‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!

தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்கள் இக்கார்ப்பரேட் சேவைக் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், தங்களது நியாயமான போராட்டத்திற்காக இதர உழைக்கும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் அத்தியாவசியமானதாகும்.

டலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கப் பணிகளுக்காக, பாலியப்பட்டு மற்றும்  உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க என தொடர்ந்து விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தி.மு.க அரசு.  இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, நா.அரூர், பரளி, லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2500 ஏக்கர் நிலம்,சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட இருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. சிப்காட்டிற்காக இப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது அப்பகுதி சிறுகுறு விவசாயிகளைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

கடந்த 2021 சட்டமன்றக் கூட்டத்தொடரில், அறிவிக்கப்பட்டதுதான் இந்த சிப்காட். தொடக்கத்தில்,  மொத்த நிலத்தில் 79 சதவீதம் புறம்போக்கு நிலம் என்றும், 21 சதவீதம் பட்டா நிலங்களை எடுப்பதாகவும்  அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது, தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், 2500 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும் என்று எம்.பி பேசியது விவசாயிகளை உடனடியாகப் போராடத் தூண்டியிருக்கிறது.

படிக்க : விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

“சிப்காட் அமைக்கப்படும் இப்பகுதியானது தொடர்ச்சியாக பலன் தரும் விவசாயப் பகுதியாகும். வெங்காயம், காய்கறிகள், சோளம், கரும்பு, மக்காச் சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்றவை இங்கு விளைகின்றன. இங்கு விளையும் சின்ன வெங்காயத்தை பல்லடம், மைசூர் வரை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். விவசாயம் மட்டுமல்லாது, ஆடு, மாடு வளர்ப்பதும் முக்கிய தொழிலாக இருக்கிறது. எங்கள் பகுதியை ஒட்டியியிருக்கும் கரடும், புறம்போக்கு நிலங்களும்தான் ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் பகுதியாக இருக்கிறது. மேலும், இக்கரட்டை நம்பிதான் எங்களது குடிநீர் ஆதாரமும் இருக்கிறது. ஏரி, சுனைகள்  உள்ள இப்பகுதியில்தான் சிப்காட் அமைய இருக்கிறது.  ஏரி, சுனைகள், கரட்டையும் உள்ளடக்கி சிப்காட் அமைத்துவிட்டால், பல குக்கிராமங்களின் வாழ்வாதாரமும், குடிநீர் ஆதாரமும் அழிக்கப்படும் என்பதால்தான் சிப்காட் அமைக்க வேண்டாம் என்கிறோம்” என்கிறார் சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்குமார்.

மேலும்,  “ஏற்கனவே சிப்காட்டுகள் அமைந்த எந்தப் பகுதியிலும் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. சிப்காட்டில் அமைக்கப்படும் ஆலைகள் லாப நோக்கத்திற்காக மட்டுமே இயங்கும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான் மக்களுக்கு மிஞ்சும்.  வேலைக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களைத்தான் வேலைக்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இங்கு சிப்காட் அமைப்பதால் எந்தப் பயனும் எங்களுக்கு இல்லை.  அதனால்தான் சிப்காட் அமைப்பதற்கு எதிராக தொடர்ச்சியாக  மக்களும், பல்வேறு கட்சிகளும் போராடி வருகிறோம். எங்களின் தொடர்ச்சியான, உறுதியான போராட்டத்தின் விளைவாகத்தான் வளையப்பட்டி ஊராட்சியில் சிப்காட் அமைப்பதற்கு எதிராகத் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. அதேசமயம், நா.புதுப்பட்டி ஊராட்சியில் அத்தீர்மானம் போடப்படவில்லை” என்கிறார்.

“இங்கிருக்கும் நிலத்தை, ஒவ்வொரு வரப்பாய் செதுக்கி விளைநிலங்களாக மாற்றியிருக்கிறோம். வெங்காயம், மரவள்ளி போன்றவை பயிரிடுவதால் ஓரளவு கஞ்சி குடிக்கிறோம். தற்போது அதையும் கெடுப்பதற்காக சிப்காட் வருகிறது.  எனக்கு 60 வயதாகிறது. மூன்று ஏக்கர் நிலத்தை வைத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலத்தை விட்டுட்டு போகணும்னா எங்க போவோம்? நிலத்திற்கு அரசு கொடுக்கிற காசை வைத்து என்ன செய்ய முடியும்? அந்தப் பணத்தை வைத்து வேறு நிலம் வாங்க முடியுமா? 60 வயதுக்கு மேல் என்ன செய்ய முடியும்? எங்களால் முடிந்தவரை போராடுகிறோம்” என்று வேதனையுடன் பேசுகிறார் விவசாயி  ஒருவர்.

ஏற்கனவே,  விவசாய உள்ளீட்டுப் பொருட்களின் விலையேற்றம், விளைபொருட்களுக்கு  உரிய விலை கிடைக்காமை, நீர்ப்பற்றாக்குறை ஆகியவற்றால் குற்றுயிரும், குலையுயிருமாக இருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும்,  ‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஒழித்துக் கட்டத் துடிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். விவசாய நிலங்களை சிப்காட் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து வருகின்றன.

தி.மு.க அரசால் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணப்பு (சிறப்புத் திடங்களுக்கான) சட்டம் 2023, விவசாய நிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதற்கான ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடாகும். அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள அரசு நிலங்களையும், அந்நிலங்களில் உள்ள நீர்நிலைகளையும் சேர்த்து ஒருங்கிணைத்து கையகப்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கிறது இச்சட்டம். 250 ஏக்கருக்கு மேல்  தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.

இச்சட்டத்தின்படி, வளையப்பட்டி, நா. புதுப்பட்டி , பரளி, லத்துவாடி பகுதிகளில் அமையவுள்ள சிப்காட் சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டு விவசாய நிலங்களும், புறம்போக்கு நிலங்களும், அதில் உள்ள நீர்நிலைகளும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்படும் வாய்ப்பை மறுக்க முடியாது. அதேசயம், ஏற்கனவே, நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி பகுதியில், 78 நிறுவனங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட நிலமே புதர்மண்டிக் கிடக்கிறது. மேலும், இதே மாவட்டம் ராசாம்பாளையம் பகுதியில், கிட்டத்தட்ட 37 ஏக்கர் நிலத்தில் சிட்கோ அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு  தமிழக முதல்வர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இங்கும் எந்த முன்னேற்றமும் இல்லை.

படிக்க : ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? | தோழர் வெற்றிவேல் செழியன்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டநிலங்களே புதர் மண்டிக் கிடக்கின்ற சூழலில், சிப்காட்  என்ற பெயரில் என்ன நிறுவனம் அமைக்கப்படுகிறது என்று அறிவிக்காமலும், பாதிக்கப்படும் பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தாமலும் நில அளவீடு செய்யப்படுவதானது ‘சமூக நீதி’ பேசுகிற தி.மு.க அரசின் ஜனநாயக விரோதமான சர்வாதிகார நடவடிக்கையாகும். ‘வளர்ச்சி’ என்ற பெயரில், விவசாயத்தை ஒழித்துக் கட்டி, விவசாய நிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதை எதிர்ப்பதும், போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்பதும் நம் அனைவரின் கடமையாகும்.

அதேசமயம், மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களையும் – போராடும் மக்களையும், நாட்டிற்கு எதிரானவர்களாகவும், வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் இழிவுபடுத்துகிற பா.ஜ.க வும், அதன் அடிவருடியான அ.தி.மு.க-வும், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகவும், தி.மு.க எதிர்ப்பு என்ற வகையிலும், இப்பகுதி மக்களின் சிப்காட் எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கின்றன. எனவே தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்கள் இக்கார்ப்பரேட் சேவைக் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், தங்களது நியாயமான போராட்டத்திற்காக இதர உழைக்கும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் அத்தியாவசியமானதாகும்.

வாகை சூடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க