(இது சிந்தை இணையத்தளத்தில் 19.06.2026 அன்று வெளியான கட்டுரை)
தமிழ் சினிமாவின் 100 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக முஸ்லிம்களின் அசல் வாழ்வியலைப் பேசும் ஒரு படம் வெளிவந்திருக்கிறது.
‘ஹபீபி’.
சமீப ஆண்டுகளாகத் தலித் மக்களின் வாழ்வியல் தமிழ் சினிமாவில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுவருகிறது. ஆனால், தமிழ் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமான முஸ்லிம்களின் அசல் வாழ்க்கை இதுவரையில் திரையில் பதிவானதே இல்லை.
இதுநாள் வரை தமிழ்த் திரையில் காட்டப்பட்ட முஸ்லிம் பாத்திரங்கள் பெரும்பாலும் தாடி, குல்லா, பைஜாமா, பச்சைத் தாயத்து அணிந்தவர்களாக, சாம்பிராணி போடுபவர்களாக அல்லது பர்தா அணிந்த பெண்களாக குறிப்பிட்ட ‘ஸ்டீரியோடைப்’ பிம்பங்களுக்குள்ளேயே சுருக்கப்பட்டனர். பெரும்பாலும் அவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்; இல்லையெனில், வறண்ட ‘மத நல்லிணக்க’ போதனைகளைப் பேசும் மிகை உணர்ச்சிக் கதாபாத்திரங்களாகக் காட்டப்பட்டனர்.
முஸ்லிம்கள் யார், அவர்களின் அன்றாடம் எப்படி இருக்கும், அவர்களின் மொழிப் பயன்பாடு எத்தகையது, அவர்களின் வீடுகள், உறவுகள், எண்ண ஓட்டங்கள் எப்படிப்பட்டவை, அவர்களின் விழுமியங்கள் என்ன, அவர்களின் மகிழ்ச்சி, துயரம், பிடிமானம் என எதுவுமே வெகுஜனத் தளத்தில் பதிவானதில்லை. இதனால், ஏனைய மக்களுக்கும் முஸ்லிம்களின் வாழ்வியல் பற்றி ஆழமான புரிதல் இல்லாமல் போனது.
இதன் விளைவாக, முஸ்லிம்கள் தங்களின் இயல்போடு பொதுச் சமூகத்தில் புழங்கும்போது, ஒருவித அந்நியத்தன்மையுடனேயே பார்க்கப்படுகிறார்கள்.
இந்த அந்நியப் பார்வை, “நாம் இந்தச் சமூகத்தில் என்னவாக இருக்கிறோம்? நமக்கான இடம் என்ன?” என்ற கேள்வியை முஸ்லிம்களின் மனதில் ஆழமாக விதைக்கிறது.
இந்த உளவியல் அழுத்தத்திலிருந்து தமிழ் முஸ்லிம்களை விடுவிக்கும் புள்ளியில்தான் மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஹபீபி’ முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சமூகத்தில் தங்களுக்கான இருப்பைப் பேசும் குரலை இப்படம் முஸ்லிம்களுக்குக் கொடுப்பதாக உணர்கிறேன்.
தறிகளின் சத்தம்… பிரிவின் துயரம்…
‘ஹபீபி’ திரைப்படம் 1980களின் கடையநல்லூர் பின்னணியில் நெசவுச் சமூகத்தின் வாழ்வியலையும், வளைகுடா நாடுகளின் எழுச்சியால் ஏற்பட்ட இடப்பெயர்வையும் மையமாகக் கொண்டது.
எழுத்தாளர் வி.எஸ். முஹம்மத் அமீன் எழுதிய ‘நெய்தல்’ எனும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் திரைப்படம், பொருளாதாரத் தேவைக்காகப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காமல் வளைகுடா நாடுகளுக்குச் சென்று, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தாங்கிப் பிடித்த முந்தைய தலைமுறையின் உழைப்பையும் தியாகத்தையும் பேசுகிறது.
திருமணமாகி ஒரே மாதத்தில் வெளிநாடு சென்று, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 நாட்கள் மட்டுமே விடுமுறையில் வரும் கணவன்மார்கள்; தந்தையின் முகம் அறியாது வளரும் இரண்டு வயதுக் குழந்தைகள் எனப் பிரிவின் துயரத்தைச் சுமக்கும் வாழ்க்கை அது.
முந்தைய தலைமுறை சிந்திய வேர்வையின் வழியே அடுத்த தலைமுறை பொறியியல் படித்து, நல்ல ஊதியத்தில் வெளிநாடு சென்றாலும், தலைமுறைகள் கடந்தும் தொடரும் அந்தப் பிரிவின் ஆசாபாச இழப்புகளையே ‘ஹபீபி’ தன் கதையின் அச்சாணியாக மாற்றியுள்ளது.
சொல்லப்போனால், ஹபீபி காதல் கதையோ, குடும்பக் கதையோ அல்ல, முஸ்லிம் மக்களின் வாழ்வியலேயே இங்கு கதையாகிறது.
ஆன்மாவை இழக்காத திரைமொழி
‘ஹபீபி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தபோது படம் நன்றாக இருக்குமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. அப்போது என் நண்பரிடம் சொன்னேன்: “இன்று தலித் வாழ்வியலை ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் பதிவு செய்கிறார்கள். ஏனையோரும் ரசிக்கும்படியான சிறந்த திரைமொழியில் அதைக் காட்சிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த ட்ரெய்லரைப் பார்த்தபோது இப்படத்தில் அத்தகைய சினிமா அனுபவம் கிடைக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.”
ஆனால், திரையரங்கில் படத்தை முழுமையாகப் பார்த்தபோது என்னுடைய முன்முடிவு தவறு என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு. அந்த இயல்பை அதன் தனித்துவத்துடன் காட்சிப்படுத்துவதே முக்கியம். சினிமா உணர்வைக் கொடுப்பதற்காக, ஏற்கெனவே பழகிப்போன வணிகத் திரைமொழிக்குள் அதை அடைக்கும்போது அதன் தனித்தன்மை இழந்துவிடுவதற்கான அபாயம் உள்ளது.
வெகுஜன மக்களைச் சென்றடைவதற்காகச் செயற்கையான சினிமாத்தனங்களைச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை; ஒவ்வொரு சமூகமும் என்ன இயல்பில் இருக்கிறதோ, அந்த ஆன்மாவை அதன் அழகியலோடு காட்சிப்படுத்தினாலே போதுமானது என்பதை மீரா கதிரவனின் இயக்கம் உணர்த்துகிறது.
கூட்டு அடையாளத்தின் அங்கீகாரம்
இஸ்லாமிய மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த பல கூறுகள் இப்படத்தில் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. வெளிநாடு செல்வதற்காகப் பெட்டி கட்டும் உணர்ச்சித் தருணங்கள், சிறுவர்களுக்கு சுன்னத் செய்வது, அதிகாலை மதராஸா செல்லும் குழந்தைகள், அவர்களின் பிரத்யேக மொழி வழக்கு, அந்தரங்கப் பிரார்த்தனைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாடும், கூட்டு அடையாளமும் அச்சு அசலாக இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
படத்தின் தொடக்கக் காட்சியிலேயே ஒலிக்கும் தாலாட்டுப் பாடலைக் கேட்டபோது, என்னை அறியாமல் கண்ணீர் துளிர்த்தது. அதுநாள் வரை பிற சமூகத் தாலாட்டுகளையே கேட்டுப் பழகிய திரையில், முதன்முறையாக ஓர் இஸ்லாமியத் தாலாட்டைக் கேட்டது நெஞ்சை நெகிழச் செய்தது.
திரையரங்கில் எனக்கு அருகில் இருந்த பலரின் கண்களிலும் நீர் துளிர்த்ததைக் கண்டேன். அவை வெறும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என்பதால் ஏற்பட்ட கண்ணீர் அல்ல. ஒரு சிறுபான்மைச் சமூகம் தன் வாழ்வியலைத் திரையில் அசல் தன்மையோடு பார்க்கும்போது ஏற்படும் நெகிழ்ச்சி அது. தங்களின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டதன் வெளிப்பாடு அது. “நாமும், நமது கலாச்சாரமும், நமது தாலாட்டும் இந்த மண்ணின் அங்கம்தான்” என்ற ஆழமான பிடிமானத்தை அந்தப் படம் அவர்களின் கலாச்சார அடையாளத்துக்கு வழங்குகிறது.
படத்தின் கதையோட்டத்தில் சில பிரச்சினைகள் உண்டு. குறிப்பாக இரண்டாம் பாதியில் கதை தடுமாறுவதை உணர முடியும். ஆனால், இந்தத் திரைப்படம் இந்தக் குறைகளைத் தாண்டி அணுகப்பட வேண்டிய ஒன்று.
தமிழ் சினிமா வரலாற்றில், தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை அதன் ஆன்மாவோடு பதிவு செய்து, அவர்களுக்குப் வெகுஜனத் தளத்தில் தங்களது இருப்பைப் பேசும் ஒரு கலாச்சாரபூர்வமான குரலை கொடுத்த வகையில், மீரா கதிரவனின் ‘ஹபீபி’ ஒரு மைல்கல் திரைப்படம் மட்டுமல்ல; அது மிக முக்கியமான ஒரு சமூக-அரசியல் செயல்பாடும்கூட!
முகம்மது ரியாஸ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











