Wednesday, May 12, 2021
முகப்பு செய்தி இந்தியா பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !

பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !

பாலகோட் தாக்குதல் தொடர்பாக இந்திய விமானப்படை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்த விளம்பர வீடியோவை உண்மையான ஆதாரம் என்று பச்சையாகப் புளுகிய வட இந்திய ஊடகங்கள்.

-

டந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு எதிர்வினையாக பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அழித்ததாகக் கூறியது. நூற்றுக்கணக்காக பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறிக்கொண்டது. ஆனால், தாக்குதல் நடந்த பாலகோட் பகுதியில் ஓரிரு மரங்களுக்கு மட்டும் சேதாரம் ஏற்பட்டது என சர்வதேச ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியில், இந்திய விமானப் படை அக்டோபர் 4-ம் தேதி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பாலகோட் விமானத் தாக்குதல் தொடர்பாக ஒரு விளம்பர வீடியோவை (உண்மையான தாக்குதல் நடந்தபோது எடுத்த வீடியோ அல்ல) வெளியிட்டது.

இந்த விளம்பர வீடியோவை வெளியிட்டு ரிபப்ளிக் டிவி, இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதலுக்கு அளித்திருக்கும் ஆதாரம் இதோ என செய்தி ஒளிபரப்பியது. “நாம் எங்கே, என்ன செய்தோம் என்பதை பேச இது சரியான தருணம்” என அறிவித்தார் இந்த சேனலின் ஆலோசனை ஆசிரியர் மேஜர் கவுரவ் ஆர்யா.

“இன்று சமூக ஊடகங்களும், வெகுஜன ஊடகங்களும் முனைப்பாக செயல்படுகின்றன. இவையே போர் ஆயுதமாகவும் உள்ளன… நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை. ஆனால், அதில் என்ன இருக்கும் எனத் தெரியும்.. அவர்கள் இதுபோன்ற வீடியோக்களை தயாரித்து, அதில் உள்ளது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிலவகையான பிரச்சாரங்களை முன்னெடுத்த எதிரிகளிடமும் இதை பரப்ப வேண்டும்” என கூறினார்.

செய்தியை தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தொகுப்பாளரோ அல்லது ஆர்யாவோ இந்த வீடியோ விளம்பரத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்று கூறவேயில்லை. பாலகோட் தாக்குதலுக்கான ஆதாரம் எனக் கூறிக்கொண்டே, திரையில் விளம்பர வீடியோ என்ற வார்த்தைகளையும் திரையில் ஓடவிட்டது.

ஏபீபி  நியூஸ் ஒரு படி மேலே போய், ‘எக்ஸ்குளூசிவ் ஃபுட்டேஜ்’ என இந்தச் செய்தியை ஒளிபரப்பியது. “பாகிஸ்தான் ஒருசில மரங்கள்தான் விழுந்தது எனக்கூறிக்கொண்டது. ஆனால் நீங்கள் பலமான சேதத்தை இந்திய விமானப்படை தாக்கியுள்ளதைக் காணலாம். இதோ வீடியோ ஆதாரம்…” என்றார்கள். அதன்பின் சில நிமிடங்களுக்குப்  பிறகு இது விளம்பர வீடியோ என்ற அறிவிப்பை வெளியிட்டது.

சங்பரிவாரங்களின் ஊதுகுழலாக இருக்கும் ஜீ நியூஸ் இந்த தவறான தகவலை சரியாகச் செய்தது. அவர்களுடைய டிவிட்டும் கட்டுரையும் பாலகோட் தாக்குதலுக்கான முதல் ஆதாரம் என செய்தி ஒளிப்பரப்பியது. ஜீ நியூஸ் இணையதள கட்டுரை, இந்த வீடியோ ஒரு விளம்பர வீடியோ என்பதை உறுதி செய்தது.

ஜீ மத்திய பிரதேசம் – சத்தீஸ்கர், ஜீ உத்தர பிரதேசம் – உத்தரகாண்ட் ஆகிய சேனல்கள் இது ‘எக்ஸ்குளூசிவ் வீடியோ’ என சொல்லிக்கொண்டன.  ஒன் இந்தியா இந்தி ஊடகம் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் என்ற பெயரில் இதை வெளியிட்டது.

பஞ்சாப் கேசரி, “விமானத் தாக்குதல் வீடியோ வெளியானது; நாம் எப்படி பாகிஸ்தானுக்குள் நுழைந்து எதிரியை வீழ்த்தினோம் என்பதைப் பாருங்கள்” என எழுதப்பட்டிருந்தது.  இது ஒரு விளம்பர வீடியா என்று அது வாய் தவறியும் கூறவில்லை.

பிடிஐ செய்தி நிறுவனம் அனுப்பிய செய்தியை ஃபர்ஸ்ட் போஸ்ட், பிஸினஸ் ஸ்டாண்டர்டு ஆகியவை பதிவு செய்திருந்தன. “பாலகோட் தாக்குதல் வீடியோக்களை இந்திய விமானப்படை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒளிபரப்பியது” என கூறிய அந்தச் செய்தியில் விளம்பரம் என்கிற வார்த்தையே இல்லை.

குஜராத்தி ஊடகங்களான குஜராத்தி சமாச்சார் மற்றும் டிவி-9 குஜராத்தி ஆகிய ஊடகங்கள் முகப்புப் பக்கத்தில் செய்தி வெளியிட்டன. இது விளம்பரம் என அவை குறிப்பிடவில்லை. குஜராத்தி சமாச்சார் இது விளம்பர வீடியோ என்றும் உள்ளே உண்மையான காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன என்றும் கூறியது. டிவி-9 இது உண்மையான விமான தாக்குதல் காட்சி என்றே சொன்னது. ஆனால், யூட்யூப்  மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளில் ‘விளம்பரம்’ என்ற வார்த்தையை இவை சேர்த்திருந்தன.

படிக்க:
நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! மின்னிதழ்

இந்தியா டுடே டிவி, இந்த வீடியோவை விளம்பர வீடியோ எனக் கூறிக்கொண்டே, இதை பாலகோட் தாக்குதலுக்கான ஆதாரம் என்றும் சொன்னது.

த டிரிப்யூனைச் சேர்ந்த பத்திரிகையாளர் அஜய் பானர்ஜி, பாலகோட் பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் அழிப்பதன் கிராபிக் காட்சிகள் என வர்ணித்தார்.

டைம்ஸ் நவ் -ன் பிரைம் டைம் நிகழ்ச்சியின் விளம்பரமாக ‘இந்திய விமானப்படை பாலகோட் வீடியோவை வெளியிட்டிருக்கிறது. சந்தேகப்பட்டவர்கள் பிரதமரை நம்பவில்லை. ஆனால், இராணுவ சீருடைகளையும் சந்தேகப்பட முடியுமா?’ எனக் கேட்டது.

WION பாதுகாப்புத் துறை தொடர்பான செய்தியாளர் சிதாந்த் சிபல், ‘பாலகோட் தாக்குதல் காட்சிகள் இதில் இல்லை’ என விமானப் படை தலைவர் ராகேஸ் குமார் சிங் தெளிவுபடுத்தியதை பகிர்ந்துள்ளார்.

பிபிசி பத்திரிகையாளர் ஜுகல் ஆர். புரோஹித்தும் இதையே எழுதியுள்ளார்.

செய்தி நிறுவனமான ஏ.என். ஐ., இந்திய விமானப்படை விளம்பர வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, அந்த வீடியோவையும் பகிர்ந்திருந்தது.

இந்திய ஊடகங்கள் முழுமையாக மோடி அரசாங்கத்தின் ஊது குழல்களாக மாறிவிட்டதையே இது காட்டுகிறது.

வினவு செய்திப் பிரிவு
அனிதா
நன்றி : ஆல்ட் நியூஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க