25.06.2026
மதுரை அவனியாபுரம்: போதை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர்!
பத்திரிக்கைச் செய்தி
கடந்த 24-05-2026 அன்று இரவு எம்.எம்.சி (MMC) குடியிருப்பில் அமைந்துள்ள வீரகாளியம்மன் திருக்கோவில் முன்பாக திருவிழாவின் போது பெண்கள் கும்மியடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தேவர் சாதியைச் சேர்ந்த சஞ்சய் ராமசாமி (17) மற்றும் ஏழு பேர் கொண்ட நபர்களுடன் கஞ்சா போதை அடித்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரனசிங்கம் (30) என்பவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சத்தம் போட்டு இருவரையும் ஒரு அடி அடித்து விலக்கியிருக்கிறார் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த பாலாஜி (34) என்ற இளைஞர்.
இதை மனதில் வைத்துக் கொண்டும் சாதிய வன்மத்துடனும் ஜூன் 19 அன்று மதியம் 12:00 மணி அளவில் சஞ்சய் ராமசாமி ஆட்டோவை ஓட்டிக்கொண்டு அதில் உள்ளே வில்லாபுரத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான மௌனம் முனீஸ் (24) அமர்ந்து கொண்டு இருவரும் எம்.எம்.சி குடியிருப்பின் தெருக்களில் நோட்டமிட்டுள்ளனர்.
பின்னர் மதியம் சுமார் 2.30 மணி அளவில் ஆறு பேர் கொண்ட கூலிப்படை கும்பலால் பாலாஜி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த ராஜா உசேன் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாய், தந்தையோடு சேர்ந்து வாழ்ந்து வந்த பாலாஜி வழக்கறிஞராகப் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்த கனவு அழிக்கப்பட்டது.
இந்தப் படுகொலைக்கு நீதி கோரியும் கஞ்சா வியாபாரி மௌனம் முனீஸை கைது செய்யக் கோரியும் ஜூன் 20 அன்று ஜனநாயக சக்திகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர், கமிஷனர், உளவுத்துறை அதிகாரிகளிடம் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி மனுவும் அளிக்கப்பட்டது.

தலித் மக்கள் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதில் ஜனநாயக சக்திகள், ம.க.இ.க உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்கள் இணைந்து ஜூன் 22 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
தொடர் போராட்டத்திற்குப் பின்பு குற்றவாளி மௌனம் முனீஸ் ஜூன் 24 அன்று கைது செய்யப்பட்டான். இதனைத் தொடர்ந்து, பாலாஜியின் உடலை அவரது குடும்பத்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
அவரது உடலை இன்று மாலை 4 மணி அளவில் நல்லடக்கம் செய்ய உள்ளனர். ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன், ம.க.இ.க, மக்கள் அதிகார கழகத் தோழர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
- தென் மாவட்டங்களில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறி படுகொலைகளைத் தடுத்து நிறுத்து!
- ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களைத் தடை செய்!
- கஞ்சா, போதைப் பொருள் கும்பலைக் கைது செய்!
- போதைப் பொருட்களைத் தடை செய்!
- பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கு; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு!
![]()
இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











