பசுமைப் புரட்சியின் தந்தை என்று சொல்லப்பட்ட விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 98-வது வயதில் இறப்பெய்தியுள்ளார். ஒருவர் இறந்துவிட்டால் அவரது குற்றங்குறைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது நமது வேலையல்ல. ஆனால், வாழுங்காலத்தில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர்களை எல்லாம், அவர்கள் இறந்து போனதும் புனிதர்களாக்கி அஞ்சலி செலுத்துவது என்பது மிகக் கேவலமானது. அது சம்பந்தப்பட்டவர்களின் வர்க்கப் பார்வையை வெளிப்படுத்துவது என்பதை சுவாமிநாதனைப் புகழ்ந்து அஞ்சலி செலுத்துவதன் மூலம் பலரும் வெளிக்காட்டியிருக்கிறார்கள். சி.பி.எம் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மட்டுமல்லாது இதர கட்சிகள், தனிநபர்கள் பலரும் இதில் அடங்குவர்.
ஜெயாவின் ஆட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களுக்கு நேர்ந்த துன்ப துயரங்களுக்கு எல்லாம் துணை நின்று போராடுவோராய், பாட்டாளிகளின் தோழனாய் இருப்பதாக சொன்னவர்கள் வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள். அதே சமயத்தில் ஜெயாவுடனும் நட்பைப் பேணி வந்தார்கள் என்பது முக்கியமானது. இவ்விரண்டு அம்சங்களில் எது உண்மை, எது நடிப்பு? என்பதை அவர்களாலேயே சொல்ல முடியாது. இரண்டுமே உண்மை தான் என்றும், அதுதான் இயங்கியல்பூர்வமான புரிதல் என்றும் கூட சொல்லக்கூடும். அதாவது, ஒரே நேரத்தில் ஒரு பொருள் அதுவாகவும், அதுவல்லாமலும் என இரண்டுமாக – பாட்டாளிகளின் தோழனாகவும், ஜெயாவின் நண்பர்களாகவும் – இருப்பதை இப்படியும் அவர்கள் விளக்கக்கூடும்.
இப்படிப்பட்ட நபர்களும், கட்சிகளும் தான் சுவாமிநாதனையும் புகழுக்குரிய நபராக, சாதனையாளராக மட்டும் முன்னிறுத்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அவர் மட்டும் வேளாண் விஞ்ஞானி ஆகியிருக்காவிட்டால், இந்திய நாட்டு மக்கள் எல்லாரும் இந்நேரம் பட்டினியால் செத்துப் போயிருப்பார்கள்; அவர் தான் பசுமைப் புரட்சியை உருவாக்கி, கோதுமை – அரிசி உற்பத்தியைப் பெருக்கி இந்த நாட்டுக்கே சோறு போடும் அன்ன லட்சுமியாக, மணிமேகலையாக, அட்சயப்பாத்திரமாக இருந்தார் என்கிறார்கள்.
நேற்றுவரை இந்தக் கட்சிகள், நபர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பசுமைப் புரட்சி எனப்படும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளைக்கு ஆளாகி, விவசாயத்தை விட்டே ஓடிப்போன, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீட்டு வாசலில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்! சிறு – குறு விவசாயிகள் அழிவு குறித்து பி.சாய்நாத் போன்ற பத்திரிக்கையாளர்கள் எழுதிய கட்டுரைகளை மொழிபெயர்த்து, சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என பேசினார்கள்! நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானிகளை வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள்! இன்றோ, இந்தப் பிரச்சினைகளில் எல்லாம் தொடர்புடைய சுவாமிநாதன் இறந்தவுடன், அவர் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த முதல் ஆளாக நிற்கிறார்கள். சமூக ஊடகங்களில் கண்ணீர் அஞ்சலிகள் கடலெனப் பெருக்கெடுத்து ஓடுகின்றன. கேட்டால், அறிவியல், உபரி தானிய உற்பத்தி, உணவுப் புரட்சி, பட்டினி ஒழிப்பு என்கிறார்கள்.
படிக்க: ‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!
விவசாயிகளின் துயரங்களைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டிய பத்திரிக்கையாளர் பி.சாய்நாத் உள்ளிட்டு பலரும் புகழஞ்சலி செலுத்தியிருப்பதை நாம் எப்படி பார்ப்பது? எவருடைய அஞ்சலியிலும் விவசாயம் கார்ப்பரேட் மயமாகி வருவதற்கான அடிப்படை எது, யார் துவங்கி வைத்தது? என்பது பற்றி ஒரு வரி கூட இடம்பெறவில்லை. இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் குறித்த குறிப்புகள் இல்லை. ஆனால், பி.சாய்நாத் இன்னொரு விசயத்தைக் குறிப்பிடுகிறார். சுவாமிநாதன் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்த போது, விவசாயிகளின் மயானமான விதர்பா பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றதையும், அங்கு விவசாயிகளின் குமுறலை சுவாமிநாதன் காதுகொடுத்துக் கேட்டதோடு, இறந்துபோன விவசாயியின் வீட்டுக்குச் சென்ற போது கண்ணீர் சிந்தி அழுததையும் பதிவு செய்திருக்கிறார். நிச்சயமாக உள்ளத்தை உருக்கும் பதிவுதான், நிகழ்வு தான் அது. ஆனால், இதற்கெல்லாம் அடிப்படை எது?
சுவாமிநாதன் தனது பேட்டிகளில் சொல்லியிருப்பதைப் போல, அரசின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் மட்டும் தான், தொழில்நுட்பத்திற்கு மேலே நின்று ஆதிக்கம் செலுத்தினவா? அதுதான் உண்மை என்றால் அந்தக் கொள்கைகளைத் தீர்மானித்து, நடைமுறைப்படுத்தச் சொல்லி அரசின் கைகளை முறுக்கிக் கொண்டிருப்பது யார்? விதைகள், இரசாயன் உரங்கள், பூச்சிக் கொல்லிகளைத் தயாரிப்பைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகள் தானே. தங்களது நலனுக்கு உகந்த வகையில் அரசுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது அவர்கள் தானே. சுவாமிநாதன் எந்தவொரு தருணத்திலும் இந்தக் கார்ப்பரேட்டுகள் பற்றி குறிப்பாகப் பேசியதே இல்லை. கேள்வி கேட்டவர்களும் இவை குறித்து வாய் திறக்கவேயில்லை.
சுவாமிநாதனைப் பேட்டியெடுத்த ப.கு.ராஜன்(புத்தகம் பேசுது), சமஸ் (தி இந்து தமிழ்) இன்னும் சில ஆங்கில ஊடகங்கள் கூட இந்தக் கோணத்தில் ஒரு கேள்வியைக் கூட கேட்காமல் பொத்தாம் பொதுவாக பசுமைப் புரட்சியின் – இரசாயன உரம், பூச்சிக்க்கொல்லி பயன்பாட்டின் – எதிர்விளைவுகள், விவசாயிகள் நெருக்கடிகள் என்ற வகையிலும், சுவாமிநாதன் மீதான விமர்சனம் என 1970-களில் வந்த ஒருசிலவற்றை மட்டும் முன்வைக்கிறார்கள். அதற்கு, அவரும் மேலோட்டமாகவும், அந்தக் காலத்திலேயே அதுபற்றி தான் பதில் சொன்னதாகவும் கூறி கடந்து செல்கிறார்.
பசுமைப் புரட்சி என்பதைத் தான் ஏற்கவில்லை என்றும், அது USAID என்ற நிறுவன அதிகாரி ஒருவர் பயன்படுத்திய வார்த்தை என்றும் கூறும் சுவாமிநாதன், நடந்தது பேராசைப் புரட்சி என்கிறார். அதாவது, அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்ட சில பேராசைக்கார விவசாயிகள் ஏராளமான யூரியாவை (மலிவாகக் கிடைக்கும் இரசாயன உரம்) பயன்படுத்தியதால் நிலம் பாழாகிப் போனது என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். விவசாயிகளின் பேராசையா, பன்னாட்டு உரக் கம்பெனிகளின் பேராசையா என்று கேட்கக் கூட பேட்டியாளர் எவருக்கும் துணிவில்லை பாருங்கள்!
படிக்க: மோடி அரசுக்கு எதிராக மகாராஷ்டிர விவசாயிகள் மாபெரும் போராட்டம்!
தொழில்நுட்பத்தை விட அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் தான் தீர்மானிக்கின்றன என்பது சுவாமிநாதனின் வாதம். அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சூழலியல் கேடுகள், விவசாய நெருக்கடி, இலட்சக் கணக்கான விவசாயத் தற்கொலைகளுக்குப் பின்னும் அரசின் கொள்கைகள் மாறாமல் இருக்க என்ன காரணம் என்பதை அவரால் சொல்ல முடியாமல் போனது ஏன்? அவரது அறிக்கைகளைக் கூட நடைமுறைப்படுத்த அரசுகள் மறுப்பதற்கான காரணத்தை ஏன் விளக்கவில்லை? தஞ்சை டெல்டாவில் காட்டாமணக்கும், மக்காச் சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கும் என்று அரசுக்கு அறிவுரை வழங்கினாரே, அதற்கு பின்னால் இருக்கும் நலன் யாருடையது? ஈழத்தில் போர் முடிந்த கையோடு வடக்கின் வசந்தம் என்ற பெயரில், இலங்கைப் பேரினவாத அரசின் துணையோடு ஒரு விவசாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசனை கொடுத்தாரே, அதன் பின்னால் யாருடைய நலன் இருந்தது?
ஒரு வேளாண் விஞ்ஞானி என்ற வகையில், உணவு தானிய உற்பத்திக்கு சுயசார்பான திட்டங்களை முன்வைத்தார் என்றோ, அதில் நேர்ந்துவிட்ட தவறுகளில் தனது பங்கிற்கு வருந்தினார் என்றோ சொல்லி கடந்துவிட முடியாத ஒருவர் தான் சுவாமிநாதன். நவீன அறிவியலை விவசாயத்தில் புகுத்துவதற்கு நாம் எதிரிகள் அல்லர். ஆனால், யாருடைய நலனை முன்னிறுத்துகிறோம் என்பது முதன்மையானது. பெரும் கார்ப்பரேட்டுகள் பிடியில் விவசாயத்தைச் சிக்க வைத்த பின்னர், அவர்களின் விளைபொருளுக்கு உரிய விலை வேண்டும், பொது விநியோகத் திட்டம் அவசியம் என்று பேசுவதெல்லாம் கண்கெட்ட பின் சூரிய வணக்கம் செய்வதற்கு ஒப்பானது. சுவாமிநாதனின் நேர்மறை அம்சங்களாக பலர் சுட்டிக்காட்டுபவை அனைத்தும் இந்த வகையில் தான் அடங்கும்.
இறுதியாக, 2017 ஆம் ஆண்டில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக, குறிப்பாக பி.டி பருத்திக்கு எதிராக சி.ஆர்.கேசவன் என்ற விஞ்ஞானியுடன் இணைந்து அவர் வெளியிட்ட அறிக்கைக்கு, மோடி அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் எதிர்ப்பு தெரிவித்ததும், குழப்பமான, சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கையாக மாறியமைக்கு வருத்தம் தெரிவித்து முடித்துக் கொண்டார் சுவாமிநாதன். எந்த வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுகிறோம் என்ற தெளிவில்லாத போது தடுமாறுவது இயல்புதானே.
“அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பில்லா தவர்”
என்பது சுவாமிநாதனுக்கு மட்டுமல்ல அவரைப் புனிதராக்கும் அனைவருக்குமே பொருந்தும்.
வாகைசூடி