privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கவளர்ச்சி : தென்னிந்தியாவிலா - பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

எந்தவொரு பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்களிலும் இந்தி - பசு வளையத்தைச் சேர்ந்த இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு.

-

சில நாட்களுக்கு முன் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலியில் விரிவுரையாற்றினேன். உலகின் தகவல் தொழில்நுட்ப மையமான சிலிக்கான் பள்ளத்தாக்கு சமீப காலங்களில் ஆப்பிள், கூகிள் மற்றும் பல முன்னோடி முயற்சிகளின் தளமாகவும் இணைய புரட்சியைத் தூண்டிய மின்னணு துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இடமாகவும் அது உள்ளது.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஐ.டி முதல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் வரை பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களில் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள் அதிகமாக உள்ளனர். எந்தவொரு பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்களிலும் இந்தி-பசு வளையத்தைச் சேர்ந்த இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அமெரிக்காவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் உள்ள இரண்டு உயர் அதிகாரிகளான சத்யா நதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஏன்? இதற்கு இந்தி காரணம் அல்ல, ஆங்கிலம்தான் காரணம்!

காஞ்சா அய்லய்யா

தென்னிந்தியர்கள் தங்கள் பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதைத் தவிர, அதிக முக்கியத்துவத்துடன் ஆங்கிலம் கற்றனர். பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு திராவிட கழக இயக்கத்தின் காரணமாக, இந்தியை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம் பள்ளி கல்வி மட்டத்தில் இரண்டு மொழிகளை மட்டுமே கற்க வேண்டும் என்ற இயக்கம் தமிழகத்தால் வழிநடத்தப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான கிறித்துவ ஆங்கில பள்ளிகள் இருப்பதன் காரணமாக, இந்தியை மறுப்பதன் மூலம் ஆங்கில வழி கல்வியை மேம்படுத்தி கேரளா தனக்கென ஒரு மாதிரியை உருவாக்கிக் கொண்டது. தெலுங்கு மாநிலங்களும் கர்நாடகாவும் தமிழ்நாடு மற்றும் கேரள மாதிரி பள்ளிகளால் தாக்கம் கண்டன. இந்தியாவின் முதல் தலித் தலைவர் கே. ஆர். நாராயணன், இந்தியாவின் முதல் தலித் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் கேரளத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தானாக அந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் இத்தகைய உயர் பதவிகளுக்கு வருவதற்கு முன் தங்களுக்கென்று ஒரு பெயரை அவர்கள் உருவாக்கியிருந்தனர். ஏன்? இந்தி காரணம் அல்ல, ஆங்கிலமே காரணம்.

படிக்க:
நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

தற்போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டாய தெலுங்கு பாடத்துடன் ஆங்கில வழி கற்பித்தலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதைச் செய்ய எந்த வடமாநில முதலமைச்சரும் துணிய மாட்டார். குஜராத்தில் மிக மோசமான நிலையில் ஆங்கில வழி கல்வி உள்ளது. எந்தவொரு வட இந்திய மாநிலத்தையும்விட, இந்தி – பசு வளைய மாநிலங்களைவிட கல்வி மேம்பாட்டு முறைகள் தென்னிந்தியாவில் மிக உயரிய நிலையில் உள்ளன.

LANGUAGES-INDIAகூடுதலாக, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஆங்கில வழிக் கல்வி காரணமாக சில சிறந்த கல்வி நிறுவனங்களில் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும் சில தசாப்தங்களில், ஆரம்ப கல்வி ஆங்கில வழியில் தொடர்ந்தால் பல துறைகளில் அவர்கள் வழிநடத்தும் நிலைக்கு வருவார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இந்த வளர்ச்சியை விரும்பத்தகாததாகப் பார்க்கிறது. இந்தியை திணிக்கும் அவர்களுடைய எந்த முயற்சியும் வடகிழக்கில் வரவேற்கப்படாது.

எப்படியிருப்பினும், அமித் ஷாவும் பாஜகவும் கடிகாரத்தை திருப்பி தென்னிந்தியாவிலும் வடகிழக்கிலும் இந்தியை திணித்து ஆங்கிலத்தை வெளியேற்ற திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் முழு இந்தியாவையும் இந்தி-பசு வளைய மாநிலங்களின் கல்வி நிலைக்கும் தரத்துக்கு கீழிறக்க முடியும். அதன்பிறகு பாஜகவின் இந்தி-இந்துராஷ்டிரத்தை நிறுவும் இலக்கு நிறைவேறும்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் நீண்டகால நிகழ்ச்சி நிரலாக உள்ள இந்தி திணிப்பு தொடர்பாக அவர்கள் மறுப்பதை நான் சந்தேகிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22 அன்று ஹூஸ்டனில் அமித் ஷாவின் சமீபத்திய கருத்துக்கள் குறித்த அச்சங்களை மட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், பிரதமர் ஒரு வெளிநாட்டில் உரையாற்றுவதற்குப் பதிலாக இந்தியாவில் இதை தெளிவுபடுத்தியிருக்க முடியும்.

இந்து – இந்தி – இந்துஸ்தான் என்ற தேசத்தை உருவாக்குவதும், மெதுவாக இந்தியாவின் பெயரை மாற்றுவதும் பாஜகவின் நீண்டகால குறிக்கோளாகும். அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள பாரத் – இந்துஸ்தானுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.

இந்த முழு திட்டத்திலும், பாகிஸ்தான் ஒரு முன்மாதிரியாகவும் மதசார்பற்ற, பின்தங்கிய முஸ்லீம் நாடுகளுடனான போட்டியிடும் திசையிலும் அவர்கள் செல்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான உலகளாவிய போட்டி மனப்பான்மையுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட சீனா அல்லது தென்னாப்பிரிக்காவுடன் இந்தப் போட்டியிடவில்லை. அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் தென்னிந்தியாவில் இருப்பதைப் போன்ற ஆர்வம் காட்டுகிறார்கள்.

நவீனமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு பிந்தைய கட்டத்திலும் மொழி ஒரு முக்கிய இணைப்பாக உள்ளது. முன்னாள் பிரெஞ்சு காலனிகளாக இருந்த ஆப்பிரிக்காவில் தங்கள் சொந்த மொழிகளில் கல்வியை ஊக்குவிக்க வலியுறுத்தவில்லை, மெதுவாக அவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆங்கில மொழி தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சியுடன் உலகளாவிய ஒருங்கிணைப்பால் அவர்களின் பொருளாதார வளர்ச்சி இப்போது வேகமாக உள்ளது.

படிக்க:
குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு மொழியியல் மற்றும் கலச்சார துறைகளின் உலகளாவிய திசையைப் பற்றி எந்தவிதமான தீவிர புரிதலும் இல்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். வணங்கும் இஸ்ரேலும்கூட ஹூப்ரு தவிர, ஆங்கில கல்வியை ஊக்குவிக்கிறது, இது ஒரு பொதுவான கலாச்சார மாற்றமாகும்.

இந்தியாவில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு நிதியளிக்கும் அனைத்து தொழிற்துறை வர்க்கமும் இந்தியில் கவனம் செலுத்துகிறது. மொழியியல் மற்றும் கலாச்சார வர்க்க வேறுபாடுகள் வட இந்தியாவைவிட, தென்னிந்தியாவில் உயரிய இடத்தில் உள்ளன. தெற்கில், அனைத்து பிரிவினரும் தங்கள் பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலம் கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். எனவே, மொழியியல் மற்றும் கலாச்சார இடைவெளி குறுகி வருகிறது. வட இந்தியாவில் அது பரந்து வருகிறது. பொருளாதார மற்றும் கலாச்சார வளங்களின் வறுமை அப்பட்டமாகத் தெரிகிறது.

வட இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் குழந்தைகளுக்காக உலகளாவிய தரமான ஆங்கில வழி பள்ளிகளை நடத்தி வரும் முன்னணி தொழிற் நிறுவனங்களை இந்தி வழி கல்விக்கு மாறுங்கள் என அமித் ஷா அல்லது ஆர்.எஸ்.எஸ் கட்டாயப்படுத்த முடியுமா? வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளை இந்தி வழிப் பள்ளிகளுக்கு அனுப்புமாறு அமித் ஷா வற்புறுத்த முடியுமா? தென்னிந்தியா மற்றும் வடகிழக்கில் இந்தியை சரியாக யாரிடம் திணிக்க ஷா விரும்புகிறார்? எனவே, இந்தத் திட்டம் அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தெளிவாகிறது.

இந்துத்துவ சக்திகளால் முன்வைக்கப்படும் உணர்வுபூர்வமான மொழி பிரச்சாரம் குறித்து தலித்துகள், ஓபிசிக்கள் மற்றும் மேல்தட்டு சூத்திரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் குழந்தைகள் இப்போதுதான் நவீன நாகரிக மற்றும் உலகமயமாக்கப்பட்ட கலாச்சாரங்களை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். இந்துத்துவ கற்பனைகளான ஒரு தேசம், ஒரு மொழி மற்றும் ஒரு கலாச்சாரத்தை தாங்கிச் செல்ல அவர்கள் தங்களை அனுமதித்தால், அவர்கள் இடைக்காலக் கட்டத்தின் வறுமை, அறியாமை மற்றும் சமத்துவமின்மைக்குத் திரும்பிச் செல்வார்கள்.

இந்தி – பசு வளையத்தைச் சேர்ந்த மாநிலங்களுடன் தென்னிந்திய மக்களின் அறிவியல் மனப்பான்மையை ஒப்பிடும்போது, தென்னிந்தியாவில் மூடநம்பிக்கை, அறியாமை மற்றும் சுரண்டல் இல்லாதது அறிவியல் சிந்தனை சிறந்த பங்காற்றியிருப்பதை ஆதாரமாகக் காட்டுகிறது.

தென்னிந்தியாவில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவத்திற்கான அறிவுநிலைகள் மற்றும் வலியுறுத்தல்கள் மிக அதிகம். ஒரு குழந்தை உலகளாவிய தகவல்தொடர்பு மொழியைக் கற்கும்போது, அந்தக் குழந்தையின் சொற்களஞ்சியம் வளமாக இருக்கும். ஒரு சிறு குழு அல்லது ஒரு சிறு பிராந்தியத்தில் பேசப்படும் ஒரு மொழியைப் பேசும் குழந்தையைவிட சிறந்த நம்பிக்கையும் அறிவும் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும்.

சமூக மற்றும் இயற்கை அறிவியல் ஆய்வை பலவீனப்படுத்துவதன் மூலம் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் -ம். ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு நிறைய சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. புராண அறிவியல் மற்றும் புராண நூல்கள் அறிவியல் அறிவை வளர்க்கும் என அவர்கள் நம்புவது நகைப்புக்குரியது. அவர்கள் போலி அறிவியலாளர்களை டி.என்.ஏ. மற்றும் தொல்பொருள் அறிவியல் நிபுணர்கள் என அறிவிப்பதும் மனித இடப்பெயர்வு குறித்த அனைத்து உலகளாவிய அறிஞர்களின் கோட்பாடுகளையும் தவறானவை என அறிவிக்கவும் செய்கிறார்கள். அறிவியல் உலகம் இவை அனைத்தையும் கேலிக்கூத்தாகவே பார்க்கின்றன. இப்போது அவர்களின் அரசியல்வாதிகள் மற்ற அனைத்து மொழிகளையும் விட்டுவிட்டு இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அப்போதுதான் அகண்ட பாரதம் தங்கம் மற்றும் வெள்ளி விளையும் நிலமாக மாறும் என்கிறார்கள்.

அனைத்து தென்னிந்தியர்களும் நல்ல விதமாக, அமித் ஷாவின் அபத்தமான இந்தி – இந்து – இந்துஸ்தான் கோட்பாட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தமிழகத்தின் இரு மொழி சூத்திரத்தை நாம் எடுத்துக்கொண்டு, நமது அறிவியல் மனப்பான்மையை வலுப்படுத்த வேண்டும். இதனால் சீனா போன்ற வேகமாக வளர்ந்துவரும் நாடுகளால் இந்தியா மீண்டும் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுவது தடுக்கப்படும்.


கட்டுரையாளர் : எழுத்தாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் காஞ்சா அய்லய்யா.
தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: கவுண்ட்டர் கரண்ட்ஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க