“நாங்கள் தொழிலாளிகள். எங்கள் நாடான ஹோண்டுராசில் தொழில்களே இல்லை எனும் போது நாங்கள் மட்டும் அங்கே இருந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்?”  என்கிறார் 21 வயதேயான எவின் மாதா. மூன்று மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வந்த எவின் மாதா நாடு கடத்தப்பட்டார். ஹொண்டுராசைச் சேர்ந்த எவின், போதுமான ஆவணங்கள் அல்லது கடவுச் சீட்டு இல்லாமல் அமெரிக்காவில் பணியாற்றி வந்தவர்.

எவின் மாதாவைப் போல் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவிலிருந்து குடியேற்றத் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை வந்தேறிகள் பறித்துக் கொள்வதாக குற்றம் சாட்டியதோடு, இசுலாமிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வேலைகளுக்காக அமெரிக்கா வரும் தொழிலாளர்களுக்கான நடைமுறையைக் கடுமையாக்கினார்.

இதைத் தொடர்ந்து திடீர் திடீரென பணியிடங்களில் போலீசார் சோதனைகள் நடத்தி கொத்துக் கொத்தாக குடியேற்றத் தொழிலாளர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். ”பிடிபட்ட” தொழிலாளர்கள் பலரின் குடும்பங்களும் குழந்தைகளும் இன்னமும் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அவர்களின் நிலைமை என்னவென்பதைக் கூட அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு ஹொண்டுராசைச் சேர்ந்த வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் தற்போது ஒரு மாபெரும் பேரணியாகத் திரண்டு அமெரிக்காவுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மேற்கொண்டிருக்கும் அந்த நீண்ட நடை பயணம் ஹோண்டுராசில் துவங்கி கௌதமாலா நாட்டையும், மெக்சிகோவையும் கடந்து அமெரிக்க எல்லையைத் தொட வேண்டும். அதன் பின்னர் எல்லையைக் கடந்து அமெரிக்க மண்ணுக்குள் நுழைவது தொழிலாளர்களின் திட்டம். ஹொண்டுராசின் எல்லைப் புற நகரமான சான் பெட்ரோ சூலோவில் இருந்து அமெரிக்காவின் தெற்கெல்லை நகரமான எல் பசோ வரையிலுமான தொலைவு சுமார் 3500 கிலோ மீட்டர்கள். ஒரு புரிதலுக்காக – காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து கண்யாகுமரி வரையிலான தொலைவும் ஏறத்தாழ 3500 கிலோ மீட்டர்கள் தான். இந்த தொலைவை அந்த மக்கள் நடந்தே கடப்பதென முடிவு செய்து தற்போது கௌதமாலாவைக் கடந்து மெக்சிகோவினுள் நுழைந்துள்ளனர்.

ஏன் தொழிலாளிகள் இந்த தொலைவை நடந்து கடப்பதென முடிவு செய்தனர்?

முதலில் இவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவினுள் நுழைய டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார். சட்டவிரோத மாஃபியாக்களின் உதவியோடு அமெரிக்க எல்லைகளுக்குள் நுழைவதிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. மாஃபியாக்களுக்கு பலநூறு டாலர்களைக் கொடுக்க வேண்டும் – இதற்குப் பெரும்பாலானவர்களிடம் பணம் இருப்பதில்லை. அடுத்து, அப்படியே மாஃபியாக்களின் உதவியோடு எல்லையைக் கடந்தால் அமெரிக்க எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்படும் அபாயமும் உண்டு.

நடைபயணத்தின் மூலம் அமெரிக்க எல்லையைக் கடக்கும் போதும் பிடிபடும் அபாயம் இருக்கிறதே?

”அவர்கள் இராணுவத்தை எல்லைக்கு அனுப்பப் போவதாகவும், எங்களை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்” என்று குறிப்பிடும் ஜோப் ரேய்ஸ், என்றாலும் வேறு வழியில்லை என்கிறார். தனது குழந்தைப் பருவம் முதல் அமெரிக்காவில் வளர்ந்த ஜோப் ரேய்ஸ், தனது 36 வது வயதில் நாடுகடத்தப்பட்டார். அவரது கடவுச் சீட்டு காலாவதியான பின் 14 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த நாடான கௌதமாலா திரும்பியவருக்கு கால் சென்டர் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. மாதம் ஐநூறு டாலர்கள் சம்பளம் போதவில்லை என்பதோடு, ஒவ்வொரு முறை அமெரிக்காவில் இருந்து கால் செண்டருக்கு அழைப்பு வரும் போதும் திரையில் தெரியும் அமெரிக்க நகரின் பெயர்கள் அவருக்கு அவரது பழைய நல்ல வாழ்க்கையை நினைவூட்டியுள்ளது.

படிக்க:
ஹாலிவுட் காமெராவும் அமெரிக்க பீரங்கியும் !
உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!

இனிமையான பழைய நினைவுகளுக்காகவும் சொகுசான வாழ்க்கையைத் தேடியும் மட்டும் மீண்டும் அமெரிக்கா செல்ல பெரும்பாலானோர் முடிவு செய்யவில்லை. 34 வயதான நெஸ்டர் ரேய்சின் மனைவியும் குழந்தையும் இன்னமும் அமெரிக்காவின் ஓஹையோ நகரில் இருக்கிறார்கள். அந்தோனி பியெண்டெசின் குடும்பம் அலபாமாவில் உள்ளது. இன்னும் பலரின் குடும்பங்களும் குழந்தைகளும் அமெரிக்காவில் இருக்கின்றனர். எப்படியும் தங்கள் குடும்பத்தோடு போய் இணைந்து கொள்ள இந்தப் பேரணியில் கலந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதே பலரின் ஏக்கமாய் உள்ளது.

அந்தோணி ஏற்கனவே ஆறு முறை நாடு கடத்தப்பட்டவர். “அதெல்லாம் அப்படித்தான்… அவர்கள் உங்களைப் பிடித்து வெளியே தூக்கி எறிவார்கள்.. நீங்கள் மீண்டும் எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும்” என்கிறார் அந்தோணி. பெரும்பாலும் அமெரிக்காவின் தெற்கு எல்லையைக் கடப்பவர்கள் ஆபத்தான ஆற்று நீர்வழிப் பாதையின் ஊடாகவோ, எல்லையில் பரந்து விரிந்திருக்கும் பாலைவனத்தின் ஊடாகவோ அமெரிக்காவினுள் நுழைகின்றனர்.

இவ்வாறு கடும் சிரமங்களுக்கு இடையில் அமெரிக்காவுக்கு வரும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே அந்நாட்டின் இயக்கத்திற்கு இன்றியமையாத அடிப்படைத் தொழில்களிலும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, அமெரிக்காவை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆர்வமோ கிடையாது – வயிறு நிரம்பும் அளவுக்கு கூலி தரும் ஏதாவது ஒரு வேலை. ஆனால், டொனால்ட் டிரம்ப் இவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்கிறார். இவர்களால் தான் அமெரிக்கர்களின் வாழ்க்கையே நாசமானது என்கிறார். டிரம்பின் இந்த விளக்கத்தின் படி பார்த்தால் இன்றைய அமெரிக்க மக்கள் தொகையில் கணிசமான பகுதியினரை ஐரோப்பாவுக்கே நாடு கடத்த வேண்டியிருக்கும். பூர்வகுடி செவ்விந்தியர்களின் பூமியை ஐரோப்பிய குடியேறிகள் ஆக்கிரமித்து உருவாக்கியதே நவீன அமெரிக்கா. சொல்லப் போனால் அன்றைய ஐரோப்பிய குடியேறிகளைப் போல் லத்தீன் அமெரிக்க குடியேறிகளால் உள்ளூர் மக்களின் உயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.

நீயும் வெளியேறு…! வாய்ப்பிருந்தால் மீண்டும் வரலாம். – பிரான்சு நாடு அன்பளிப்பாக தந்த சுதந்திரதேவி சிலைக்கும் இதுதான் கதி!

என்றாலும் டொனால்ட் டிரம்பின் அரசியல் “குடியேறிகளையே” சுற்றி வருகின்றது. தனது தேர்தல் பரப்புரைகளின் போது அமெரிக்க தொழிலாளிகளுக்கு ஒரு பொன்னுலகைப் படைத்துக் கொடுப்பதாக டிரம்ப் வாக்களித்து வெற்றி பெற்று ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் மீண்டும் தேர்தல் வரவுள்ளது. ஆனால், இன்று வரை டிரம்ப் வாக்களித்ததைப் போல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. மேலும், வெளிநாடுகளில் உற்பத்தி ஆலைகள் நடத்தும் பெரும் கார்ப்பரேட்டுகளையும் பகைத்துக் கொள்ள முடியவில்லை. அதே போல் சீன இறக்குமதியின் மீது கட்டுப்பாடு விதிக்க முயன்றால் அது சர்வதேச வர்த்தகப் போராக விடித்துள்ளது. இந்நிலையில் டிரம்புக்கு கிடைத்திருக்கும் எளிய தாக்குதல் இலக்காக இருப்பவர்கள் குடியேற்றத் தொழிலாளர்கள் தாம். எனவே தான் அவர்களை ஒடுக்குவதன் மூலம் தனக்கு வாக்களித்த குறுகிய தேசிய வெறி கொண்டவர்களை சமாதானம் செய்யப் பார்க்கிறார்.

அனால், தொழிலாளர்களுக்கோ சொந்த தேசமோ, எல்லைகளோ, தேச பக்தியோ இல்லை என்பதையே அணிவகுத்து வரும் லத்தீன் அமெரிக்கத் தொழிலாளிகள் உணர்த்துகின்றனர்.

1 மறுமொழி

  1. இவர்கள் ஏன் தொழிலாளர்களின் பொதுவுடமை பாதுகாவலர்களான ரஷ்யாவுக்கோ அல்லது சீனாவுக்கோ போககூடாதா? அமெரிக்காதான் பாசிச, நாசிச, முதலாளித்துவ நாடாயிற்றே! வினவு இந்த ஹோண்டுராஸ் தொழிலாளிகளை தங்கள் தோழர் நாடுகளுக்கு போக சொல்லி அறிவுறுத்தாதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க