22.06.2026
திருவள்ளூரில் அம்மோனியா நச்சு வாயு கசிவால் ஐந்து தொழிலாளர்கள் பலி!
பத்திரிக்கைச் செய்தி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிய இறால் பதப்படுத்தப்படும் தனியார் தொழிற்சாலையில் (St. Peter & Paul Seafoods Exports Private Limited) ஏற்பட்ட அம்மோனியா நச்சு வாயுக் கசிவினால் இதுவரை 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். (தற்போதைய நிலவரப்படி 9 பேர் உயிரிழந்துள்ளனர்). நேற்று 21ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 7:00 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரத்தை மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இறந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால், நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்குன்றம் தனியார் மருத்துவக் கல்லூரியில் 11 பேரும், பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 9 பேரும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும் கவலைக்கிடமாக இருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள் என்றும், வட மாநில தொழிலாளர்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.
காற்றில் அதிக செறிவில் உள்ள அம்மோனியா வாயுவைச் சுவாசிக்கும் போது, கண்கள், மூக்கும், தொண்டை மற்றும் சுவாசக் குழாயில் உடனடியாக எரிச்சல் ஏற்படும், அதிக நேரம் சுவாசிக்கும் போது, சில சமயம் கண்பார்வை இழப்பு, நுரையீரல் பாதிப்பு அல்லது மரணம் கூட ஏற்படும். அப்படித்தான் இந்த விபத்திலும் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நச்சுத்தன்மை உள்ள வாயுக்கள் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் அதைக் கண்டறியும் தானியங்கி கருவிகள் எச்சரிக்கை செய்யும் பாதுகாப்பு கருவிகள் எதுவும் இந்த தொழிற்சாலையில் முறையாக இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. இது விபத்தல்ல பச்சை படுகொலை என்பதற்கு இதுவே ஆதாரம்.
இத்தகைய பேராபத்து மிகுந்த அம்மோனியா வாயு கசிவது என்பது தமிழ்நாட்டில் இது முதன் முறையல்ல. வடசென்னையில் உள்ள ஆலைகளில் தொடர் நிகழ்வாகவே நடந்து வந்துள்ளது. இதிலிருந்து எந்த பாடத்தையும் இந்த அரசுகள் கற்றுக் கொள்வதில்லை. நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதில்லை என்பதை இந்த விபத்தும் உணர்த்துகிறது.
ஜூன் 15 அன்று விபத்தில் பலியான போலீசின் குடும்பத்திற்கு ரூபாய் 30 இலட்சம் வழங்கிய த.வெ.க. அரசு, தற்போது இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 இலட்சம் என்ற அற்பத் தொகையையே வழங்கியுள்ளது. தொழிலாளர்களின் உயிரை, குறிப்பாக வட மாநிலத் தொழிலாளர்களின் உயிரை த.வெ.க. அரசு துச்சமாக கருதுவதைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தும் சட்டவிரோதமான இந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்றும் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட கோரிக்கையையும் சேர்த்து சமூக செயல்பாட்டாளர்கள் மூன்று முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. தொழிலாளர்கள் உயிர் என்பது இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது.
முறையாகக் கண்காணிக்காத, மக்கள் அறிவுறுத்தியும் எதையும் கண்டுகொள்ளாத தொழிற்சாலை பாதுகாப்புத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு அரசே!
- உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகையாக 50 இலட்சம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 5 லட்சம் வழங்க வேண்டும்.
- முறையாகக் கண்காணிக்காத தொழிற்சாலை பாதுகாப்புத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
- உயிராபத்து விளைவிக்கும் இரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
![]()
இவண்,
தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
7358482113
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





