அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
ஜனநாயக சக்திகளே!
கடந்த மார்ச் 7-ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற பண்பாட்டுப் போர் முழக்கத்தோடு “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” எழுச்சிகரமாக நடைபெற்றது. இந்தப் பண்பாட்டுப் பெருவிழாவை சமூக ஊடகங்களிலும் இணையதளத்திலும் வீச்சாகக் கொண்டு செல்வதற்கு ஏற்ப, எமது “பெருவிழா” ஊடகம் எமது தோழமை அமைப்புகளோடு இணைந்து பணியாற்றியது.
அந்தவகையில், எமது இணையதளத்திலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பண்பாட்டுப் பெருவிழா தொடர்பாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளைக் கொண்டு வந்துள்ளோம். இவையெல்லாம் பத்து இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, பெருவிழாவிற்காக ஜனநாயக சக்திகளை சந்தித்துத் தோழர்கள் அழைப்பு விடுத்தது; பொது மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட வீடு, கடைவீதிப் பிரச்சாரம், பேருந்து – இரயில் பிரச்சாரம், கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியிலான பிரச்சாரங்களை மேற்கொண்டது; சுவரொட்டி ஒட்டியது எனப் களப்பணிகளைப் பதிவிட்டுள்ளோம்.
அதேபோல், மக்கள் அதிகாரக் கழகத்தின் நான்கு மாநில இணைச் செயலாளர்கள் மேற்கொண்ட எழுச்சிப் பயணம் தொடர்பான பதிவுகளும் பதிவிடப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிந்த பரப்புரையைச் சமூக ஊடகத்தில் ஆவணப்படுத்தியது, தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் பிரம்மாண்டத்தை உணர்த்தியது.
மேலும், பல்வேறு சமூக ஊடகப் பிரபலங்கள், ஜனநாயக சக்திகள் பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அறைகூவல் விடுத்துக் காணொளிப் பதிவிட்டனர். தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா முழக்கத்தின் கூர்மையை எடுத்துரைத்தும் பெருவிழா நிகழ்ச்சியை வரவேற்றும் பேசினர். சமூக ஊடகப் பரப்புரையைப் பரவலாகக் கொண்டு செல்வதில் இது முக்கியப் பங்காற்றியது.
தவிர, சாதி மறுப்பு மணம் செய்துகொண்ட இணையர்களிடம் பேட்டி எடுத்துக் காணொளியாகப் பதிவிட்டோம். இதில், அவர்கள் பல்வேறு சவால்களைக் கடந்து முன்னேறி வந்திருப்பதை அனுபவமாகத் தெரிவித்திருந்தனர். அதேபோல், மாணவர்கள், பொதுமக்களிடத்திலும் பேட்டிகள் எடுக்கப்பட்டுப் பதிவிடப்பட்டன. அவர்களும், சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆணவப் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
சாதி மறுப்பு மணங்கள் சமூகத்தில் இயல்பானதாக மாறி வருவதையும், மக்களிடத்தில் நிலவும் சாதிய எதிர்ப்புணர்வையும் இக்காணொளிகள் காட்சிப்படுத்தின. இக்காணொளிகள், ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தித்தரும் வகையிலும் அமைந்தன.
மேலும், சமீபத்தில் நடந்த சாதியத் தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகள், பண்டைய காலத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தெய்வங்களின் கதைகள் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் பதிவிட்டோம். இந்தப் பதிவுகள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தன; அதிகம் பகிரவும் பட்டன.
இந்தப் பணியின் வீச்சை உணர்ந்த ஜனநாயக சக்திகள், பிப்ரவரி 21-ஆம் தேதி நடக்கவிருந்த பெருவிழா மதுரை மாநகராட்சி நிர்வாகம், போலீசின் அராஜகத்தால் கடைசி நேரத்தில் இரத்தானதற்கு எதிராகத் தமது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
தவிர, தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள், மக்களிடம் கருத்து கேட்டுப் பேட்டி எடுத்துப் பதிவிட்டோம். இதில், இப்பெருவிழாவின் முக்கியத்துவத்தையும் ஆணவப்படுகொலைக்கு எதிராகத் தங்களது கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
எமது சமூக ஊடகப் பரப்புரையைப் பார்த்து சமூக உணர்வு – சாதிய எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் எமது தோழமை அமைப்பில் இணைய முன்வந்துள்ளனர். தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
ஊடகம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொண்டதானது ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்களின் ஆதரவின்றி சாத்தியமாகி இருக்காது. ஆகையால், எமது இப்பணிக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சமத்துவப் பண்பாட்டிற்கான போரைத் தொடர்ந்து நடத்துவோம்!
இப்படிக்கு,
பெருவிழா ஊடகக் குழு.
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











