கூட்டத்தில் தனது கட்டுச் சோற்றை அவிழ்த்துள்ளார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். அதில் மொத்த மேற்குலகமும் நாறிவிட்டது. அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசர், அங்கு வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது வகாபி அடிப்படைவாதத்தின் பரவல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள இளவரசர், பனிப் போர் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சோவியத் ரசியாவை எதிர் கொள்வதற்காக வகாபியத்துக்கு சவுதி நிதி உதவி அளித்தது என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.

வகாபி அடிப்படைவாதம் என்பது அமெரிக்காவின் கள்ளக் குழந்தை என்பதை முன்பே சில கட்டுரைகளில் நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். எனினும், “கரட்டாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவருக்கு தும்மல் வந்தாலும் இவர்கள் (வினவு) அதில் அமெரிக்க சி.ஐ.ஏ சதியை தேடிக் கொண்டிருப்பார்கள்” என்கிற ரீதியில் சங்கிகள் அக்கட்டுரைகளின் மறுமொழிகளில் பொங்கியிருந்தனர். உண்மையில் வகாபி அடிப்படைவாதத்தை தாமே உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் கார்ட்டரின் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்த ப்ரெசென்ஸ்கி (Zbigniew Brzezinski) ஒப்புக் கொண்டிருக்கிறார்.

1998-ம் ஆண்டு ப்ரெசென்ஸ்கி அளித்த பேட்டி ஒன்றில் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிராக முஜாஹித்தீன்கள் போரிட அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களில் ஒன்றுதான் வகாபி அடிப்படைவாதக் கோட்பாடு என்பதைக் குறிப்பிட்டிருந்தார். சொல்லப் போனால் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் யூனியனை ஆப்கான் விவகாரத்தில் கால் வைக்க தூண்டில் போட்டதும், அதன்படி ஆப்கானில் நுழைந்த சோவியத் படைகளுக்கு எதிராக முஜாஹிதீன்களை தயாரிக்கும் திட்டமும் அமெரிக்காவால் மிக கவனமாக தீட்டப்பட்டதை ப்ரெசென்ஸ்கி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக்குடன் இணைந்து சோவியத் எதிர்ப்புப் போராளிகளை இசுலாமியமயமாக்கும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தியது. இதற்காக முஜாஹிதீன் போராளிகளுக்கு பாகிஸ்தான் மதரஸாக்களில் மதக் கல்வி அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் திட்டம் வெற்றியடைந்தாலும், அதன் பின்விளைவாக ஆப்கான் என்கிற நாடே சீர்குலைந்து போனது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட வகாபி தத்துவங்களின் அடிப்படையில் அந்த நாட்டின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட முஜாஹிதீன்கள், ஷரியா சட்டங்களை அமல்படுத்தி பெண்களின் உரிமைகளை நசுக்கி அழித்தனர்.

என்னதான் அமெரிக்காவின் கள்ளக் குழந்தையாகத் தோன்றியிருந்தாலும், தான் வளர்ந்த பிற்போக்கான நிலவுடைமைக் கலாச்சார சூழல் மற்றும் அதன் சித்தாந்தக் கண்ணோட்டம் வகாபியத்தை தன் போக்கில் வளர்த்துச் செல்லத் துவங்கியது. ஒரு கட்டத்தில் – அதாவது சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் – வகாபியத்தை அதற்கு மேலும் வழிநடத்த வேண்டிய தேவையில் இருந்து கை கழுவிக் கொண்டது அமெரிக்கா. தொடர்ந்த பத்தாண்டுகளில் சுயேச்சையாக வளர்ந்த வகாபியம் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள மேற்கத்திய லிபரல் கலாச்சாரத்திற்கு எதிரானக் கூறுகளை வரித்துக் கொண்டது. இதன் போக்கில், மேற்குலகை எதிர்க்கும் அரசியலுக்கு வந்து சேர்ந்தது. இதன் தொடர் விளைவு இரட்டை கோபுரத் தகர்ப்பாக அமெரிக்காவின் தலைமீதே விடிந்தது.

இரட்டை கோபுரத் தகர்ப்பை தனது உலக வல்லாதிக்கத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. செப்டெம்பர் 11 நிகழ்வைத் தொடர்ந்து எண்ணை வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள தானே உருவாக்கிய – தனக்கே எதிராக கிளம்பிய – அதே வகாபி பயங்கரவாதப் பூச்சாண்டியைப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஈராக் ஆக்கிரமிப்பு, ஆப்கான் ஆக்கிரமிப்பு துவங்கி தற்போது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் வரை “இசுலாமிய பயங்கரவாதமே” அமெரிக்காவின் ஆதிக்கப் போர்களின் திரைக்கதையில் மிக முக்கிய பாத்திரமாற்றி வருகின்றது.

படிக்க:
அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்
இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ?

இந்தச் சூழல் மற்றும் பின்னணியில்தான் சவுதி இளவரசரின் பேட்டியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பக்கம் தனது தந்தையும், தற்போதைய மன்னருமான சல்மானை விட தன்னை லிபரலாக காட்டிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறார் இளவரசர் முகமது. அதே சமயம், சவுதியின் வெளியுறவுக் கொள்கையை கடந்த நான்கு பத்தாண்டுகளாக தீர்மானித்துக் கொண்டிருக்கும் வகாபி அடிப்படைவாதம் என்கிற வேண்டாத சுமையையும் சுமக்க வேண்டியுள்ளது. என்னதான் லிபரலாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், இவர் அப்பனுக்குத் தப்பாத சர்வாதிகாரி என்பதை கஸோகி கொலை விவகாரம் அம்பலப்படுத்திக் காட்டியது.

வினவு செய்திப் பிரிவு

எனவே லிபரல் சர்வாதிகாரியாக உருவாகி வரும் முகமது பின் சல்மான், வகாபி பாவத்தில் தங்களுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பங்கு இருப்பதைக் குறித்து பேசுவதன் மூலம் மேற்குலகிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது, கசோகி கொலை உள்ளிட்ட தனது சர்வாதிகார நடவடிக்கைகளைக்  கண்டு கொள்ளாமல் விட்டால், ”நாகரீக” மேற்குலகின் அழுக்குகளும் வெளியாகாமல் இருக்கும் என்பதே அது.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

3 மறுமொழிகள்

  1. தன்னோட தோட்டத்துல உள்ள எலிய ஒழிக்க பாம்பு வளர்ப்பது போன்றது. ஆனா, பாம்போட தன்மை, அதுகிட்ட ஏற்கனவே உள்ளது. வகாபியத்தை வளர்த்தது வேண்டுமானால் மேற்குலகாக இருக்கலாம். அதன் அடிப்படை இஸ்லாம்தான். அத பேசற தைரியம் சங்கிய தவிற வேற எவனுக்கும் இருந்ததா தெரியல. அறிவு நேர்மைன்னு பெணாத்தற திராவிட கம்யூனிஸ்ட்டு களவாணிங்க மூச்சுக்கூட விட மாட்டாங்க. அதனாலதான் சங்கியும் இருக்கட்டும்னு மக்களே நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க