ரவுண்டப் புற்றுநோயை ஏற்படுத்தும் – அம்பலப்படுத்திய ஆராய்ச்சியாளர்களை ஒடுக்கும் மான்சாண்டோ
உலகின் மிகப்பெரிய வேளாண் வேதியியல் நிறுவனமான மான்சான்டோவின் தயாரிப்புகள் புற்றுநோயை உருவாக்குவதாக கூறிய ஆய்வாளர்களுக்கு எதிராக ஒரு முழுமையான போரினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு தன்னுடைய தயாரிப்புகளுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாமல் ஏமாற்றி வருகிறது என்பதை சமீபத்தில் வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவன புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 2015-ம் ஆண்டு மான்சான்டோவின் புகழ்பெற்ற களைக்கொல்லியான ரவுண்டப், மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தது. தொடர்ந்து அதற்கு எதிராக பல்வேறு தளங்களில் மான்சாண்டோ நிறுவனம் பரப்புரை செய்து வருகிறது என்பதை அதற்கெதிரான பல்லாயிரக்கணக்கான வழக்குகளின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
‘ரவுண்டப்’ களைக்கொல்லியில் உள்ள கிளைபோசேட் என்ற வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதை ஐ.ஏ.ஆர்.சி (IARC)கண்டறிந்தது.
ஐ.ஏ.ஆர்.சி.-யின் ஆய்வுகளை தவறு என்று கூறவும் கிளைபோசேட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவும் அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு நெருக்கடியை மான்சான்டோ கொடுத்தது என்பதை நிறுவனத்திற்குள் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள், நிறுவன கோப்புகள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்களை ‘தி இண்டெர்செப்ட்’ இணையதளம் முதலில் வெளிக்கொணர்ந்தது.
அரசாங்கத்தை வளைத்தல் :
நிறுவனத்திற்கு சாதகமான முடிவை எடுக்க அமெரிக்க அரசாங்கத்தை அணுகப்போவதாக ஒரு ஆவணம் கூறுகிறது. முதலில் ‘ஐ.ஏ.ஆர்.சி’-யை அணுகி கிளைபோசேட் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்த திட்டத்தை வகுத்தது. மேலும் அதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், வேளாண்மைத் துறை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் அலுவலகம், வெளியுறவுத்துறை, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் திணைக்களம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர்களை தனக்கு சாதகமாக மாற்றியது குறித்தும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்னொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தின் படி, ஐ.ஏ.ஆர்.சி. -யின் ஆய்வினை முறியடிக்க கிளைபோசேட்டிற்கு ஆதரவாக ஊடகங்களில் விளம்பரங்கள் மற்றும் கருத்துரையாடல்களையும் மான்சாண்டொ வெளியிட்டது.
மேலும் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஒரு கடிதத்தை எழுதச் செய்து அதை காங்கிரஸ் உறுப்பினரான ராப் அடெர்ஹோல்ட் (R-AL) பெயரில் பொது சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும் ஐ.ஏ.ஆர்.சி. -யின் மிகப்பெரிய புரவலருமான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) தலைவருக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டது. அந்த கடிதத்தில் கிளைபோசேட் விவகாரத்தில் சரியான முடிவு எடுக்காவிட்டால் என்.ஐ.எச் -க்கான நிதி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று எச்சரிக்கவும் திட்டமிடப்பட்டது.
மேலும் காங்கிரசு உறுப்பினர்களான ஜேசன் சாஃபெட்ஸ் (R-UT), ட்ரே கவுடி (R-SC) மற்றும் லாமர் ஸ்மித் (R-TX, இப்போது ஓய்வு பெற்றவர்) மற்றும் காங்கிரஸ் மேற்பார்வை மற்றும் அறிவியல் குழுக்களில் உள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் ஐ.ஏ.ஆர்.சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தொடர்ந்து ஒருங்கிணைப்பில் ஈடுபட்டது.
அது மட்டுமல்லாமல் கிளைபோசேட் பிரச்சினையில் கேள்வி எழுப்புவதற்கென்றே ஒரு முழுக்குழு கூட்டத்தையும் ஹவுஸ் சயின்ஸ் குழுத்தலைவராக ஸ்மித் அர்ப்பணித்தார். அதன் பின்னர் “ஐ.ஏ.ஆர்.சி ஆய்விலுள்ள குறைபாடுகளை சரிசெய்ய” வலியுறுத்தி நோர்வேயிலுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்.
வாஷிங்டன் மாநில சட்டமியற்றுபவர்களைக் (Washington State Legislature) கண்காணிக்கவும், அவர்களுடன் ஆலோசனை செய்யவும் இங்கிலாந்தின் தனியார் உளவுத்துறை அமைப்பான ஹக்லுய்ட்டுடன் மான்சாண்டொ ஒப்பந்தம் செய்ததாக இரண்டாவது ஆவண தொகுப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. எவ்வித கூடுதல் கட்டுப்பாடும் மான்சாண்டோ மீது விதிக்கப்படாது என்று வெள்ளை மாளிகை அரசியல் ஆலோசகர் ஹக்லுய்ட்டிற்கு உறுதியளித்திருக்கிறார்.
படிக்க :
♦ ராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ !
♦ ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !
விமர்சகர்களை பலி வாங்குதல் :
சமீபத்தில் ‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு கிடைத்த ஆவணங்களின் படி காங்கிரஸை வளைப்பதையும் தாண்டி கிளைபோசேட்டின் ஆபத்துக்கள் குறித்து தகவல் வெளியிடும் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்களை கண்கானிக்க இணைவு மையத்தை (fusion center) ஏற்படுத்தியது மான்சண்டோவின் அரசியல் மற்றும் பொருளாதார வல்லமையை காட்டுகிறது.
சான்றாக, மன்சண்டோவை அம்பலப்படுத்தி “ஏமாற்று வேலை: ஒரு களைக்கொல்லி, புற்றுநோய் மற்றும் விஞ்ஞானத்தின் ஊழல் பற்றிய கதை – Whitewash: The Story of a Weed Killer, Cancer, and the Corruption of Science” என்ற தலைப்பில் பத்திரிகையாளார் கேரி கில்லாம் (Carey Gillam) 2017-ம் ஆண்டில் ஒரு நூலை எழுதியிருந்தார். அதை எதிர்கொள்ள அந்த நூல் குறித்து மோசமான விமர்சனங்களை வைப்பதற்கான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டது. “கேரி கில்லாம் நூல்” என்ற தலைப்பில் அவரது நூலிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமான 20 வகையான நடவடிக்கைகளை பட்டியலிட்டு அதை மான்சாண்டோ பராமரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூகிள் நிறுவனத்திற்கு பணத்தை வாரியிறைத்து கில்லாமின் நூலை குறித்த மோசமான விமர்சனங்களை கூகிள் தேடு பொறியில் வருமாறு மான்சாண்டோ செய்தது. “மான்சாண்டோவிற்கு என்னுடைய நூலை பிடிக்காது என்பதும், எனக்கும் பதிப்பாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்து காலி செய்ய அது வேலை பார்த்தது என்பது எனக்கு எப்போதுமே தெரியும். ஆனால் பழி வாங்க இவ்வளவு பணத்தையும், நேரத்தையும், பலத்தையும் இவ்வளவு பெரிய நிறுவனம் செலவிடும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இது மலைப்பூட்டுவதாக இருக்கிறது” என்றார் கில்லாம்.
டிவிட்டர் செயல்பாட்டாளரும், இசையமைப்பாளரும், நீண்ட நாட்களாக மாண்சண்டோவை விமர்சனம் செய்து வருபவரான நீல் யங்கையும் தொடர்ந்து அருகிலிருந்து இணைவு மையம் கண்காணித்து வந்தது. மேலும் அவரது பாடல் வரிகளையும் கூட அது ஆய்வு செய்தது.
மான்சண்டோவின் ‘ரவுண்டப்’ மற்றும் ‘ரேஞ்சர் ப்ரோ’ ஆகிய இரண்டு களைக்கொல்லிகளை பயன்படுத்தியதால் டிவெய்ன் ஜான்சன் என்ற அமெரிக்கருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய வழக்கில் அவருக்கு 289 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2018, ஆகஸ்டு மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான அறிகுறிகளை பார்த்தப்பிறகு மான்சண்டோவிடம் அவர் விளக்கம் கேட்டதற்கு அந்நிறுவனம் பதிலேதும் கூறவில்லை. ஆனால் அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நிறுவனத்திற்குள் நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கூறுகின்றன. இப்போது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஜான்சனுக்கு முன்னரே இந்த தகவலை சொல்லியிருந்தால் அவர் மருத்துவம் பார்த்து புற்றுநோயை சரி செய்திருக்க முடியும்.
படிக்க :
♦ களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
♦ இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன ? கருத்துக்கணிப்பு !
மான்சண்டோவின் மீது இதுபோன்று பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றில் ஜான்சன் போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு தற்காலிக வெற்றி கிடைத்திருக்கலாம். “வழக்கில் வெற்றிப்பெற்று விட்டேன். ஆனால் இழப்பீடு கிடைக்கும் வரை நான் உயிருடன் இருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை” என்று டிவெய்ன் ஜான்சன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.ஆர்.சி.-யின் ஆய்வின் அடிப்படையில் ஃப்ரான்ஸில் மட்டுமே மான்சண்டோவின் ‘ரவுண்டப்’ தடை செய்யப்பட்டுள்ளது. தவறான விளம்பரங்கள் செய்வது, தவறான பரிசோதனை முடிவுகளை வெளியிடுவது, தன்னை அம்பலப்படுத்துபவர்களை பழி வாங்குவது என அதன் கொடூரமான முகம் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டாலும் அரசாங்கங்களையும் ஊடகங்களையும் விலை பேசியோ, மிரட்டியோ அது தொடர்ந்து அடிபணிய வைக்கிறது.
– சுகுமார்
நன்றி : ஆர்.டி.