கடந்த மார்ச் 7-ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில், “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” அரசியல் கட்சியினர், இயக்கத்தினர், ஜனநாயக சக்திகள், இளைஞர்கள், மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 28 அன்று இதே முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி (எ) செல்வகணேஷ் – தோழர் ராதிகா இணையரின் சாதி மறுப்பு புரட்சிகர மண விழா மதுரையில் நடைபெற்றது. இது தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சிக்கு சரியாக முகங்கொடுத்து, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி நாளாக அமைந்தது. அம்மணவிழாவிற்கு தலித் மக்கள், இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் அளித்த ஆதரவைத் தொடர்ந்து இப்பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது.
பார்ப்பனிய பிற்போக்குப் பண்பாட்டிற்கு எதிராகவும் ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாட்டிற்கு எதிராகவும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் சமத்துவ, புரட்சிகரப் பண்பாட்டையும் மரபையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா இனி ஆண்டுதோறும் நடத்தப்படும் என புரட்சிகர அமைப்புகள் அறிவித்துள்ளன. இது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பாகும்.
அந்தவகையில், பறையிசை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சாதி, மத மறுப்பு இணையர்களின் அனுபவங்கள், கருத்துரைகள், ஆணவப் படுகொலைகளின் இரத்தச் சாட்சிகள், ஓவிய, படக் கண்காட்சி, தீர்மானங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சி என காலை 11 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை பெருவிழா பேருற்சாகத்துடன் நடைபெற்றது.
ஆணவப் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும்; சாதி, மத மறுப்பு இணையர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், போதைக் கலாச்சாரம் தடுக்கப்பட வேண்டும்; தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக மதுரை மண்டலத்தை அறிவிக்க வேண்டும்; இயற்கை சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற கார்ப்பரேட் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் ஆகிய “ஐம்பெரும் முழக்கங்களை” முன்வைத்து பெருவிழாவிற்கான பரப்புரை இயக்கம் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஐம்பெரும் முழக்கங்களும் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ரீதியில் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகும்.
இம்முழக்கங்கள் அனைத்தும் ஜனநாயக சக்திகளாலும் மக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துகளையும் உள்ளடக்கி, இந்த “ஐம்பெரும் முழக்கங்களை” விரிவாக வகுத்து பெருவிழாவில் ஐம்பெரும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
மேலும், பெருவிழா பரப்புரையானது மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டாலும், தோழர்கள் இப்பெருவிழாவின் அரசியல் உள்ளடக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நேரிலும் சமூக ஊடகங்கள் மூலமும் பல இலட்சக்கணக்கான மக்களிடம் கொண்டுசென்று சேர்த்துள்ளனர். பத்தாயிரக்கணக்கான துண்டறிக்கைகளை மக்களிடம் விநியோகித்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர். போலீசு, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அராஜகத்தால் பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்பட இருந்த பெருவிழாவிற்கான அனுமதி கடைசி நேரத்தில் மறுக்கப்பட்ட போதிலும், பல்வேறு நெருக்கடிகள், பொருளாதார இழப்புகளை சமாளித்து மீண்டும் 15 நாட்களில் பெருவிழாவை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர்.
மேலும், மக்களைச் சார்ந்து இயங்கும் புரட்சிகர அமைப்புகள் மிகுந்த பொருட்செலவுக் கொண்ட, எளிதில் அனுமதி கிடைக்காத மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு நாள் முழுவதும் நிகழ்ச்சி நடத்துவது சாத்தியமற்றதாகும். ஆனாலும், பெருவிழாவின் அரசியல் முக்கியத்துவத்திலிருந்து தோழர்கள் தங்களின் சக்திக்கு மீறி உழைத்து இப்பெருவிழாவை பிரம்மாண்டமாக நடத்தியிருக்கின்றனர்.
மதுரை தமுக்கம் மைதானத்திற்குள் ஓவியக் கண்காட்சி மற்றும் ஆணவப் படுகொலைகளின் இரத்தச் சாட்சிகளை மக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் தனியாக ஓர் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. மேலும், பண்பாட்டுப் பெருவிழாவின் காலை அமர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. மாலை அமர்விற்கு எல்.இ.டி. திரையுடன் கூடிய 30 பேர் அமரும் வகையிலான மாநாட்டு மேடையும், இரண்டு எல்.இ.டி. திரைகளுடன் ஐந்தாயிரம் பேர் அமரும் வகையிலான மாநாட்டுத் திடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமுக்கம் மைதானத்திற்குள்ளும் அதனைச் சுற்றியும் மக்கள் அதிகாரக் கழகத்தின் செங்கொடி நூற்றுக்கணக்கில் நடப்பட்டிருந்ததால் தமுக்கமே சிவந்து காட்சியளித்தது. ஐம்பெரும் முழக்கங்களை முன்வைத்து வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பேனரில் பெருவிழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கையெழுத்திட்டனர். இப்பெருவிழாவையொட்டி தொடங்கப்பட்ட “பெருவிழா” ஊடகத்தில் மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். “புதிய ஜனநாயகம்” பதிப்பகத்தின் அரங்கில் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கினர்.
நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே தோழர்களும் ஜனநாயக சக்திகளும் தமுக்கத்திற்கு வரத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, சென்னை, திருச்சி, கோவை, கடலூர், நெல்லை, ஓசூர், திருவாரூர் என பல மாவட்டப் பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்கள், இளைஞர்கள், மக்கள் செங்கொடி ஏந்தி, முழக்கமிட்டவாறு பேரணியாக தமுக்கத்திற்குள் வந்ததானது மைதானத்திற்குள் இருந்தவர்கள் அனைவருக்கும் புரட்சிகர உணர்வூட்டியது.
பண்பாட்டுப் பெருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, எழுச்சி நாயகர்கள், சித்தாந்தத் தலைவர்களின் படத்திறப்பு நடைபெற்றது. “வர்க்கப் போரில் உயிர்நீத்த, சாதி ஆணவத்திற்கெதிராக உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம்!” என்ற முழக்கம் விண்ணதிர, எழுச்சி நாயகர்களின் புகைப்படத்தை மக்கள் அதிகாரக் கழகத்தின் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் தோழர் சிவகாமு திறந்து வைத்தார். சித்தாந்தத் தலைவர்களின் புகைப்படத்தை மக்கள் அதிகாரக் கழகத்தின் தென்மேற்கு மண்டலத்தின் இணைச்செயலாளர் தோழர் குருசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் தீரன் தலைமை தாங்கி உரையாற்றினார். அதன் பிறகு, தோழர் சிவகாமு, தோழர் குருசாமி ஆகியோர் உரையாற்றினர். பெருவிழாவிற்கு வந்திருந்த மாணவர்கள், இளைஞர்கள், பிற இயக்கத்தினர் என அனைவரிடத்திலும் எழுச்சி நாயகர்கள், சித்தாந்தத் தலைவர்களின் புகைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்புகைப்படங்களுடன் தோழர்கள் தனியாகவும் குழுவாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தங்களது சமூக ஊடகப் பக்கங்களிலும் பதிவிட்டிருந்தனர்.

அடுத்த நிகழ்ச்சியான ஓவிய, படக் கண்காட்சியை தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் திறந்து வைத்து உரையாற்றினார். தூத்துக்குடி மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தோழர் சிவப்பிரகாசம் வாழ்த்துரை வழங்கினார்.
இக்கண்காட்சியில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள், அதன் கொடூரப் பின்னணி, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் ஆகியவை இரத்தச் சாட்சியங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை பார்வையிட்ட பலரும் வேதனையால் மனமுடைந்து கண்கலங்கினர். கண்காட்சியை முழுமையாகக் கூட பார்க்க முடியாமல் தவித்தனர். மேலும், சாதி ஆதிக்கத்திற்கெதிரான உணர்வை தங்கள் பகுதி மக்களிடமும் கடத்த வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து இக்கண்காட்சியை தங்கள் ஊரிலும் காட்சிப்படுத்த வேண்டும் எனப் பலரும் கழகத் தோழர்களிடம் உரிமையுடன் முன்வைத்திருக்கின்றனர்.
அடுத்ததாக, சாதி, மத மறுப்பு மணங்கள் பார்ப்பனிய நச்சு முறிவு மருந்து என்ற நிகழ்ச்சிக்கு ம.க.இ.க. மேனாள் பொதுச்செயலாளர் தோழர் கதிரவன், அவரின் துணைவியார் தோழர் கலா மாலினி தலைமை தாங்கினர். தாங்கள் சாதி மறுத்து திருமணம் செய்து கொண்டதையும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்ததையும் குறிப்பிட்டு உரையாற்றினர். புதிய ஜனநாயகம் இதழ் வெளியீட்டாளர் மற்றும் மேனாள் ஆசிரியர் தோழர் சண்முகராசு, திராவிட தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி தோழர் விடுதலை வீரன் வாழ்த்துரை வழங்கினர். அதன் பிறகு, சாதி மறுப்பு மணங்கள் பார்ப்பனிய நச்சு முறிவு மருந்து, பெண் விடுதலையும் போதைக் கலாச்சாரத் தடுப்பும் ஒன்றிணைந்தவை ஆகிய இரு தீர்மானங்களும் புதுச்சேரி மக்கள் அதிகாரக் கழகத் தோழர் ரூபாவதியால் வாசிக்கப்பட்டன.
மாலை அமர்வு ராஜ் மார்ஷியல் ஆர்ட்ஸ் குழுவின் சிலம்பாட்டத்துடனும் சக்தி ஒளி கிராமியக் கலைக்குழுவின் பறையிசையுடனும் தொடங்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக, “தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக மதுரை” நடைபெற்றது. அதற்கு ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் தலைமை தாங்கி உரையாற்றினார். நாணல் நண்பர்கள் அமைப்பின் தோழர் தமிழ்தாசன் மதுரையை ஏன் தமிழ்நாட்டுப் பண்பாட்டுத் தளமாக அறிவிக்க வேண்டும் என்று தொல்லியல், வரலாற்று தரவுகளுடன் சிறப்புரையாற்றினார். அதன்பிறகு, தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம் மதுரை, அழிவுத் திட்டங்களால் தடுமாறும் தமிழ்நாடு ஆகிய இரு தீர்மானங்களையும் ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் உமா வாசித்தார்.
அடுத்த நிகழ்ச்சியான “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” ம.க.இ.க. சிவப்பு அலை கலைக்குழுவின் “காதலிக்க சாதி மதம் தேவையில்லடா” என்ற இப்பெருவிழாவிற்கான கருப்பொருள் பாடலுடன் தொடங்கப்பட்டது. பாடல் பாடி முடித்தவுடன் வி.சி.க. தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து தோழர்களுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பாடல் மிகவும் பொருத்தமான விசயத்தை கூறுகிறது என்று மகிழ்ந்துள்ளார்.
அதன் பிறகு சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், பெருவிழாவின் ஐம்பெரும் முழக்கங்களை விளக்கிப் பேசி, அவற்றை ஏன் இந்த கட்டமைப்பில் நிறைவேற்ற முடியாது என்பதையும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார். வி.சி.க. தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டில் வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி ஆணவப் படுகொலைகள் நடப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதையும் அவர்கள் சாதிய சங்கங்களையும் தலைவர்களையும் சந்தித்து ஊக்கப்படுத்துவதையும் அம்பலப்படுத்திப் பேசினார். மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் தோழர் சு.க.முருகவேல்ராஜன், தமிழர் பண்பாடு என்பது சாதி-மதமற்ற, காதலையும் வீரத்தையும் உயர்த்திப்பிடிக்கின்ற பண்பாடு என்பதை விளக்கிப் பேசினார். மக்கள் அதிகாரக் கழகத்தால் இப்பண்பாட்டுப் பெருவிழாவை ஒட்டி கொண்டுவரப்பட்டிருந்த சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி என்ற நூலை தோழர் சு.க.முருகவேல்ராஜன் வெளியிட தோழர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
நேரம் குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பேரறிவாளன், திரைப்பட இயக்குநர் தோழர் லெனின் பாரதி, பு.ஐ.தொ.மு. (மா.ஒ.கு.)-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.க.சிவா சுருக்கமாக உரையாற்றினர். கழக வழக்கறிஞர் அணி தோழர் கலைமதி, பண்பாட்டு எழுச்சியும் ஆணவப் படுகொலைத் தடுப்புச் சிறப்பு சட்டமும் என்ற தீர்மானத்தை வாசித்தார்.
இந்நிகழ்ச்சியின் இடையே சாதி கடந்து காதலித்ததற்காக 2003-ஆம் ஆண்டில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கண்ணகி-முருகேசன் வழக்கு கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தருவதற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் உறுதியுடன் நடத்திய போராட்டம் குறித்து முருகேசனின் பெற்றோர் உருக்கமாக எடுத்துரைத்தனர். ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் அண்ணன் தோழர் கலைச்செல்வன் பண்பாட்டுப் பெருவிழா குறித்து சுருக்கமாக உரையாற்றினார்.
இறுதியாக, ம.க.இ.க. சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. “சுற்றிவளைக்குது பாசிச படை”, “எத்தனை காதல்களோ…”, “காதல் எங்கள் பிறப்புரிமை” ஆகிய மூன்று பாடல்கள் பாடப்பட்டன. குறிப்பாக, ஆணவப்படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதமாக பெண் தோழர் பாடிய “எத்தனை காதல்களோ..” பாடலைக் கேட்டு பலரும் கண்கலங்கினர். கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் நன்றியுரையாற்ற பெருவிழா நிறைவுற்றது.
மேலும், இப்பண்பாட்டுப் பெருவிழாவில் வி.சி.க-வின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு, வி.சி.க-வின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க மாநிலச் செயலாளர் தோழர் சரவணன், வி.சி.க-வின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் மோ.எல்லாளன், தமிழ்தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் தோழர் மெய்யப்பன், திராவிட விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர் காமாட்சி பாண்டியன், சாதி ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் தெய்வம்மாள், அறக்கலகம் யூடியூப் வலையொளியை சார்ந்த தோழர் தவம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நடத்தப்பட்டிருப்பதானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று ஜனநாயக சக்திகளில் பலரும் பெருவிழா ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, தென் தமிழ்நாட்டையும் மதுரையையும் குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில், இப்பெருவிழா மதுரையில் நடத்தப்பட்டிருப்பதானது அக்கும்பலின் சதித்திட்டத்தை முறியடிப்பதற்கான, மக்கள் அடித்தளத்தை சரிப்பதற்கான கூர்மையான நடவடிக்கையாகும்.
இந்த அடிப்படையிலிருந்தே வி.சி.க. தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் தன்னுடைய உரையில், மதுரை மண்ணில் இப்பண்பாட்டுப் பெருவிழாவை நடத்துவது துணிச்சலான முன்னெடுப்பு என்று குறிப்பிட்டதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறு தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவானது கருத்துரைகள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், ஓவிய, படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அரசியல் கட்சியினர், ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்புடன் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு திருவிழாவைப் போன்றே நடைபெற்று முடிந்துள்ளது.
![]()
ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











