ஹாலிவுட் பணம் சம்பாதிப்பதற்கு அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன், உதவுகிறது. பதிலுக்கு, அமெரிக்காவின் கொடூரமான இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்கிறது ஹாலிவுட்.

இந்த கூட்டணியின் தயவில் முதல் படம் 1927 -ம் ஆண்டு வெளிவந்த “விங்ஸ்” (Wings). இது ஒரு விருது பெற்ற திரைப்படம். அன்று முதல் அமெரிக்க இராணுவம், ஹாலிவுட்டைப் பயன்படுத்தி தனது இழிபெயரைக் காப்பாற்றும் விதமாக 1800 திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது. பதிலுக்கு ஹாலிவுட் அமெரிக்க இராணுவத்தின் போர்த் தளவாடங்களை திரைப்படத்தில் பயன்படுத்தி பெரும் பணத்தை ஈட்டியிருக்கிறது.

“லோன் சர்வைவர், கேப்டன் பிலிப்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், மார்வெல் – டிசி – எக்ஸ் மேன் சூப்பர் ஹீரோ வரிசைப் படங்கள் (‘Lone Survivor,’ ‘Captain Philips,’ ‘Transformers’ and Marvel DC and X-Men) அனைத்து படங்களிலும் அமெரிக்க இராணுவத்தின் தளவாடங்களை பயன்படுத்துவதற்கு பென்டகன் சம்மதித்திருக்கிறது. பதிலுக்கு இராணுவத்திற்கு ஒளிவட்டம் போட ஹாலிவுட் சம்மதித்திருக்கின்றது. இவையெல்லாம் சமீபத்திய சான்றுகள்.

ஹாலிவுட் இராணுவ சாகசப்படம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

அமெரிக்க அரசு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு, ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இராணுவத்துடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். அதன்படி இராணுவம்தான் திரைக்கதையின் இறுதி வடிவத்தை அங்கீகரிக்க வேண்டும். பதிலுக்கு பல கோடி கோடி டாலர் செலவு பிடிக்கும் அமெரிக்க இராணுவத் தளவாடங்களை பயன்படுத்துவதற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் படம் பிடிப்பதற்கும் தயாரிப்பாளர்களுக்கு அமெரிக்க இராணுவம் உதவும்.

“எங்களை சிறுமைப்படுத்தும் எதையும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம்” என கடற்படையின் தகவல் தொடர்பு இயக்குநர் கேப்டன் ரஸ்ஸல் கூன்ஸ், வெளிப்படையாகவே அல்ஜசீரா தொலைக்காட்சியிடம் தெரிவிக்கிறார்.

“நாங்கள் கூறும் திரைக்கதை திருத்தங்களை தயாரிப்பாளர்கள் ஏற்கும் பட்சத்தில் அவர்களோடு ஒப்பந்தம் போடுவோம். இல்லை என்றால் அவர்கள் தமது சொந்த படத்தை சுதந்திரமாக எடுக்கலாம் – எங்களது இராணுவ தளவாட உதவி இல்லாமல்!” என்கிறார் ஹாலிவுட்டோடு பேச்சுவார்த்தை நடத்தும் இராணுவப்பிரிவின் தலைவர் பில் ஸ்ட்ரப்.

அதாவது நாட்டுமக்களின் பணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது நலனுக்கு பயன்படுத்துவதாகவும் இதைச் சொல்லலாம். ஒரு படத்தில் ஆபாசம் இருக்கிறதா, உண்மையா – பொய்யா, கலைப்பூர்வமான வெளிப்பாடு… இவையெல்லாம் இராணுவத்தின் அக்கறைக்குரியவை அல்ல. அமெரிக்க மக்கள் தேசவெறி பிடித்து இராணுவத்தை ஆதரிக்க வேண்டும். இது மட்டுமே பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரும்புகிற விசயம்.

ஹாலிவுட் – இராணுவக் கூட்டணியின் அபாயம் என்ன?

பிரம்மாண்டமான பொழுதுபோக்கு ரசனையை திறமையுடன் உருவாக்கும் ஹாலிவுட், அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு போர்களுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்குகிறது. “அயர்ன் மேன், எக்ஸ்-மென், டிரான்ஸ்பார்மர்ஸ், ஜுராசிக் பார்க்” (Iron Man,’ ‘X-Men,’ ‘Transformers’ or ‘Jurassic Park III’) போன்ற படங்களில் ஏதோ வேடிக்கை காட்டுவதற்காக அமெரிக்க இராணுவம் பங்கேற்பதில்லை. அமெரிக்க மக்களை குறிப்பாக இளைஞர்களிடம் உளவியல் ரீதியாக இராணுவத்தை வழிபடும் மனநிலையை உருவாக்குகிறார்கள். இத்தகைய அப்பட்டமான வெறி யதார்த்த உலகில் பெரும் அழிவுகளையும் ஏற்படுத்துகிறது.

“கட்ஸ் அன்டு குளோரி” நூலின் ஆசிரியர் லாரன்ஸ் சூயிட், அல் – ஜசீராவிடம் கூறுவதைக் கேளுங்கள் (Lawrence Suid, author of “Guts and Glory”): “வியட்நாம் போரின் வரலாற்றை வகுப்பறையில் நான் பாடமாக நடத்தும்போது, நாம் எதற்காக வியட்நாமில் சிக்கிக் கொண்டோம் என்பதை என்னால் விளக்க முடியவில்லை. என்னால் விவரங்களையும், தேதிகளையும் கூற முடிந்தது. ஆனால் ஏன் என்ற கேள்விக்கு விடை கூற இயலவில்லை. திரைத்துறைப் படிப்பை முடித்து பட்டம் வாங்கும்போதுதான் நான் யோசித்துப்பார்த்தேன்.

ஒரு படத்தில் ஆபாசம் இருக்கிறதா, உண்மையா – பொய்யா, கலைப்பூர்வமான வெளிப்பாடு… இவையெல்லாம் இராணுவத்தின் அக்கறைக்குரியவை அல்ல.

தங்கள் நாடு ஒரு போரில் தோற்றிருப்பதாக அமெரிக்க மக்கள் ஒருபோதும் எந்த திரைப்படத்திலும் பார்த்ததே இல்லை என்ற உண்மை திடீரென்று அப்போதுதான் எனக்கு உரைத்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்சன், “நம்மால் வியட்நாமிற்கு சென்று வெல்ல முடியும்” என்று கூறிய போது, அமெரிக்க மக்கள் அவரை நம்பினார்கள். ஏனெனில் 50 வருடங்களாக அவர்கள் பார்த்த எல்லா சினிமாக்களிலும் அமெரிக்கா ஜெயிப்பதை மட்டுமே அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அமெரிக்க மூளையில் ஹாலிவுட் தடுப்பூசி

சூயிட் கூறுவது போல, தலைமுறை தலைமுறையாக அமெரிக்க மக்கள், இரண்டாம் உலகப் போரில் போது நார்மண்டி கடற்கரையில் இறங்கும் “தி லாங்கஸ்ட் டே” (‘The Longest Day’) திரைப்படத்தின் நாயகன் ஜான் வெயின் போன்றவர்களின் சாகசத்தை மட்டுமே பார்த்து வருகிறார்கள். அமெரிக்கா என்றாலே இரக்க குணம் கொண்ட நாயகன் என்ற பிம்பம் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. சந்தேகம் என்பதே அவர்கள் சிந்தனைக்குள் நுழைய முடியாத அளவுக்கு அமெரிக்கர்களின் மூளையில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர்கள் எவ்வித சந்தேகமும் இல்லாமல் அமெரிக்க இராணுவத்தின் சாகசங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இப்படி இராணுவத்தை விமர்சனமற்று விதந்தோதுவதால்தான் ஹாலிவுட்டின் பெருவெற்றிப் படங்கள் அமெரிக்க மக்களின் மனநிலையை மாற்றி, 2003 இராக் போர் போன்ற ஆக்கிரமிப்புகளை ஆதரிக்க வைக்கின்றன. இராக் ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் உளவியல் சூழலை உருவாக்கிய படங்கள்தான், ஸ்பில் பெர்க் இயக்கத்தில் வெளியான “சேவிங் பிரைவேட் ரியான்(1998)” (‘Saving Private Ryan’), ஜெர்டி பிரக்ஹெய்மர் தயாரித்த “பிளாக் ஹாவ்க் டவுண் (2001) (‘Black Hawk Down’)” போன்றவை. இத்தகைய படைப்பாளிகளைத்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது பெரும் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக கருதுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் தனது கொள்கை பிரச்சாரத்திற்காக டாம் கூரூஸின் பெருவெற்றி படமான “டாப் கன் (1986)”-ஐ (Top Gun ) ஆதரித்தது மற்றுமொரு சான்று. ப்ரூக் ஹைமரை தயாரிப்பாளராகக் கொண்ட இப்படம்தான் ஹாலிவுட் – அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கு ஒரு மைல் கல் எனலாம். அதே நேரம் போர் எதிர்ப்பு படங்களான “அப்போகலிப்ஸ் நவ், பிளாட்டூன், ஃபுல் மெட்டல் ஜாக்கெட்” (‘Apocalypse Now,’ ‘Platoon’ and ‘Full Metal Jacket,’) போன்றவை வியட்நாம் போரில் சிக்கிய அமெரிக்காவின் நெருக்கடியை சித்தரித்ததால் இராணுவம் இப்படங்களை கடுமையாக எதிர்த்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அமெரிக்க ஆதிக்கத்தை கொடியசைத்து கொண்டாடும் ரீகனுடைய அரசியலின் திரை வடிவம்தான் டாப் கன் திரைப்படம். பனிப்போர் காலகட்டத்தில், வியத்நாம் தோல்வியால் துவண்டிருந்த அமெரிக்க மனத்துக்கு போடப்பட்ட முறிவு மருந்துதான் டாப் கன் திரைப்படம்.

அமெரிக்க இராணுவத்தின் பெரிய அளவிலான உதவி இல்லாமல் “டாப் கன்” திரைப்படத்தை தயாரித்திருக்கவே முடியாது. அதனால்தான் இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய இத்திரைப்படம் இராணுவம் குறித்த மக்களின் ஆதரவை பெருமளவு உயர்த்தியது. அதன் விளைவாகவே 1991 வளைகுடா ஆக்கிரமிப்பு போரின் போது 85 சதவீத மக்கள் இராணுவத்தை ஆதரித்தார்கள்.

“டாப் கன்” காலத்திலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரச்சார எந்திரம், 72 சதவீத மக்களின் ஆதரவைப் பெறுவதை சாத்தியமாக்கியிருக்கிறது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களில் 12%, ஊடகங்களில் 24%, தேவாலயங்கள் 40% மட்டுமே இராணுவத்தை ஆதரிக்கின்றனர் என்ற நிலையில் பொது மக்களின் ஆதரவு இவை அனைத்தையும் விட அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

சித்திரவதைக்கு ஆதரவான சி.ஐ.ஏ. திரைப்படம்

இப்படியான போர் ஆதரவு வேலைகளை ஏதோ பாதுகாப்பு அமைச்சகம்தான் செய்கிறது என்பதல்ல. அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏ-வும் தனது இமேஜை உயர்த்திக் கொள்வதற்காகவும் வரலாற்றை திரிப்பதற்காகவும் இதைச் செய்கிறது.

சான்றாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சார்லி வில்சனின் போர் (charlie wilson’s war, 2007) என்ற பொய்களால் நிரம்பிய திரைப்படத்தைப் பயன்படுத்தி, ஆப்கான் முஜாகிதீன்களுடன் தான் கொண்டிருந்த கடந்த கால உறவை மறைத்துக் கொண்டு, மாவீரர்களாகத் அமெரிக்காவை சித்தரித்துக் கொண்டது சிஐஏ.

அதே போல சி.ஐ.ஏ உதவியுடன் 2012-ம் ஆண்டில் வெளிவந்த “சீரோ டார்க் தர்ட்டி” (‘Zero Dark Thirty’) என்ற படம், வரலாற்றை திரித்ததோடு, கைதிகளைச் சித்திரவதை செய்வதுதான் அவர்களிடமிருந்து தகவல்களைக் கறப்பதற்கான வழி என்று அமெரிக்க மக்களை நம்ப வைத்தது.

இந்தப் படத்தின் மூல வடிவம் 2001 முதல் 2010 வரை ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடர். “24” என்று பெயரிடப்பட்ட இந்த தொடருக்கும் சி.ஐ.ஏ-தான் உதவி செய்தது. எம்மி விருது பெற்ற “ஹோம்லாண்ட்” (‘Homeland,’) நிகழ்ச்சியும் சி.ஐ.ஏ புகழ் பாடியதோடு, சித்திரவதைகளையும் ஆதரித்தது. சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பெற்ற “ஆர்கோ”வின் கதையே (Argo – 2012) சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணியை அம்பலமாக்குவதுதான். இருப்பினும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுடனும் கூட்டு வைத்துக்கொண்டு, தங்களைப் பற்றிய வரலாற்று உண்மைகளை திரித்ததன் வாயிலாக சிஐஏ தனது இமேஜை பாதுகாத்துக் கொண்டது.

அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயர்ந்த ஜனநாயக நாடு என்றால், அதன் இராணுவமும், உளவுத் துறையும் எதன் பொருட்டு தனது குடிமக்களை திசை திருப்ப வேண்டும்? கலையின் பெயரால் உண்மைகளை ஏன் திரிக்க வேண்டும்? இதற்கான விடை தெரிந்ததுதான். அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயரிய ஜனநாயகம் என்று அமெரிக்க மக்களை நம்ப வைக்க வேண்டுமானால், இந்த பொய் பித்தலாட்டம் கலை கிராபிக்ஸ் எல்லாம் இருந்தால் மட்டும்தான் முடியும்!

வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வெளிவந்த பல படங்கள் சங்கடமான பல உண்மைகளைப் புலனாய்வு செய்து வெளியே கொண்டு வந்தன. “அப்போகலிப்ஸ் நவ், கமிங் ஹோம், தி டீர் ஹன்டர், பிளாட்டூன், ஃபுல் மெட்டல் ஜாக்கெட், மற்றும் பார்ன் ஆன் தி ஃபோர்த் ஜூலை (‘Apocalypse Now,’ ‘Coming Home,’ ‘The Deer Hunter,’ ‘Platoon,’ ‘Full Metal Jacket’ and ‘Born on the Fourth of July,’) போன்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்துமே அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியின்றி தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்பூக்கத்தை அழிக்கும் அமெரிக்க அதிகார வர்க்கமும் ஆதிக்கவெறி பிடித்த இராணுவ எந்திரமும் சேர்ந்து ஹாலிவுட்டின் கலையாக்க முயற்சிகளை தொட்டிலிலேயே மென்னியை நெறித்து விடுகின்றன. திரைப்படத் தயாரிப்பு தொழில் மேலும் மேலும் கார்ப்பரேட் மயமாகி வரும் இன்றைய நிலையில், குறைவான தயாரிப்பு செலவில் தனது படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது இயக்குநர்களுக்கு மாபெரும் சவாலாக மாறி வருகிறது.

இராக், ஆப்கன் போர் எதிர்ப்பு படங்கள் ஏன் இல்லை?

வியட்நாம் போருக்குப் பின் வெளிவந்த விமரிசன பூர்வமான திரைப்படங்கள் எதுவும் இராக் படையெடுப்பின் தோல்விக்குப் பின்னர் வரவில்லை. ஆப்கான் புதைகுழியில் மீளமுடியாமல் அமெரிக்கா சிக்கியிருப்பது குறித்தும் ஹாலிவுட் படங்கள் எதுவும் வரவில்லை.

பாதுகாப்புத்துறையால் அங்கீகரிக்கப்பட்டவையும், பொய்களின் அடிப்படையிலான தேசபக்தியால் மூளையை நிரப்புபவையும், போர் ஆதரவு குப்பைகளுமான “அமெரிக்கன் ஸ்நைப்பர் மற்றும் லோன் சர்வைவ்வர் (‘American Sniper’ and ‘Lone Survivor’) போன்ற படங்களைத்தான் கண்டோம்.

சிறந்த திரைப்படத்துக்கான விருதினைப் பெற்ற 2008 இல் வெளியான “தி ஹர்ட் லாக்கர் (‘The Hurt Locker’) என்ற திரைப்படம் ஒரு விதிவிலக்கு. மெசபடோமியாவில் (இராக்கில்) அமெரிக்கா நடத்திய தோல்வியுற்ற போர் குறித்த அசிங்கமான உண்மைகளை தைரியமாக சித்தரித்த அந்த திரைப்படம் பாதுகாப்புத் துறையின் உதவி இல்லாமல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ தொழிற் குழுமத்தின் செல்வாக்கிற்கு தெரிந்தோ தெரியாமலோ ஆட்படுவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி அதிபர் ஐசன்ஹோவர் அமெரிக்கர்களை முன்பு ஒரு முறை எச்சரித்திருந்தார்.

ஐசன்ஹோவர் தனது தொலைநோக்கான அந்த எச்சரிக்கையில் இராணுவ தொழிற்குழுமம் என்பதுடன் கேளிக்கை என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும்.

ஏனெனில் பாதுகாப்புத்துறை – சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணிதான் அமெரிக்க மக்களை அறிவே இல்லாத இராணுவ வெறி பிடித்த முட்டாள்களாக மாற்றியிருக்கிறது.

முடிவே இல்லாத ஒரு போர் ஆதரவு வெறிப்பிரச்சார சுழலில் அமெரிக்கா சிக்கியிருக்கிறது. பாதுகாப்புத்துறை – சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணி அமெரிக்க மக்களை இராணுவ வெறியர்களாக மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய அரசிடமிருந்தும் பொழுதுபோக்கு சாதனங்களிடமிருந்தும் மென்மேலும் இராணுவ சாகசத்தை எதிர்பார்க்கிறார்கள். அலசி துவைத்து காயப்போட்டு மீண்டும் மீண்டும் எத்தனை முறை அதே சரக்கையே கடை விரித்தாலும் பார்த்து மயங்கத் தயாராக இருக்கிறார்கள்.

வருங்காலத்தில் அமெரிக்கா நடத்தவிருக்கும் தோல்வியுறும் போர்களை மென்மேலும் அதிகமாக கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கும், உலகம் முழுவதும் பலகோடி மக்களின் மரணத்திற்கு உடந்தையாக இருப்பதற்கும் அமெரிக்க மக்களைப் பக்குவப்படுதுவதற்கு இராணுவ – சி.ஐ.ஏ. – ஹாலிவுட் பிரச்சாரக் கூட்டணி உத்திரவாதமளிக்கிறது.

மைக்கேல் மெக்காஃப்ரே, ரசியா டுடேயில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

மேலும் :

The Pentagon & Hollywood’s successful and deadly propaganda alliance