அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 07

தாய் மொழிப் பாடம்

பாட நோக்கம்: படிப்பது, பேசுவதன் அடிப்படையில் புதியவற்றை அறியும் ஆர்வத்தை மேற்கொண்டு வளர்த்தல்; நன்மை, தீமை பற்றிய கருத்துகளை உருவாக்குதல்.

பாடத்தின் உள்ளடக்கம்: நான் குழந்தைகளுக்கு ஏற்கெனவே படித்துக் காட்டிய தனித்தனி கவிதைகள், கதைகளிலிருந்து சிறு சிறு பகுதிகள் (”இது எதிலிருந்து என்று கண்டு பிடியுங்கள்!”); தனித்தனியான இரண்டு வாக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் (“இந்த வாக்கியங்களைக் கண்டுபிடியுங்கள்!”); மாற்றியமைக்கப்பட்ட நாலடிப் பாடல் வரிகள் (“இந்த நாலடிப் பாடலை எப்படி வாசிப்பது?”); பழமொழிகள், முதுமொழிகள் (“இவை உங்களுக்குப் பிடித்துள்ளனவா?”); வாக்கியத்தில் விட்டுப் போன வார்த்தையைக் கண்டு பிடிக்கும் பயிற்சி (“இங்கே என்ன வார்த்தையை எழுதலாம்?”).

பாட அமைப்பு:

  1. பாட வேலைகளை முன்வைத்தல். (காரிய ரீதியான வேகம், கருத்தாழத்தோடு, நட்பு ரீதியான தொனி.) நேரம் 3 நிமிடங்கள்..

“பாருங்கள், உங்களுக்காக எதையெல்லாம் தயாரித்துள்ளேன்!”

இரண்டு கரும்பலகைகளின் திரைகளையும் அகற்றுகிறேன்.

“இந்த இடங்கள் எதிலிருந்து எடுக்கப்பட்டன என்று யோசித்துச் சொல்லுங்கள்!..”

”இங்கே நான் வேண்டுமென்றே இரண்டு வாக்கியங்களின் வார்த்தைகளையும் நாலடிப் பாடல் வரிகளையும் கலந்துள்ளேன். இவற்றைப் பிரித்துச் சொல்ல முடியுமா?”

“இந்த வாக்கியத்தில் இரண்டாவது வார்த்தையைக் ’காணோம்’. நீங்கள் அதைக் கண்டு பிடித்து உரிய இடத்தில் வைக்க வேண்டும்.”

“இதோ நான் இங்கு வார்த்தைகளை எழுதியிருக்கிறேன். தப்பு இருக்கிறதா பாருங்கள்! சரிபார்க்க வேண்டும்!”

“இதோ இங்கே (கரும்பலகையின் திரையைத் திறந்து விட்டு உடனே மூடுகிறேன்) என் ரகசியம் உள்ளது. இதைப் பற்றிப் பின்னால் சொல்வேன்.”

“உங்கள் ஒவ்வொருவரின் டெஸ்கிலும் பழமொழிகள், முதுமொழிகள் எழுதப்பட்ட சிறு அட்டை உள்ளது. இவற்றை என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியும்.”

“இது தவிர, இதோ இம் மாதிரியான தாள்களை உங்களுக்காகத் தயாரித்துள்ளேன். ஒவ்வொன்றிலும் இரண்டு கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள், பின்னால் அதை மனப்பாடம் செய்யலாம். இன்னொரு தாளில் உங்களுக்குப் பிடித்தமான வேலை உள்ளது – வார்த்தைகளையும் படங்களையும் இணைக்க வேண்டும். இரண்டு தாள்களையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.”

“சரி, எதிலிருந்து துவங்குவோம்?”

குழந்தைகள் தமக்கு விருப்பமானதை முதலில் எடுக்கின்றனர்.

  1. தனிப்பட்ட பகுதிகளிலிருந்து உரிய கவிதை, கதையைக் கண்டுபிடித்தல். (சாதாரண வேகம், கவர்ச்சிகரமாக.) நேரம் 3 நிமிடங்கள்.

“முன்னர் நான் உங்களுக்குக் கதைகள், கவிதைகளைப் படித்துக் காட்டியிருக்கிறேன். இப்பகுதிகள் எவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்று யோசித்துச் சொல்ல முடியுமா?”

கரும்பலகையில் மூன்று வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. குழந்தைகள் அவற்றைப் படிக்க வாய்ப்பளிக்கிறேன்.

அவை எந்தக் கதை, கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலாவிடில் ஒரு சில கதை, கவிதைகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உதவுகிறேன்.

III. தனித்தனியாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள சொற்களிலிருந்து வாக்கியங்களை உருவாக்குதல், நாலடிப் பாடலின் மாறிய வரிகளைச் சரியாக வைத்தல். (உற்சாகமாக, விரைவான வேகம், கவர்ச்சிகரமாக.) நேரம் 5 நிமிடங்கள்.

கரும்பலகையின் ஒரு பகுதியைத் திறக்கிறேன். அங்கு இரண்டு வெவ்வேறான வாக்கியங்களின் சொற்கள் கலந்து எழுதப்பட்டுள்ளன: குதிரை, சமைத்தாள், அம்மா, வேகமாக, சாப்பாடு, ஓடியது, நல்ல.

“இங்கே இரண்டு வெவ்வேறான வாக்கியங்களின் சொற்கள் கலந்துள்ளன என்று விளக்கி, இவற்றிலிருந்து அந்த வாக்கியங்களை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேட்கிறேன்.

குழந்தைகள் தம் விடைகளைச் சொன்னதும் நான் கரும்பலகையில் எழுதியிருந்ததைத் திறந்து காட்டுகிறேன்: “குதிரை வேகமாக ஓடியது. அம்மா நல்ல சாப்பாடு சமைத்தாள்”.

பின், உறுதியோடு, சவாலாகச் சொல்கிறேன்: “இதோ இப்போது இங்கு என்ன எழுதியுள்ளது பாருங்கள்! இங்கே ஒரு குழந்தைப் பாட்டின் வரிகள் மாறியுள்ளன. இதை ஒழுங்கான முறையில் விரைவாக உங்களால் மாற்றியமைக்க முடியுமா?”

இப்படிச் சொல்லியபடியே கரும்பலகையின் திரையை விலக்குகிறேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா!

ஒரு குழந்தையை வையலாகாது, பாப்பா!

ஓடி விளையாடு, பாப்பா!

கூடி விளையாடு, பாப்பா!

குழந்தைகள் தம் விடைகளைச் சொல்கின்றனர். பின் நான் கரும்பலகையைத் திறந்து சரியான விடையைக் காட்டுகிறேன்:

ஓடி விளையாடு, பாப்பா!

நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா!

கூடி விளையாடு, பாப்பா!

ஒரு குழந்தையை வையலாகாது, பாப்பா!

  1. பழமொழிகள், முதுமொழிகள் அடங்கிய சிறு அட்டைகளுடனான வேலை. (மிதமான வேகம், கருத்தாழத்தோடு, நம்பிக்கையோடு.) நேரம் 3 நிமிடங்கள்.

“உங்களுக்குப் பிரபல வார்த்தைகளும் முதுமொழிகளும் பிடித்துள்ளதைப் பார்க்க மகிழ்ச்சி. எனவே, நான் உங்களுக்காகப் புதிய மூதுரைகளைக் கண்டுபிடித்து சிறு அட்டைகளில் எழுதியிருக்கிறேன். இவை உங்கள் டெஸ்குகளின் மீது உள்ளன. இவை உங்களுக்குப் பிடிக்கும், உங்கள் நினைவில் நிலைத்திருக்குமென நம்புகிறேன்.”

சிறு அட்டைகளில் எழுதப்பட்டுள்ள மூதுரைகளை வாய் விட்டுப் படிக்கும் படி ஒரு சில குழந்தைகளிடம் சொல்கிறேன்:

உழைப்பின்றி ஊதியமில்லை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

உண்மை வெல்லும்.

ஆபத்தில் உதவுபவன் நண்பன்.

இவை உங்களுக்குப் பிடித்துள்ளனவா?.. இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று படியுங்கள். இவை உங்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும்.”

  1. வாக்கியத்தில் விட்டுப் போன வார்த்தைகளைப் பூர்த்தி செய்தல். (விரைவான வேகம், அன்பான தொனி.) நேரம் 4 நிமிடங்கள்.

வார்த்தை விடப்பட்ட வாக்கியம் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள இடத்தைத் திறந்து காட்டுகிறேன்:

சூரியன்           உதித்தது.

“இந்த வெற்றிடத்தில் எந்த வார்த்தையை நிரப்பலாம் என்று சொல்லுங்கள்.”

குழந்தைகள் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் கரும்பலகையில் எழுதுகிறேன். பின்வருமாறு இது இருக்கலாம்:

சூரியன்           உதித்தது.

மினு மினுப்பாக

செந்நிறமாக

பழுப்பு நிறத்தில்

பெரிதாக

சந்தோஷமாக

ஆரஞ்சு வண்ணத்தில்

புன்சிரிப்போடு

பிரகாசமாக, அழகாக என்று நான் என் விடைகளை சேர்த்துக் கொள்கிறேன்.

“சரி, இப்போது இவற்றில் எது வாக்கியத்தில் நன்கு பொருந்தி வரும்?”

குழந்தைகள் தம் முடிவை நிரூபிக்க உதவுகிறேன்.

  1. வார்த்தைகளில் உள்ள தவறுகளைத் திருத்துதல்.

(நம்பிக்கையளிக்கும் தொனி.) நேரம் 1 நிமிடம்.

எழுத்துப் பிழைகளுடன் வார்த்தைகள் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள இடத்தைத் திறந்து காட்டுகிறேன்.

“இதற்கு இப்போது நேரம் செலுத்த வேண்டாம். இதை இப்படியே விட்டு வைக்கிறேன். யாருக்கு விருப்பமோ அவர்கள் இடைவேளையின் போது இதில் ஈடுபடலாம். இப்போது மிக சுவாரசியமானது நம்மை எதிர்நோக்கியுள்ளது.”

VII. வீட்டிற்குத் தர வேண்டிய பொருட்கள்: தாமாகவே தேர்ந்தெடுக்க வசந்தத்தைப் பற்றிய கவிதைகள், வார்த்தைகளையும் படங்களையும் இணைக்கும் பயிற்சி அடங்கிய தாள்கள். (காரிய ரீதியான வேகம், நட்புத் தொனி.) நேரம் எஞ்சிய நிமிடங்கள்.

படிக்க:
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?

“இந்த பாக்கெட்டுகளில் கவிதைகளும், இணைக்க வேண்டிய படங்களும் வார்த்தைகளும் அடங்கிய தாள்கள் உள்ளன. பயிற்சியை நீங்கள் ஓய்வு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கவிதைகளை நாளைக்குள் படித்து, இவற்றில் உங்களுக்கு எது மிகவும் பிடித்துள்ளது என்று சொல்லுங்கள்.”

VIII. பாடத்தை முடித்து வைத்தல். (அன்பாக, மகிழ்ச்சிகரமான தொனி.) –

“நமது பாடவேளை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு மகிழ்ச்சி, நீங்கள் புத்திசாலியானவர்களாக, கவனமுள்ளவர்களாக, விடா முயற்சியுள்ளவர்களாக இருந்தீர்கள்! புதியவற்றை அறியும் ஆர்வமுள்ளவர்களாக நீங்கள் இருப்பதற்கு நன்றி! நீங்கள் வெகு வேகமாக முன்னேறுகின்றீர்கள், எனவே, அனேகமாக நான் உங்களுக்கு சிக்கலான வேலைகளைத் தயார்படுத்த வேண்டும்.”

“இப்போது எழுந்திருங்கள் பார்க்கலாம்!… சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!… ஓய்வெடுங்கள்!…”

இரண்டாவது பத்து நிமிட இடைவேளை

குழந்தைகள் பூந்தொட்டிகளுக்கு நீர் ஊற்றுகின்றனர், மீன்தொட்டியைக் கவனித்து சரிசெய்கின்றனர், தாழ்வாரத்தில் விளையாடுகின்றனர், தம் விருப்பப்படி கரும்பலகையில் உள்ள சொற்களில் தப்பைக் கண்டுபிடித்துத் திருத்துகின்றனர், வார்த்தைகளை சரியான படங்களுடன் இணைக்கும் பயிற்சியைச் செய்கின்றனர்.

குழந்தைகள் செய்யும் காரியங்களிலும் பொழுது போக்குகளிலும் நானும் கலந்து கொள்கிறேன், அவர்கள் செய்யும் விஷயங்கள் மீது அக்கறை காட்டுகிறேன், அவர்களுடன் பேசுகிறேன். சாதாரண வேகம், பிரதான தொனி.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க