கேள்வி: இந்த நவீன அறிவியல் யுகத்தில் இனிமேலும் புதிய மதங்கள் தோன்றி பெரும்பாலான மக்களை ஆட்கொள்ளுமா?
– சத்யன் கோபிநாதன்
அன்புள்ள சத்தியன் கோபிநாதன்,
புதிய மதங்கள் தோன்றுவதை பார்ப்பதற்கு முன்னால் இருக்கின்ற மதங்களின் நிலவரத்தை பார்ப்போம். பொதுவான புள்ளிவிவரங்களின்படி உலக மக்கள் தொகையில் கிறித்தவ மதத்தை சார்ந்தோர் 33%, முஸ்லீம்கள் 24%, இந்துக்கள் 16%, புத்த மதத்தினர் 7%, நாட்டுப்புற மதங்களை சார்ந்தோர் 6 சதவீதமாகவும் இருக்கின்றனர். மதம் சாராதோர் 16% பேர் இருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரம் தோராயமானது தான்.
உலக மக்கள் தொகையில் மதரீதியான இந்த விகித்தை வைத்து எதிர்காலத்தில் எந்த மதம் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்று பலர் கணிக்கின்றனர். அமெரிக்கா தோற்றுவித்த இசுலாமிய பயங்கரவாதம் எனும் வகையினத்திற்கு பின்னர் முசுலீம்கள் குறித்த கட்டுக்கதைகள் அதிகம் பரப்பப்படுகிறது. அதன் பொருட்டு முசுலீம் மதத்தினர் எதிர்காலத்தில் அதிகரித்தால் என்ன செய்வது என்ற ‘பயத்தில்’ மேற்கண்ட ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம் இசுலாமிய மதவாதம் பேசுவோர் தங்களது மதம் பரவுகிறது என்ற கோணத்தில் அதை பெரிதுபடுத்துகின்றனர்.
கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவோர் வளர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் இஸ்லாம் வளரும் நாடுகளில் இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவாகவும், வளரும் நாடுகளில் அதிகமாக இருப்பதால் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் 2050 ஆம் ஆண்டில் முதல் இடத்திற்கு வருவார்கள் என்று குத்து மதிப்பாக கணிக்கிறார்கள் அல்லது ‘எச்சரிக்கை’ செய்கிறார்கள்.
அதே நேரம் அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மக்கள் மரித்துப் போவது வளரும் நாடுகளில் அதிகம் என்பதால் இந்த முன்கணிப்பு வரம்பிற்குட்பட்டதே எனவும் சொல்கிறார்கள்.
ஏனெனில், வளருகின்ற நாடுகள் பிரிவில்தான் ஈராக், பாலஸ்தீனம், சிரியா லெபனான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கே கடந்த 30 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். மாறாக, வளர்ந்த மேற்குலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் அப்படி மரிப்பதில்லை. கல்வியறிவு காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பும் குறைவாக இருக்கிறது.
பின்தங்கிய பொருளாதாரம், கல்வியறிவு இன்மை, வேலையின்மை காரணமாக ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகமாக இருக்கிறது. கூடவே இந்நாடுகளில் பிரசவ கால மரணங்களும், குழந்தை மரணங்களும், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகளும் அதிகம்.
நீங்கள் குறிப்பிடும் நவீன அறிவியல் யுகம் என்பதை அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் காலம் என வைத்துக் கொள்ளலாம். அதன்படி தொழிற்சாலைகளில் தானியங்கி உற்பத்தி முறையும் செயற்கை நுண்ணறிவும் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் இணையதளங்கள் சமூக வலைதளங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகின்றன. மக்களிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களும் மேற்கண்ட இணைய வகைப்பட்ட வழியிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றன.
அமெரிக்க தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் எப்படிப் பணியாற்றியது என்பதறிவோம். சமூக வலைத்தளங்களின் மூலம் சரியான கருத்துக்களைவிட தவறான கருத்துக்களை அதிக வேகத்தில் பரவச் செய்ய முடியும். இந்தியாவில் வாட்ஸ் அப் வதந்திகள் மூலமாக கும்பல் கொலைகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. முந்தைய காலத்தில் பார்ப்பனிய சமூக அமைப்பின் படிநிலை காரணமாக இந்த கும்பல் கொலைகள் நடந்தன.
மேலும் ஒரு நாட்டில் இருக்கும் ஆளும்வர்க்கத்தின் அரசியலை எதிர்த்துப் போராடும் முற்போக்கு அரசியலை விட பிற்போக்கு அரசியல் வளர்வதற்கு இந்த நவீன யுகம் அதிகம் பயன்படுகிறது. அது மதம், சாதி, இனம் என தலை எடுத்து வருகின்றது. அரசியலில் மட்டுமல்ல மருத்துவம், உடல்நலம், தொழில்துறை, இயற்கை, சூழலியல், கல்வி என பல துறைகளிலும் முற்போக்கு மற்றும் பிற்போக்கு கருத்துக்கள் மக்களிடையே செல்கின்றன. ஆயினும் வாழ்க்கைப் பிரச்சினை காரணமாக மாற்றுக்களை தேடி ஓடும் மக்களை திசை திருப்புவதற்கு பிற்போக்கு கருத்துக்கள் கணிசமாக பயன்படுகின்றன.
நிறுவனமயமான மதங்களின் பணிகள் பல காலாவதியாகி வரும் நிலையில் மதங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நடக்கின்றன. ஒரு மதத்திற்குள்ளேயே பழைய ஆதீனங்கள் பழைய மடங்கள் பழைய சிந்தனைகள் காலாவதியாகி புதிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. சங்கர மடம் பழைய மரபு என்றால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ், பாபா ராம்தேவ் போன்றோர் புதிய ஆதினங்களாய் தலையெடுத்து பன்னாட்டு நிறுவனங்களைப் போல சந்தைப்படுத்துகின்றனர்.
சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு அமெரிக்கா உதவியுடன் சவுதி அரேபியா தோற்றுவித்த வகாபிய முசுலீம் கடுங்கோட்பாட்டு வாதம் இன்று பல நாடுகளில் பல குழுக்களை தோற்றுவித்திருக்கிறது. நம்மூர் தவ்ஹீத் ஜமாஅத் முதல் பாரசீகத்தில் மக்களை பாடுபடுத்தும் ஐ.எஸ். வரை அத்தகைய குழுக்கள் இன்னமும் செல்வாக்கோடு இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் பெந்தகோஸ்தே வகையிலான கடுங்கோட்பாட்டு குழுக்கள் வளரும் நாடுகளில் பிரபலமாகி வருகின்றனர். பெந்தகோஸ்தே மற்றும் பல்வேறு பிற்போக்கு மதக்குழுக்கள் அமெரிக்காவிலும் பிரபலம். இவர்களன்றி அந்தந்த மரபு சார்ந்து இயற்கை, சுகாதாரம், மனநலம் பேசும் குழுவினரும் புதிய மதங்கள் போல இருக்கின்றனர். சான்றாக தமிழகத்தில் ஹீலர் பாஸ்கர்.
90களின் தீவிரமான உலகமயத்திற்கு பின்னர் உலகில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. சுவாசிக்கும் காற்று முதல், தூக்கி எறியப்படும் வேலை முதல் அன்றாடம் பிரச்சினைகள் வரிசை கட்டி வீட்டுக் கதவை தட்டி வருகின்றன. அடிப்படை சமூக மாற்றம் என்பது மக்களின் கண்ணுக்கு எட்டிய வரை இல்லாத போது அவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இத்தகைய புதிய அப்போஸ்தலர்களை நாடிப் போகின்றனர். ஒரு அப்போஸ்தலர் காலாவதியானால் புதியவர் உடன் வருகிறார். பழையை வெர்சனை மேம்படுத்தி அதற்கடுத்த வெர்சன் வரும் வரை இவர் இருப்பார்.
முதல் உலகப் போர் தோற்றுவித்த பெரும் அழிவு, உயிர்ப்பலிக்கு பிறகு உலக மக்களின் நம்பிக்கையின்மை அதிகரித்தது. அதன் வழியில் புதுப்புது சித்தாந்தங்கள், கலை முயற்சிகள் அனைத்தும் மக்களின் விரக்திக்கு வடிகாலைத் தேடின. நேரெதிராக ரசியாவில் கம்யூனிஸ்டுகள் நடத்திய புரட்சி நேர்மறையில் உலக மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்குலகில் முதலாளித்துவதற்கு தீர்வு என பல்வேறு “கல்ட்” எனப்படும் தீவிர வழிபாட்டுக் குழுக்கள் உருவாகின. 1960-களில் உலக அளவில் தோன்றிய முதலாளித்துவ நெருக்கடிக்கு பிறகு இத்தகைய முயற்சிகள் கொஞ்சம் நடைமுறைக்கு முயன்றன. இயற்கையை ஆராதிப்பது, இயற்கை சாகசம், ஹிப்பிக்கள், ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என இவர்கள் விதவிதமாக தோன்றினார்கள். அதே காலகட்டத்தில் ஓஷோ ரஜ்னீஷை நோக்கி மேற்குலகினர் நாடி வந்தனர்.
எனினும், இந்த பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. கற்பனையான தீர்வுகளும், கனவில் முன்வைக்கப்படும் ஆசைகளும் மண்ணில் வெகுகாலம் நீடித்திருப்பதில்லை. இன்றைக்கு உலகமயம் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மேற்குலகை நோக்கி அகதிகளாய் பெரும் எண்ணிக்கையில் ஓடுகின்றனர். மேற்குலகிலோ வேலை வாய்ப்பு இன்மை, விலை வாசி உயர்வு, நலத்திட்டங்கள் பறிப்பு என நடுத்தர மக்களும் போராடுகின்றனர்.
படிக்க:
♦ கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
♦ தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?
புதிய அப்போஸ்தலர்களின் பலம் என்ன? வாழ்க்கைப் பிரச்சினைகளை விரிவாக விளக்கி அதற்கு ஒரு தீர்வு இருப்பதாக கற்பனையில் நம்ப வைக்கிறார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது இசுலாத்திற்கு விரோதமானது இல்லை என ஜைனுலாபிதீன் சுற்றி வளைத்து சொல்வார். விலைவாசி உயர்வுக்கு எதிராகவோ, பரீட்சையில் தேர்வாகவோ ஆண்டவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்களென நாலுமாவடி லாசாரஸ் கூறுகிறார். இந்து மத நவீன சாமியார்களோ யோகம், தியானம், வாழ்வியல் கலை என வேறு கற்பனை உலகத்தை முன்வைக்கின்றனர்.
முற்போக்கு அரசியல் முகாம் செய்கின்ற பிரச்சாரத்தை விட இவர்களது பிரச்சாரம் வலுவாக இருக்கிறது. காரணம் முற்போக்கு அரசியல் முகாம் உண்மையான தீர்வுகளை முன்வைப்பதால் அவை உடனுக்குடன் ஆத்ம சாந்தியை அளிப்பதில்லை. அப்போஸ்தலர்களோ இன்ஸ்டன்ட் தீர்வினை மனதில் காட்டுகிறார்கள்.
பெந்தகோஸ்தே பாதிரியார்கள் நள்ளிரவில் கண்ணீர் விட்டு அழுமாறும், முஸ்லிம்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் விடுதலையை தேடுமாறும், இந்து மத சாமியார்களோ கர்மவினை விதியை காட்டி கடமையை செய்யுமாறும் கோருகிறார்கள்.
இதனாலேயே இந்த புதிய இறைத்தூதர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தழைத்தோங்குவது சாத்தியமில்லை. வாழ்க்கைச் சிக்கலே மதத்தை நோக்கி ஓடவைக்கிறது. வாழ்வியல் வரம்புகளுக்குட்பட்டதே மதத்திற்கான இடம். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தொழிலாளி புனிதப்பயணம் என்பதற்காக மெக்காவிற்கோ வாடிகன் நகரத்திகோ காசி ராமேஸ்வரத்திற்கோ சென்று விட முடியாது.
தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைப் பிரச்சனைகள் முற்றும் போது மக்கள் இரண்டில் ஒன்று பார்ப்போம் என போராடுகிறார்கள். இன்று பிரான்சில் நடக்கும் மஞ்சள் சட்டை போராட்டம் அத்தகையதுதான். பூலோக சொர்க்கமாக கருதப்படும் அமெரிக்காவில் கூட முதலாளித்துவம் ஒழிக என வால்வீதியிலேயே முழங்குகிறார்கள் மக்கள். அத்தகைய நேரங்களில் எவரும் தேவாலயங்களை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்
இஸ்லாம் ஒன்றே இறுதி மார்க்கம்
Sorry “சாதிக் பாஷா ஆவி , you are not a muslim.