குவிக்கும் அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்திருக்கும்போது, இந்த சீர்திருத்தங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?


அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க