அரிட்டாபட்டியில் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்!
டங்ஸ்டன் கனிம சுரங்கத்தினை வரவிடாமல் தடுத்து
தூத்துக்குடி மக்களின் தியாக வரலாற்றைப் படைப்போம்!
28.11.2024
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ள பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு நிலங்களை நவம்பர் 7 ஆம் தேதி வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது ஒன்றிய அரசு.
அரிட்டாபட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியானது பல்லுயிர் பாரம்பரிய பகுதியாகவும், முல்லை பெரியார் பாசன வசதி பெரும் வேளாண் நிலங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. அங்கு 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாகவும் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. ஏழு சிறிய குன்றுகள் இந்த தளத்திற்குள் உள்ளன. இந்த பகுதியில் 2200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், குடைவரை கோவில்கள் உள்ளன; பசுமையான பகுதியாகவும் இயற்கை வளம் நிறைந்ததாகவும் இப்பகுதி உள்ளது.
மேற்கண்ட அரிட்டாபட்டி பகுதியில் கடந்த 20 நாட்களாகச் சுரங்கம் அமைப்பதற்கான திட்டத்தை மக்கள் எதிர்த்து வந்த நிலையில் நவம்பர் 23 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடந்த போது மேலூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் போன்ற ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 25க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரக்கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதைத் தவிர மதுரை மாவட்டத்தின் மற்ற பகுதிகள் சிலவற்றிலும், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும் டங்ஸ்டன் கனிம சுரங்கம் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதி மக்கள், முல்லை பெரியார் பாசன வசதி பெறும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் இராணுவமே வந்தாலும் எதிர்த்து நிற்போம் என்று கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நவம்பர் 28 ஆம் தேதி வல்லாளப்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தைக் கொண்டு வரக் கூடாது என்று கூட்டம் நடத்துகின்றனர். டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரைச் சுட்டுக் கொன்ற கொலைகார நிறுவனத்திற்கு ஆதரவாகச் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, நில ஒருங்கிணைப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தது ஒன்றிய அரசு. அதன் மூலம் இயற்கை வளம், கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடி மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வழிவகை செய்துள்ளது.
படிக்க: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மற்றொரு ஸ்டெர்லைட்!
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம், மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம், திருவண்ணாமலை சிப்காட் போராட்டம், எட்டு வழிச் சாலை எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம் என தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆனால் பாசிச மோடி அரசோ சுற்றுச்சூழல் சட்டம், நில ஒருங்கிணைப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்து கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும், வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க முயல்கிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் தூத்துக்குடி மக்களின் தியாகத்தால் கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டதைப் போல டங்ஸ்டன் கனிம சுரங்கத்தினை வர விடாமல் தடுக்க தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தினை வரித்துக் கொண்டு வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தையும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைத்து தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்.
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram