மோடி-அகர்வால் அழிக்கத்துடிக்கும் அரிட்டாபட்டி குறித்து சீனி வேங்கடசாமியின் குறிப்புகள்

அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.

துரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள நாயக்கர்பட்டி பிளாக் எனும் 5,000 ஏக்கர் பரப்பளவிலான டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் சுரங்கம் அமைக்க மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுரங்கம் அமைப்பதற்கான ஏலம், தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்களை சுட்டுக்கொன்ற அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சுரங்கம் அமைக்கப்பட்டால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டு இக்கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலம், நீர் மற்றும் காற்று கடுமையாக மாசுபட்டு இப்பகுதிகளில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகும். மேலும், இது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் திகழ்கிறது. எனவே, சுரங்கம் அமைப்பதற்கு எதிராக பிற கிராம மக்களையும் இணைத்துகொண்டு அரிட்டாபட்டி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், வரலாற்று சின்னங்களை தாங்கி நிற்கும் அரிட்டாபட்டியின் வரலாற்று முக்கியத்துவம் கருதி, அதனை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக (Biodiversity Heritage Site) தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான துறை அறிவித்துள்ளது. ஏனெனில், இங்குள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.


படிக்க: மதுரை அரிட்டாபட்டி : மோடி – அகர்வால் கும்பலுக்கெதிராக மக்கள் போராட்டம்


இந்நிலையில், ஓவா மலையில் அமைந்திருப்பதைப் போலவே அரிட்டாபட்டியில் உள்ள மலைகளிலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும், சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளதை சுட்டிக்காட்டியும் அதனை  பாதுகாக்க வலியுறுத்தியும் பலரும் குரலெழுப்பி வருகின்றனர்.

இத்தருணத்தில், “பௌத்தம் பன்முகப் பார்வை” என்ற நூலில் (பக்கம் 45’ 46) மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் மதுரை அரிட்டாபட்டி குறித்து எழுதியுள்ளதை இங்கு பதிவிடுகிறோம். அவை கீழ்வருமாறு:

பாண்டிய நாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் பிக்குகள் படுத்துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கியமைக்கப்பட்ட படுக்கைகளும் அப்படுக்கையின் கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகிறன்றன. இக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவை, இலங்கைத் தீவில் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காகப் பண்டைக் காலத்தில் அமைக்கப்பட்ட குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன. பௌத்தத் துறவிகள் ஊருக்குள் வசிக்கக் கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால், அவர்கள் வசிப்பதற்காக மலைப் பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைகாலத்து வழக்கம்.

இலங்கையிலும் பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் அமைப்பைக் கொண்டு இவை பௌத்தத் துறவிகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டவை என்றும், இப்பாண்டி நாட்டுக் குகைகளில் காணப்படும் எழுத்துக்களைக் கொண்டு (இவை அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதால்), இவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்லவர் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படும் பாண்டிநாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி என்னும் கிராமத்துக்கருகில் இருக்கின்றது.

‘அரிட்டாபட்டி’ என்னும் பெயர், பெளத்த மதத்தைப் பரவச் செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர் என்னும் பிக்குவை நினைவூட்டுகின்றது. இந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும், ஆகையினாலேயே இக்குகைக்கருகில் உள்ள சிற்றூர் ‘அரிட்டாபட்டி’ என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மகாவம்சம் என்னும் நூல் மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து பௌத்த மதத்தைப் பரப்பினார் என்று சொல்வதைப் பாண்டிய நாட்டில் உள்ள ‘அரிட்டாபட்டி’ என்னும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை அழிக்கத்துடிக்கும் பாசிச மோடி-அகர்வால் கும்பலுக்கு எதிரான மதுரை மக்களின் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் துணைநிற்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


சித்தா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க