பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் வயல்வெளிகள், வானுயர வளர்ந்து நிற்கும் மலைக்குன்றுகள், அரியவகை பறவைகள், பூச்சியினங்கள் மற்றும் விலங்குகள் என இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமமான அரிட்டாபட்டி மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தை முற்றிலுமாக அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை பாசிச மோடி அரசு நடத்தி முடித்திருப்பது அக்கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அக்கிராம மக்களோடு இணைந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் அரிட்டாபட்டியை அழிக்கக்கூடாது என குரல் கொடுத்து வருகிறது.
மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள நாயக்கர்பட்டி பிளாக் எனும் 5,000 ஏக்கர் பரப்பளவிலான டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் சுரங்கம் அமைக்க, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-கீழ் ஒன்றிய மோடி அரசு ஏலம் நடத்தியது. அதில் கொலைகார வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் நவம்பர் 7-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளபடி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அரிட்டாபட்டி மட்டுமின்றி, முத்துவேல்பட்டி, கிடாரிப்படி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்படும். இக்கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலம், நீர் மற்றும் காற்று கடுமையாக மாசுபட்டு இப்பகுதிகளில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகும்.
அரிட்டாபட்டியில் உள்ள மலைகளில் 280 வகையான பறவை இனங்கள், 700 வகையான பூச்சியினங்கள், அரியவகை தேவாங்குகள், எறும்புத் தின்னி, மலைப்பாம்பு மற்றும் இந்தியாவிலேயே இங்கு மட்டுமே காணப்படும் லகுடு எனும் அரியவகை வல்லூறு போன்றவை வாழ்ந்து வருகின்றன; 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாகவும் இம்மலைகள் விளங்குகின்றன; மேலும், சுரங்கம் அமைக்க உள்ள பகுதியில் முல்லை பெரியாறு அணையின் நீர்பாசனத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இவையனைத்தும் அழிந்து நாசமாகும்.
படிக்க: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மற்றொரு ஸ்டெர்லைட்!
இத்தகைய பேரபாயமிக்க சுரங்கத் திட்டத்தை, தூத்துக்குடியின் நீரையும் நிலத்தையும் காற்றையும் நாசமாக்கிய, தமிழ்நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட, ஸ்டெர்லைட் முதலாளி அணில் அகர்வாலுக்கு தூக்கிக் கொடுத்திருப்பது மோடி அரசின் தமிழ்நாட்டு மக்கள் மீதான வெறுப்பையும் அகர்வாலுடன் உள்ள உறவையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுத்தி தூத்துக்குடி மக்களை கொன்றொழித்ததைப் போல, டங்ஸ்டன் சுரங்கத்தின் மூலம் மதுரை மாவட்ட மக்களையும் கொன்றொழிக்க மோடி அரசு துடிக்கிறது.
ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொலைகார அகர்வாலின் கோரமுகத்தை உணர்ந்துகொண்டுள்ள தமிழ்நாடு மக்கள் மீண்டுமொரு ஸ்டெர்லைட்டை அனுமதிக்கத் தயாராயில்லை. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியான உடனே அரிட்டாபட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்; டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 25 ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர்; கடையடைப்பு, கருப்பு கொடி ஏற்றம், ஊர்க்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
“கடவுளாக எங்களைக் காத்துவரும் மலைகளை எல்லாம், ஏற்கெனவே கிரானைட் கொள்ளையர்கள் வெட்டி கூறுபோட்டு விற்றுவிட்டார்கள். இப்போது டங்ஸ்டன் சுரங்கம் என்ற பெயரில் இந்த விவசாய பூமியையும் அழிக்கத் துடிப்பவர்களுக்கு எதிராக உயிர் இருக்கும் வரை போராடுவோம்” என்று உறுதியுடன் கூறுகிறார்கள் போராட்டக் களத்தில் உள்ள மக்கள். ஆம், பி.ஆர்.பழனிச்சாமி போன்ற கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிராக போராடி கிரானைட் கொள்ளையை தடுத்து நிறுத்திய மேலூர் பகுதி மக்களின் போராட்டம் இன்று மோடி அரசுடன் நெருங்கிய உறவில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளியான அணில் அகர்வாலுக்கு எதிராக தொடங்கியிருக்கிறது. கார்ப்பரேட் எதிர்ப்புணர்வு ஊறிப்போன தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான இப்போராட்டத்திலும் நிச்சயம் வெல்லப்போவது மக்களே ஆவர்.
மறுபுறம், அரிட்டாபட்டியின் வரலாற்று முக்கியத்துவம் கருதி, அதனை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக (Biodiversity Heritage Site) தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான துறை அறிவித்துள்ளது. அப்படியிருந்தும் மோடி அரசானது ஏலத்தை நடத்துவதற்கு முன்னால் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் கூறாமல் திமிர்த்தனமாகவே செயல்பட்டுள்ளது. மேலும், கனிம வளங்கள் உள்ள நிலங்களுக்கான உரிமைகள் மாநில அரசிடம் இருப்பதால், ஒன்றிய அரசு மாநில அரசிடம் முறையான ஒப்புதலைப் பெற வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். ஆனால், தமிழ்நாடு அரசின் உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளது, மோடி அரசு.
இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு தி.மு.க. அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அரிட்டாபட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, “சுரங்கம் அமைக்க அரசு அனுமதிக்காது” என்று வாக்குறுதியளித்தார். மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு “டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அனைத்துக் கட்சிகளுடனும் பேசி இதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்வோம்” என்றார்.
ஆனால், மோடி அரசானது டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடே எதிர்ப்பு தெரிவித்து வரும் போதிலும் அத்திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. கடந்த நவம்பர் 29-ஆம் தேதி, ஒன்றிய சுரங்க அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பகுதியில் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு மக்கள் போராட்டத்திற்கு சவால் விடுகிறது மோடி அரசு.
படிக்க: அரிட்டாபட்டியில் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்
ஏனென்றால், இந்தியா முழுவதும் கொட்டிக்கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி-அகர்வால் கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காக நாட்டை திறந்துவிட்டுள்ளது, மோடி கும்பல். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு சட்டத்தை அடாவடித்தனமாக ரத்து செய்தது, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளையும் அப்பாவி பழங்குடி மக்களையும் வேட்டையாடுவது, மணிப்பூர் கலவரத்தை முன்னின்று நடத்தி வருவது போன்றவை கார்ப்பரேட் கும்பலின் கனிமவளக் கொள்ளைக்கான நடவடிக்கைகளே.
இக்கொள்ளைக்காக வனப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டு பல்வேறு சட்டங்களை திருத்தி வருகிறது. கடந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான குத்தகை மற்றும் உரிமம் வழங்குவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் மோடி அரசு திருத்தங்களை மேற்கொண்டது. அதனடிப்படையிலேயே தற்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை அணில் அகர்வாலுக்கு வழங்கியிருக்கிறது.
எனவே, அரிட்டாபட்டியை அழித்து டங்ஸ்டனை சூறையாடுவதற்கான நடவடிக்கைகளை மோடி-அகர்வால் கும்பல் எளிதாக கைவிடப் போவதில்லை. மக்களின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை தற்காலிகமாக தள்ளிப்போடலாம்.
ஆகவே, தி.மு.க. அரசானது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், மக்களின் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டின் மக்களும் ஜனநாயக சக்திகளும் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் மேலூர் மக்களுடன் களத்தில் தோளோடு தோள் நின்று டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான மோடி-அகர்வால் கும்பலின் அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்க வேண்டும்.
கதிர்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram