மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹோமியோபதியில் அரசு கல்லூரியிலேயே முதுநிலை பட்டப்படிப்பு வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை அனைத்து இடங்களிலும் ஹோமியோபதிக்கான உள்கட்டமைப்பு உருவாக்கி வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும்; ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மூன்று நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வராத நிலையில், அரசாங்கம் செவி சாய்க்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, 50 ஆண்டுகளாக திருமங்கலம் பகுதியில் இளங்கலை பட்டப்படிப்புடன் செயல்பட்டு வருகிறது. முதுகலை பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்றால் அரசு கல்லூரியில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
அரசு மற்றும் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் மொத்தம் 13 உள்ளன. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 850 முதல் 910 மருத்துவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து வெளியே வருகின்றனர். இப்படி வருபவர்களில் பெருவாரியான நபர்கள் முதுகலை படிப்புக்கான நீட் தேர்வினை எழுதுகின்றனர்.
பிற மாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிகராக மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் நமது மாநிலத்தில் கல்லூரி இல்லாத காரணத்தினால் அகில இந்திய ஒதுக்கீட்டினை நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இது பெரிதும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
அதையும் மீறி முதுநிலை படிக்க விரும்புபவர்கள், முதலில் சில லட்சங்களைச் செலவு செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படுகின்றனர். இவற்றையெல்லாம் கடந்து படித்து வரக்கூடிய மருத்துவர்களுக்கு போதுமான அரசுப் பணியிடங்கள் இங்கு இல்லாமல் உள்ளது. இதனால் ஓமியோபதி மருத்துவர்கள் மத்தியில் தங்களது எதிர்காலம் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது எம்.ஆர்.பி போன்ற தேர்வுகள் மூலம் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆனால் அதில் ஹோமியோபதிக்கு மிகக்குறைந்தளவில் இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்கள் பிரிவு மட்டுமே.
இந்த பிரச்சினை என்பது திருமங்கலத்தில் படிக்கும் அரசு ஓமியோபதி மாணவர்களின் பிரச்சினை மட்டுமானதல்ல. தமிழ்நாடெங்கும் உள்ள ஹோமியோபதி மருத்துவர்கள், மாணவர்கள் அனைவருக்குமான கோரிக்கையாக இந்த கோரிக்கை இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டத்தை மருத்துவர்களும் மற்ற கல்லூரி மாணவர்களும் ஆதரித்து வருகின்றனர்.
பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இப்போராட்டம் குறித்த செய்திகள் வெளி வருகின்றன. ஜனநாயக சக்திகளும் பொதுமக்களும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்!
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











